For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நானும் டாடாவும் ஒன்னா? மனசாட்சிக்கு 'டாட்டா' சொல்றாரே நெடுமாறன்: கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: போதுமான வசதி இல்லாத வீட்டில் வாழ்ந்து அந்த வீட்டைக் கூட பொதுமக்களின் மருத்துவமனைக்காக எழுதிவைத்திருக்கும் என்னைப் போய் டாடா, பிர்லாவுடன் ஒப்பிட்டு எழுதி பழ. நெடுமாறன் தனது மனசாட்சிக்கு டாட்டா காட்டிவிட்டாரே என்று திமுக தலைவர் கருணாநிதி புலம்பியுள்ளார்.

இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான ஏ.எம்.கோபுவின் மார்பளவு சிலையை அண்ணா அறிவாலயத்தில் திறந்துவைத்த கருணாநிதி, தாம் ஒரு கம்யூனிஸ்ட் என்று பேசியிருந்தார். இதை விமர்சித்து தினமணி நாளிதழில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதற்குப் பதிலளித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நான் கம்யூனிசக் கொள்கைகளில் சிறு வயதிலிருந்தே ஈர்க்கப்பட்டவன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பழ.நெடுமாறன் என்னுடைய கருத்துக்களை மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்த்து எழுதிய கட்டுரை ஒன்றினை ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தமிழக மக்கள் நான் யார் என்பதையும் அறிவார்கள், நெடுமாறன் எப்படிப்பட்டவர் என்பதையும் அறிவார்கள். நான் கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்படடவன் என்பதை இப்போது சொல்லவில்லை. கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்ட பல கூட்டங்களிலேயே அதைச் சொல்லியிருக்கிறேன். நான் கம்யூனிஸ்டா இல்லையா என்பதற்கு நெடுமாறனின் சான்றிதழை நான் கேட்டேனா?

நம்பூதிரிபாத், கே.டி.கே.தங்கமணி ஆகியோர் தங்கள் சொத்து முழுவதையும் கட்சிக்காக அளித்தவர்கள் என்றும், சிறைக் கொடுமைகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டவர்கள் என்றும் நெடுமாறன் உதாரணம் காட்டுகிறார். அவர்கள் அளவிற்கு நான் கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்ள முன் வராவிட்டாலும், என்னால் முடிந்த அளவிற்கு ஏழை மக்களுக்காகத் தொடர்ந்து தொண்டாற்றியிருக்கிறேன்.

எனக்கு இருக்கும் ஒரே சொத்தான வீட்டைக் கூட நான் மக்களுக்காக எழுதிக் கொடுத்து விட்டேன். எனக்கென்று எந்த எஸ்டேட்டுகளையும், மாட மாளிகைகளையும் சம்பாதித்தவன் இல்லை. கழக நிகழ்ச்சிகளில் எனக்குத் தனிப்பட்ட முறையிலே வழங்கிய அனைத்துப் பொருள்களையும் கழகத்திற்காக நான் வழங்கி, அவ்வளவும் இன்றையதினம் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பதை யாரும்காணலாம். பாளையங்கோட்டை தனிமைச் சிறையிலே இருந்தவன்தான் நான். எந்த விதமான ஆடம்பர வாழ்வையும் நான் எப்போதும் மேற்கொண்டவன் இல்லை.

அம்பானி, டாடா, பிர்லா போன்ற பெரு முதலாளிகளுடன் கருணாநிதி தன்னை ஒப்பிடுவது தான் பொருத்தமானது என்கிறார் நெடுமாறன். அம்பானி, டாடா, பிர்லா போலவா கருணாநிதி வாழ்க்கை நடத்துகிறார் என்பதைத் தமிழ்நாட்டு மக்களே நீங்கள்தான் கூற வேண்டும்!

ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்திருக்கிறேன். 1957-ம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் தோற்காமல் வெற்றி பெற்றிருக்கிறேன். 75 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றளவும் மாட மாளிகை போன்றதொரு வீட்டைக்கூட நான் குடியிருப்பதற்கு வாங்கிக் கொண்டவனல்ல.

பதவிக்கு வராததற்கு முன்பு நான் வாங்கிய தெரு வீடு என்று சொல்வார்களே, அதே வீட்டிலேதான் உதவியாளர்கள் உட்கார்ந்து பணியாற்றிடக்கூடப் போதிய வசதி இல்லாத நிலையிலேதான் இன்றளவும் வாழ்ந்துவருகிறேன்.

ஆனால் இரக்கமில்லாமல் என்னை டாடாவோடு நெடுமாறன் ஒப்பிடுகிறார் என்பதை நினைக்கும்போது அவர் தனது மனசாட்சிக்கு டாட்டா கொடுத்து விட்டாரே என்றெண்ணி, வேதனைதான் எனக்கு ஏற்படுகிறது.

பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கி போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கியது கம்யூனிசத்திற்கு விரோதமானதா? பதினைந்து ஏக்கர் உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது கம்யூனிசத்திற்கு எதிர்ப்பானதா? என்னுடைய மகன்களில் ஒருவருக்கே ஸ்டாலின் என்று இப்போதல்ல; அறுபதாண்டுகளுக்கு முன்பே பெயர் சூட்டிய என்னைப்பார்த்து, கம்யூனிசத்திற்கு ஆதரவாக எப்போதாவது கருணாநிதி நடந்து கொண்டதுண்டா என்று நெடுமாறன் கேட்கிறார்என்றால்; அவர் எந்த அளவிற்குத் தனது அறிவை அடமானம் வைத்து விட்டார் என்றல்லவா கேட்பார்கள்.

மாநிலங்களவை உறுப்பினர்களாக டி.கே. ரெங்கராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும், டி. ராஜா இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்ததும் என் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று அதில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

English summary
DMK leader Karunanidhi said in a statement, Pazha. Nedumaran's comparsion of me and TATA is wrong on yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X