For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி: ஏ.கே. அந்தோணி பேச்சுக்கு வைகோ கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்போம் என்று கூறியுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள், குழந்தைகள், தாய்மார்கள் உட்பட அனைவரையும் ஈவு இரக்கமின்றி சிங்கள இராணுவம் கொடூரமாகப் படுகொலை செய்தது. தமிழ் இனப் படுகொலையைச் சிங்கள இராஜ பக்சே அரசு நடத்தியதில் கூட்டுக் குற்றவாளிதான் காங்கிரசுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகும். திட்டமிட்டே இந்தத் துரோகத்தை இந்திய அரசு செய்தது.

தமிழர்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த சிங்கள அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குத் திரும்பத் திரும்ப அழைத்து வந்து சிவப்புக் கம்பள வரவேற்பையும் கொடுத்தது. தமிழர்கள் இதயத்தில் சூட்டுக்கோலைத் திணிப்பதுபோல், சிங்கள விமானப்படைக்குத் தாம்பரத்தில் பயிற்சியும், இராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரி, வெலிங்டனில் பயிற்சியும் கொடுத்தது.

தமிழ் ஈழத்தில் இன்றும் சிங்கள இராணுவம் கொடுமை செய்து வருகிறது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்.

இத்தனைக்குப் பிறகும் சிங்கள இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்போம் என்று அந்தோணி ஆணவமாகப் பேசுகிறார் என்றால், அது அவரது தனிப்பட்ட குரல் அல்ல. சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரஸ் தலைமை தாங்கும் அரசின் கொக்கரிக்கும் ஓங்காரக் குரல். இதன் மூலம் மத்திய அரசின் துரோக முகம் மேலும் அம்பலப்படுகிறது.

தியாகச் சுடர் முத்துக்குமார் உள்ளிட்ட பதினெட்டு வீரத் தியாகிகள் தமிழ் நாட்டில் தங்கள் மேனியை - உயிரை எரித்துக் கொண்ட நெருப்பு, தமிழர் நெஞ்சில் என்றும் அணையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

இலங்கைக்கு பயிற்சி தருவோம் -அந்தோணி உறுதி

முன்னதாக, இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி தருவது குறித்து சும்மா சும்மா தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் பேசியிருந்தார். ஆனால் அவரது இந்தக் கருத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, அதேசமயம், இலங்கைப் படையினருக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு பெரீஸ் இந்தியா வந்திருந்தார். டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத்துடன் பேச்சு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது, தமிழக அரசியல் தலைவர்கள், இந்தியாவில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை சும்மா, சும்மா குறை சொல்வதும், கண்டனம் தெரிவிப்பதும் சரியல்ல என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியிடம் செய்தியாளர்கள் நேற்றுகேட்டபோது, இலங்கை தமிழர்களுக்காக அந்த அரசு சில மறுவாழ்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அந்த மறுவாழ்வு பணிகள், தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகள் முதலியன எதிர்பார்த்தபடி விரைவாக நடைபெறவில்லை.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவிப்பதை, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிஸ் குறை கூறி உள்ளார். அவரது கருத்தில், குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு, தமிழக அரசியல் தலைவர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது அவசியம். அதனால்தான், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்காமல், வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆனால், ஏற்கனவே இலங்கையிடம் ஒப்புக்கொண்டபடி, அந்த நாட்டு ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும். இலங்கை நமது அண்டை நாடு. ஆகவே அவர்களுடனான உறவு தொடர்ந்து நீடிக்க வேண்டியதும் அவசியம் என்றார் அந்தோணி.

English summary
MDMK chief Vaiko has condemned the comment of defence minister A K Antony on the training of Lankan defence personnel in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X