For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவையாறு ஆராதனை விழா: 1000 இசை கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசை அஞ்சலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Thiruvayaru
திருவையாறு: திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் இன்று ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் ஆன்மீக ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆராதனைவிழாவில் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்துவது இசைக்கலைஞர்களின் வழக்கம்.

166 வது ஆராதனை விழா

இந்த ஆண்டிற்கான 166- வது ஆராதனை விழா கடந்த 27 -ந் தேதி தொடங்கியது. கவர்னர் ரோசய்யா தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை பிரபல இசைக் கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். நான்காம் நாளான நேற்று பாடகர் ஜேசுதாஸ், தியாகராஜரின் கீர்த்தனைகளை பாடினார்.

பஞ்சரத்ன கீர்த்தனைகள்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஆராதன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு அங்கிருந்து தியாகராஜர் சிலையுடன் உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ஆராதனைப் பந்தலை வந்தடைந்தது.

சிறப்பு அபிஷேக ஆராதனை

அதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு தியாகராஜர் சமாதியில் உள்ள அவரது சிலைக்கு பால், மஞ்சள், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இசைக்கலைஞர்கள் அனைவரும் தியாகராஜரை கடவுளாகவே வணங்கி வழிபடுகின்றனர் என்பதால் அபிஷேக ஆராதனைகளையும் இறைவனுக்கு செய்யப்படுவதைப்போலவே வழிபாட்டோடு செய்கின்றனர்.

ஆறாக பெருகிய இசை வெள்ளம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை 9மணிக்குத் தொடங்கியது. இதில் பாடுவதற்காக தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் பிரபல கலைஞர்கள், வித்வான்கள் வந்திருந்தனர். பிரபல பாடகர்கள் சீர்காழி சிவசிதம்பரம், மகதி, சுதா ரகுநாதன், ஓ.எஸ். அருண், புல்லாங்குழல் ரமணி, சுமா சுசீந்திரா, அசோக் ரமணி, சுதர்சனன், டெல்லி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் விழாப்பந்தலில் அமர்ந்து பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

எந்தரோ மஹாணுபாவலு

ஆதி தாளத்தில் அமைந்த "எந்தரோ மஹாணுபாவலு அந்தரிகி வந்தணமு" என்று ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் பாடியதைக் கேட்கும் போது அங்கு இசைவெள்ளம் பொங்கிப் பெருகியது. காலை 10 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனை முடிவடைந்தது. நள்ளிரவு 12 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

English summary
Thiruvayaru witnessed the flood of music as thousands of Karnatic singers gathered there to sing in the famous Pancharathna Keerathani on the eve of Thiruvayaru Thiyagarjar aradhana festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X