For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரைப்பட தணிக்கைக் குழுவைச் சீரமைக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

Google Oneindia Tamil News

Thirumavalavan
சென்னை: விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சனையை முன்வைத்து திரைப்பட தணிக்கைக் குழுவைச் சீரமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் சமூகச் சிக்கலாக இப்போது உருமாறியிருக்கிறது. படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளும், படத்தை அனுமதிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் போன்ற திரைப்படக் கலைஞர்களும் பேசி வருகின்றனர். இதனால் தமிழ்ச் சமூகத்தை மத அடிப்படையில் பிளவுபடுத்தக்கூடிய ஆபத்து உருவாகியிருக்கிறது. எனவே, தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்.

கமல்ஹாசன் அவர்கள் இந்தியாவிலிருக்கின்ற சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனால் அவருக்குக் கூடுதல் சமூகப் பொறுப்பு உள்ளது. திரைப்படத்தின் தாக்கம் எத்தகையது என்பதை நன்கு அறிந்த அவர், ஒரு திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும்போது வணிக நோக்கைவிட சமூக நோக்கைக் கூடுதலாகக் கொண்டு உருவாக்க வேண்டும்.

இந்தத் திரைப்படம் இஸ்லாமிய சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கிறது என்ற குற்றச்சாட்டை தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இருக்கின்ற இஸ்லாமிய அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பல மாநிலங்களிலும் இத்திரைப்படத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அளவுக்கு பிரச்சனை ஏற்படாமல் திரு. கமல்ஹாசன் அவர்கள் தவிர்த்திருக்கலாம். அவ்வாறு செய்யாதது நமக்கு ஏமாற்றமளிக்கிறது.

ஒரு திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டால் அதனைத் தடுக்கக் கூடாது என நீதிமன்றங்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளன. திரைப்படத்தைப் பொறுத்தவரை தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களே நீதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். அவ்வாறிருக்கும்போது, தணிக்கைக் குழு உறுப்பினர்களை நியமிப்பதில் அரசு கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீதிபதிகளை நியமிப்பதற்கு எத்தகைய கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ, அத்தகைய கவனம் தணிக்கைக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் காட்டப்பட வேண்டும். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தணிக்கைக் குழு உறுப்பினர்களாக நியமிப்பதை அரசு கைவிட வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், பெண்கள் உள்ளிட்ட சமூகத்தில் நலிந்த பிரிவினரை திரைப்படங்களில் எதிராகச் சித்தரிப்பதால் சமூகத்தில் மிக மோசமான கருத்து பரவுகிறது.

இருப்பதிலேயே மிக வலிமையான ஊடகமாக இருக்கும் திரைப்படம் குறித்து ஆட்சியாளர்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதையே விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான சிக்கல் நமக்கு உணர்த்துகிறது.

டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை முன்வைத்து பெண்கள் தொடர்பான சட்டங்களில் சீர்திருத்தம் செய்யப்படுவது போலவே 'விஸ்வரூபம்' திரைப்படப் பிரச்சனையை முன்வைத்து திரைப்படத் தணிக்கைக் குழுவைச் சீரமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
VCK chief Thirumavalavan requests the government to refine the censor board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X