For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடு மாடு போல அடிமைத்தொழில்... உயிர்போனாலும் கேள்வியில்லை... வட இந்திய தொழிலாளர்கள் அவலம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: புலம் பெயர்தல் என்பது சொந்த மண்ணை விட்டு பணம் சம்பாதிப்பதற்காக செல்வது ஒருவகை. நாடு இழந்து, நகரம் இழந்து அகதிகளாக வேறு நாட்டிற்கு புலம் பெயர்வது மற்றொரு வகை.

தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு கட்டுமானப் பணியிலும், பனியன் நிறுவனங்களிலும், கடினமான தொழில்களைச் செய்யும் தொழிற்சாலைகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். எத்தனை லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு உள்ளனர் என்றால் அதற்கு சரியான கணக்கெடுப்பு எதுவும் இல்லை. ஆனால் தோராயமாக 10 லட்சம் முதல் 12 லட்சம் தொழிலாளர்கள் வரை தமிழ்நாட்டிற்குள் கூலித் தொழிலாளர்களாக வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

பீகார், ஒடிஸ்ஸா, அஸ்ஸாம் மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் கட்டடப் பணியிலும், கிரானைட் குவாரிகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள், பட்டாசுத் தொழிற்சாலைகள், பனியன் தொழிற்சாலைகள் போன்றவைகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். சொந்த மண்ணை விட்டு தமிழகத்திற்கு வரும் அவர்களுக்கு சரியான பாதுகாப்பு இருக்கிறதா? என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி.

அடிமையாக வரும் தொழிலாளர்கள்:

அடிமையாக வரும் தொழிலாளர்கள்:

தமிழ்நாட்டில் இருந்து முன்பெல்லாம் வட மாநிலங்களுக்கு முறுக்கு கம்பெனி, செங்கல் சூளை, போன்ற தொழிற்சாலைகளுக்கு கொத்தடிமைகளாக வேலைக்குப் போன காலம் இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாகிவிட்டது.

ஒடிஸ்ஸா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் ஒப்பந்தாரர்கள் படிப்பறிவில்லாத, ஏழ்மையான நிலையில் இருப்பவர்களின் வீடுகளுக்குச் சென்று 10,000 ரூபாய் கொடுத்து அந்த வீட்டில் உள்ள சிறுவனை தமிழ்நாட்டில் பணிக்கு அழைத்து வருகிறார். அந்த பணத்திற்கு ஈடாக 6 மாதம் வேலை வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுகிறாராம்.

குறைந்த ஊதியம் அதிக வேலை:

குறைந்த ஊதியம் அதிக வேலை:

வட மாநிலங்களிலிருந்து வேலைக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை வாங்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. மிக மோசமாக சுரண்டப்படக்கூடிய ஒப்பந்தத் தொழிலாளர்களாக அவர்கள் உள்ளனர் என்பதே வேதனை. அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உதவி செய்வதற்கு கூட ஆள் இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு விபத்து பாதுகாப்பு ஏற்படுத்த, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சுரண்டப்படும் உழைப்பு:

சுரண்டப்படும் உழைப்பு:

இவர்கள் அதிகமாக கட்டுமானப் பணியில் தான் ஈடுபட்டுள்ளனர். தமிழக தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு, 500 ரூபாய் சம்பளம் கேட்கின்றனர். வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு, 250 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கின்றனர். பணி நடக்கும் இடங்களிலேயே தங்க வைக்கப்படுவதால், அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர்.

இடைத்தரகர்கள்:

இடைத்தரகர்கள்:

வட மாநிலங்களிலிருந்து கட்டுமானப்பணிக்கு தொழிலாளர்களை அழைத்து வர ஏராளமான இடைத்தரகர்கள் உள்ளனர். பீகார், ஒடிஸ்ஸா, அஸ்ஸம் போன்ற மாநிலங்களில், போதிய அளவு வேலை இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு வரும் இவர்கள் பெரும்பாலும், 20 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்களை அழைத்து வந்து ஆடு, மாடுகள் போல் கொட்டடிகளில் தங்க வைக்கின்றனர்.

அடிப்படை வசதி இல்லை:

அடிப்படை வசதி இல்லை:

இந்தியாவில் மற்றொரு மாநிலத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் பணிபுரியும் இடத்தில் கேவலமாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அடிப்படையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. வசிப்பிடங்கள் தகரம் வேய்ந்த கூரைகளில் அமைக்கப்படுகின்றன. கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்வது இல்லை. அடையாள அட்டை எதுவும் வழங்கப்படுவதில்லை. பணியின்போது இறந்தால், நிவாரணம் கிடைக்க, காப்பீடு செய்வதில்லை. மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்வது இல்லை.

மரணம் ஏற்பட்டாலும்...

மரணம் ஏற்பட்டாலும்...

ஒப்பந்த தொழிலாளர்களின் அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. எவ்வித அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இல்லாமல் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தாலும் எந்தவித கேள்வியும் இல்லை.

மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். கீழ்ப்பாக்கம், அசோக் நகர், கோயம்பேடு, பரங்கிமலை ஆகிய 4 இடங்களில் இதுவரை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் கோயம்பேட்டில் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. மற்ற 3 சம்பவங்களில் வடமாநில வாலிபர்கள் பலியாகியுள்ளனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி கட்டுமானப்பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலியானதும் வடமாநிலத் தொழிலாளர்கள்தான்.

இலவச அரிசியும் நூறு நாள் வேலையும்...

இலவச அரிசியும் நூறு நாள் வேலையும்...

தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்ட பின்னர் கூலி வேலைக்கு போக வேண்டும் எண்ணம் பெரும்பாலான மக்களிடம் குறைந்து போய்விட்டது. தவிர நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் எப்படியாவது 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கிடைத்துவிடுகிறது. இதனால் விவசாயக் கூலியாகவோ, கட்டுமானக் கூலியாகவோ போகக்கூட விரும்புவதில்லை. இதனாலேயே வட மாநிலத்தில் இருந்து குறைந்த கூலிக்கு வேலைக்கு அழைத்து வருகின்றனர் ஒப்பந்ததாரர்கள்.

பட்டாசு தொழிற்சாலை விபத்து:

பட்டாசு தொழிற்சாலை விபத்து:

ஒசூரில் மட்டும் 30,000 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனராம். இவர்களில் பெரும்பாலோனோர் விரல் இழந்து, கை, கால்கள் ஊனமடைந்த நிலையிலும் வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தொழிற்சங்கமோ, பாதுகாப்போ இல்லாததுதான் வேதனையின் உச்சம். இதேபோல் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் வட மாநிலத்தவர்கள்தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

திருப்பூரில் அதிகம்:

திருப்பூரில் அதிகம்:

திருப்பூரில் உள்ள பனியன் மற்றும் அது சார்ந்த தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களில் 80 சதவீதம் பேர் வெளியூர் மற்றும் வெளிமாநில மக்கள். முன்பெல்லாம் மதுரை, நெல்லை என்று தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வேலை தேடி தொழிலாளர்கள் அதிக அளவில் திருப்பூரை நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போதோ இந்தியாவின் வறுமை மாநிலங்களான பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிஸ்ஸா, மேற்கு வங்காளம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து திருப்பூரை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

வெளிநாட்டிலும் விபத்து:

வெளிநாட்டிலும் விபத்து:

இலங்கையில் இயங்கும் சில இந்திய நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை கொண்டு சென்று அடிமட்ட சம்பளத்திற்கு வேலைவாங்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கூடுதல் சம்பளம் வழங்குவதாக ஆசைகாட்டி வட இந்தியாவிலிருந்து இவ்வாறான தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டு, மிகுந்த அடிமட்ட சம்பளத்துக்கு மிக மோசமாக தங்குமிட வசதிகளுடன், வேலை வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு வேலைக்குப் போன தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.

அரசு என்ன செய்யப் போகிறது?:

அரசு என்ன செய்யப் போகிறது?:

தொழிலாளர் நலவாரியத்தில் இவர்கள் பதிவு செய்யப்பட்டு தக்க பாதுகாப்பு அளிக்கவேண்டும் என 2010ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் இன்றைக்கு வரைக்கும் அது நடைமுறைப் படுத்தப்படவில்லை. பதிவு செய்யப்படாத ஒப்பந்தகாரர்களிடம் இவர்கள் பணி செய்வதால் 1979ம் ஆண்டு இயற்றப்பட்ட மாநிலங்களுக்கு இடையே புலம் பெயர்ந்த தொழிலாளிகள் சட்டத்தின் பாதுகாப்பும் இவர்களுக்கு இல்லை. தங்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பதே தமிழக அரசிடம் அப்பாவி வட மாநில தொழிலாளர்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

English summary
North Indian laborers are reeling under worst livelihood in Tamil Nadu in various works. They face lots of hurdles but there is no respite for them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X