For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னைக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் திறந்துவிட ஆந்திராவுக்கு தமிழகம் கோரிக்கை

By Chakra
Google Oneindia Tamil News

Krishna canal
சென்னை: கிருஷ்ணா நதி நீர் பகிர்வு குறித்து தமிழக-ஆந்திர தலைமைச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. 6 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதில், கண்டலேறு அணையில் இருந்து சென்னை பூண்டி ஏரிக்கு 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியது.

சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி.

சென்னை மாநகர் பகுதிகளில் தினமும் குழாய் மற்றும் லாரிகள் மூலமாக மொத்தம் 767.41 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதுதவிர, தொழிற்சாலைகள், வணிக வளாகங்களுக்கு 63.78 மில்லியன் லிட்டர் வினியோகிக்கப்படுகிறது. ஆக மொத்தம் தினமும் 831.19 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந் நிலையில், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் குறைவாகவே இருப்பதால், இந்த நீரைக் கொண்டு அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மட்டுமே சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால், ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்படும் கிருஷ்ணா நதி நீரைத்தான் சென்னை நம்பி உள்ளது.

தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 3.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டு உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஆந்திராவில் கனமழை பெய்தபோது காளஹஸ்தி அருகே உப்பளமடுகு என்ற இடத்தில் கிருஷ்ணா நீர் கால்வாயில் மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மதகுகளை விரைந்து சீரமைத்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா அப்போது கடிதம் எழுதினார். இதையடுத்து ரூ.49 லட்சம் செலவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிமெண்டு குழாய் மூலம் கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டது. தற்போது வினாடிக்கு 129 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

இந் நிலையில் கிருஷ்ணா நீர் வாய்க்காலில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதியைச் சீரமைக்க ஆந்திர அரசு ரூ.6 கோடியே 70 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த பணியை அடுத்த 5 மாதங்களுக்குள் முடித்து, கால்வாயில் முழு கொள்ளளவான வினாடிக்கு ஆயிரம் கன அடி அல்லது வினாடிக்கு 500 கன அடியாவது தண்ணீர் திறந்துவிட்டால்தான் சென்னை மாநகரின் தினசரி குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால்தான், கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த அழைப்பை ஆந்திரா அரசு ஏற்றுக்கொண்டது. அதன்படி, சென்னை கோட்டையில் இன்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ஆந்திரா மாநில தலைமை செயலாளர் மினி மேத்யூ ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், இரு மாநிலங்களின் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் கீழ்க்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:

ஆந்திர-தமிழக மாநிலங்களுக்கிடையே 18.4.1983 அன்று உருவாகிய ஒப்பந்தப்படி, சென்னை மாநகரத்தின் குடிநீர்த் தேவைக்காக கண்டலேறு நீர்த் தேக்கத்திலிருந்து ஆண்டுதோறும், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டிஎம்சி தண்ணீரும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டிஎம்சி தண்ணீரும் திறந்து விடப்பட வேண்டும்.

கண்டலேறு நீர்த்தேக்கத்தின் மொத்த நீர்க் கொள்ளளவான 58.6 டி.எம்.சி. அடிக்கு, இன்றைய தேதியில் (19.01.2013) 17.60 டி.எம்.சி. அடி அளவில் நீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா கால்வாயின் கொள்ளளவான வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீருக்கெதிராக, கண்டலேறு-பூண்டி கால்வாயில், உப்பளமடுகு அருகில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக, தற்போது சராசரியாக வினாடிக்கு 150 கன அடி என்ற அளவிலேயே தமிழக எல்லையில் நீர் வரத்து உள்ளது.

இந்த உடைப்பின் காரணமாக, சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக, மாற்று ஏற்பாடாக, குழாய்களின் மூலமாக, ஆந்திர அரசு தண்ணீர் அளித்து வருகிறது. இக்கால்வாய் உடைப்பினை விரைவில் சீரமைக்க ஆந்திர அரசைக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் வந்து சேர வேண்டிய 12 டி.எம்.சி அடிக்கு பதிலாக 3.90 டி.எம்.சி அடி தண்ணீர் மட்டுமே இது வரை வந்து சேர்ந்துள்ளது. ஒப்பந்தப்படி, 12 டி.எம்.சி அடி தண்ணீர் எவ்வித தடையுமின்றி தமிழ்நாடு எல்லையில் வந்து சேரும் வகையில், காளஹஸ்திக்கு அருகில் உள்ள உப்பளமடுகு பகுதியில், நிரந்தர சீரமைப்புப் பணியினை கோடை காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டுமென்றும் தேவைப்படின் அதற்கான உதவிகளை தமிழ்நாடு அரசு அளிக்க முன் வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கண்டலேறு நீர்த் தேக்கத்தில் தற்போது போதுமான அளவு நீர் இருப்பு உள்ள நிலையில், அக்டோபர் 2013 வரை எவ்வித தடையுமின்றி, தொடர்ந்து தண்ணீர் அளிக்கப்பட வேண்டும் எனவும், இதன் மூலம் 2012- 2013ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் பெற வேண்டியதில், எஞ்சியுள்ள 8.24 டி.எம்.சி அடி நீர் மற்றும் 2013 -2014ம் ஆண்டில் அளிக்கப்பட வேண்டிய 12 டி.எம்.சி அடி தண்ணீர் ஆகியவற்றை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

கண்டலேறு நீர்த் தேக்கத்திலிருந்து வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் விடுவிக்கப்பட்ட போதிலும், தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் வினாடிக்கு 150 கன அடி என்ற அளவிலேயே நீர் வரத்து உள்ளது. ஆந்திர எல்லைப் பகுதிக்குள் அனுமதியின்றி நீர் எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக, தமிழக எல்லையில் குறைந்த அளவிலேயே நீர் வந்தடைகிறது. எனவே, அனுமதியின்று நீர் எடுக்கப்பட்டு வருவதை கட்டுப்படுத்துமாறும் மற்றும் குறைந்தபட்சமாக வினாடிக்கு 350 கன அடி வரையில் தமிழக எல்லைப் பகுதியில் நீர் வந்து சேருவது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபடி, கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான செயலாக்க விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டும்.

இரு மாநிலங்களுக்கிடையே, 18.4.1983 அன்று ஏற்பட்ட ஒப்பந்த ஷரத்துப்படி, கண்டலேறு நீர்த் தேக்கத்திலிருந்து ஆண்டு தோறும் வழங்கப்படவேண்டிய நீரில், குறிப்பாக கோடை காலத்தில் அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்கள் வரையில் நீர் வழங்குவதற்கு ஏதுவாக 5 டிஎம்சி அடி அளவுக்கான நீரைத் தேக்கி வைத்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
After months of agony over dwindling Krishna water supply to the city, there now appears to be a ray of hope. Senior officials, led by chief secretaries of Tamil Nadu and Andhra Pradesh governments, are meeting today to discuss ways to ensure continued supply of Krishna water to Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X