For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கப்பா! அதிரடி மோசடிகள்… ஏமாறும் அப்பாவிகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பூர்: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பைனான்ஸ் கம்பெனியில் பணத்தை போட்டு ஏமாந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது புதிது புதிதாக முதலீடுகளைப் பெற்று ஏமாற்றுகின்றனர். கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட மக்களை குறிவைத்து நடைபெறும் இந்த மோசடியில் சுருட்டப்படுவது என்னவோ பல ஆயிரம் கோடி ரூபாய்கள். சில மாதங்கள் நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் ப்ளாஸ் நியூஸ்களில் அடிபடும் இந்த மோசடிகள் சத்தமில்லாமல் அடங்கி பின்னர் மறக்கப்பட்டு விடும்.

இந்த மோசடிகளில் ரிஷி மூலம் நதி மூலத்தை தோண்ட ஆரம்பித்தால் இப்படி எல்லாமா ஏமாத்துவார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும். அதேசமயம் எவ்வளவு ஏமாத்துனாலும் தாங்குறாங்களே என்று கோபமாகவும் இருக்கும்.

அடுத்த மோசடிகளைப் பற்றி வெளியே தெரியும் வரை இவற்றை மறந்துவிட்டு சாதாரணமாக வேலையைப் பார்க்கும் திருவாளர் அப்பாவி ஜனங்கள், திடீரென்று யாராவது விளம்பரம் கொடுத்தால் ஓட்டம் ஓட்டமாக ஓடிப்போய் பணத்தை கட்டுவார்கள். அப்புறம் வழக்கம் போல ஏமாந்து போவார்கள். இப்படி எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை ஏமாந்துவிட்டு யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக இருக்கிறார்கள் தெரியுமா?.

டிராப்டை காட்டு…. பணத்தைப் போடு

டிராப்டை காட்டு…. பணத்தைப் போடு

திருப்பூர் பகுதியில் எனக்கு தெரிந்து சொந்த பந்தங்கள் ஏமாந்த முதல் மோசடி டிராப்ட் மோசடிதான். 2000 ம் ஆண்டில் 3000, 5000 அடங்கிய டிராப்டை ஜெராக்ஸ் எடுத்து லேமினேட் செய்து வைத்துக்கொண்டு வரிசையாக ஆள் பிடிப்பார்கள். 3ஆயிரம் கட்டுங்கள் அவர்களுக்கு கீழே ரெண்டு பேர் அந்த ரெண்டு பேருக்கு கீழே இரண்டிரண்டு பேர் என தொடர்ச்சியாக ஆள் சேர்க்கச் சொல்லுவார்கள். அவர்கள் சேர்த்து விடும் ஆட்களைப் பொருத்து கமிஷன் தொகை டிராப்ட் ஆக வரும் என்று ஆசை வார்த்தை கூறி ஆள் சேர்ப்பார்கள். அதான் கமிஷன் வருகிறதே என்ற ஆசையில் நகையை அடகு வைத்து பணம் கட்டியவர்களும் இருக்கின்றனர். அப்புறம் என்ன பணத்தை மொத்தமாக வசூல் செய்த கும்பல் ஆட்டையை போட்டுவிட்டு அம்பேல் ஆகிவிட்டது.

ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி

ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி

2008-2009-ம் ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தை அதிரவைத்த மோசடி எதுவெனில் அது பாசி நிறுவன மோசடிதான். பாசி நிதி நிறுவன இயக்குனர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகிய மூன்று பேர்தான் இதன் சூத்திரதாரிகள். முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகர திட்டத்தை அறிவித்தனர். இதனை நம்பி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 48 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ. 1,600 கோடி திரட்டினர். அப்புறம் வழக்கம் போல ஏப்பம்தான்... தலைமறைவுதான்.... அப்புறம் என்ன ஏமாந்த நபர்கள் வழக்கம் போல புகார் கொடுக்கவே இப்போது மூவரும் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இந்த மோசடியில் காவல்துறை உயரதிகாரர்கள் கூட ஈடுபட்டுள்ளனர் என்பதுதான் கொடுமை.

ஈமு கோழி மோசடி

ஈமு கோழி மோசடி

பாசி நிறுவன மோசடி தெரிந்த பின்னராவது மக்கள் சுதாரித்திருக்கலாம். ஆனால் அப்புறம்தான் அதிகம் ஏமாந்தார்கள். பருவமழை பொய்த்துப்போய் காடு கழனிகளை விற்றுவிடலாமா என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்பொழுது அதிரடியாக கவர்ச்சிகரமாய் கண்ணில் பட்டது ஈமு கோழி விளம்பரம். ஈமு இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன் என நடிகர், நடிகையர்கள் எல்லாம் விளம்பரம் செய்யவே எதிர்கேள்வி கேட்காமல் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டினார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்னவே சில ஈமு கோழிகள் மட்டுமே. 500 கோடிக்கு மேல் பணம் திரளவே ஆட்டையை போட்ட கும்பல் ஈமு கோழிகளை விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். பாவம் கோழிகள் தான் இப்போது கண்களை உருட்டி உருட்டி அப்பாவியாய் விழித்துக்கொண்டிருக்கின்றன.

நாட்டுகோழியும் தப்பவில்லை

நாட்டுகோழியும் தப்பவில்லை

ஈமு கோழியை வைத்து மட்டும்தான் ஏமாற்ற முடியுமா? நாட்டுகோழி வளர்ப்பிலும் ஏமாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளனர் மோசடி மன்னர்கள். பணத்தை முதலீடு செய்யுங்கள் நாட்டுக்கோழி பண்ணை வைத்துத் தருகிறோம்... தீவனம் தருகிறோம்... மாதந்தோறும் போனஸ் தருகிறோம் என்று கூறி பணத்தை வசூல் செய்தனர் எண்ணி 6 மாதங்களில் இழுத்து மூடிவிட்டு போய்விட்டனர்.

ஆடு வளர்ப்பு அம்பேல்

ஆடு வளர்ப்பு அம்பேல்

இதே முறையில்தான் ஆடுவளர்ப்பிலும் பணத்தை வசூல் செய்தனர். அப்புறம் என்ன எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்ற ரீதியில் பணத்தை கட்டியவர்கள் கடைசியில் ஏமாந்துதான் போனார்கள். இதை விட ஒரு கொடுமை கொப்பரை தேங்காய் மோசடிதான். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் தேங்காய்களை கொடுப்போம். அதை கொப்பரைகளாக மாற்றி கொடுங்கள். பணம், போனஸ் தருவோம் என்று கூறி வசூலித்து ஏமாற்றிய மோசடி மன்னர்கள் இருக்கின்றனர்.

மெழுகுவர்த்தி உருகிப்போச்சு….

மெழுகுவர்த்தி உருகிப்போச்சு….

மெழுகுவர்த்தி பிஸினசில் முதலீடு செய்யுங்கள் என்று கூறி விளம்பரம் வந்தது. விடுவார்களா நம்மக்கள் 10000 ரூபாயை சுளையாக கட்டினார்கள். அப்புறம் என்ன அவர்களுக்கு மெழுகு மற்றும் உபகரணங்கள் 2000 ரூபாய்க்கு கிடைத்தது. மெழுகு செய்து கொடுத்தால் தொழிலாளிகள் செலவோடு பெற்றுக்கொள்வோம் என்றும், முதலீடு திரும்ப கிடைக்கும் என்று கூறினார் திருவாளர் மோசடி மன்னர். இதை நம்பி பணத்தை போட்டவர்களுக்கு கடைசியில் பட்டை நாமம்தான் மிஞ்சியது. இப்போது அதே ரீதியில் கோவையில் ஜரூராக கடை விரித்துவிட்டார் மோசடி மன்னர். ஆனால் போலீஸ்தான் கண்டு கொள்வதில்லை.

பைன் பியூச்சர் ரூ.32000 கோடி மோசடி

பைன் பியூச்சர் ரூ.32000 கோடி மோசடி

கோவை பீளமேடு பகுதியை தலைமையிடமாக கொண்டு பைன் ப்யூச்சர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. பெஸ்ட்வே, குட்வேஸ், பைன் இண்டியா உள்ளிட்ட பல பெயர்களில் 25 சதவீத வட்டி தருவதாக கூறி ஏராளமான பொதுமக்களிடமிருந்து ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு வசூல் செய்தனர். இந்நிறுவன உரிமையாளர்களான கோவையை சேர்ந்த செந்தில், விவேக் ஆகியோர் முதலில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை சிங்கப்பூர்,மலேசியா, அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்று பரவசப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து இந்த நிறுவனத்தில் மேலும் பலரை சேர்த்து விட்டால் அதற்கு தனியாக கமிஷன் தருவதாகவும் கூறி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை பரிசாக அளித்துள்ளனர். இதனை நம்பி ஏஜெண்டுகள் பல கோடி ரூபாய்களை வசூலித்து கொடுத்துள்ளனர். கடைசியில் வழக்கம் போல முதலீட்டாளர்கள் ஏமாந்துதான் போனார்கள்.

ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை

ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை

கடந்த 2009 செப். 16ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் மோசடி மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவன பட்டியலை வெளியிட்டது. அதில் பைன் இண்டியா சேல்ஸ் நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது. எனவே பொதுமக்களும், வங்கிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பணத்தை கட்டி ஏமாந்து நிற்கின்றனர் அப்பாவி பொதுஜனங்கள்.

இப்படியும் ஏமாத்தறாங்க…

இப்படியும் ஏமாத்தறாங்க…

இந்த முதலீடு மோசடிகளாவது பராவாயில்லை போல கிரானைட் நில மோசடி, காலேஜ் பாட்னர் மோசடி என புதுப்புது மோசடிகளை தொடங்கியுள்ளனர். அதேபோல் பில்கேட்ஸ்க்கு(!) சாப்ட்வேர் புரோக்கிராம் அனுப்ப போறோம். கம்யூட்டர் படித்தவர்கள் தேவை என்று விளம்பரம் செய்து அப்ளை செய்தவர்களிடம் ஆளுக்கு ஒரு லட்சம் வசூல் செய்தனர். அது 7 கோடி ரூபாய் வரை தேரவே அப்புறம் என்ன வழக்கம் போல எஸ்கேப்தான்.

போலீஸ் வேலைக்கு ஆள் தேவை

போலீஸ் வேலைக்கு ஆள் தேவை

எல்லாவற்றையும் விட எக்குதப்பான மோசடி இதுதான். மத்திய அரசின் விலங்குகள் பாதுகாப்பு பிரிவுக்கு ஆள் எடுப்பதாக கூறி கான்ஸ்டபிள் வேலைக்கு 4 லட்சம், இன்ஸ்பெக்டர் வேலைக்கு 6 லட்சம் வசூலித்து பல கோடி சுருட்டிய கிங்கர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி.. போலீசாரின் கையால் பரிசு என அசத்தி தமிழ்நாடு முழுவதும் பல கோடி சுருட்டிய அந்த மோசடி மன்னர்கள் இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

கொங்கு மண்டலம் மட்டும் ஏன்?

கொங்கு மண்டலம் மட்டும் ஏன்?

தொழில் ரீதியாக வளர்ந்த நகரங்களான கோவை, திருப்பூர், கரூர்,சங்ககிரி, நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பணப்புழக்கம் அதிகம். இதுதான் மோசடி நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. கவர்ச்சியான விளம்பரம், நடிகர், நடிகையர்களின் வருகை.. போன்றவை முதலீட்டாளர்களை சுண்டி இழுக்கின்றன. இதுவே ஏமாறுபவர்களுக்கு சாதகமான அம்சங்களாக போய்விடுகிறது. இந்த மோசடி பேர்வழிகளை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் கொங்கு மண்டலத்தில் இன்னும் புதுப்புது மோசடிகள் உருவாகிக்கொண்டுதான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

English summary
There are many ways to cheat. But the people are ready to be chated in any way. Here is a round up on the various kind of cheatings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X