For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து, பிப்.8ல் பிரதமர் வீடு முற்றுகை!: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: பிப்ரவரி 8ம் தேதி இந்தியா வரும் ராஜபக்சேவை கண்டித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டினை முற்றுகையிடப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக வரலாற்றில் கொடிய இனவெறித் தாக்குதல்களால் நடத்தப்பட்ட மனிதப் பேரழிவுகளுள் ஒன்றுதான், இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத, கொலைபாதக ராஜபக்சே அரசு நடத்திய ஈழத்தமிழ் இனப்படுகொலை ஆகும். சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், தாய்மார்கள், முதிர்வயதினர், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட மூன்று லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

மனித உரிமை ஆர்வலர்களும், புலம் பெயர் ஈழத்தமிழர்களும், சிங்களவன் செய்த இனக்கொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று, மனித உரிமை கவுன்சிலில் தற்போதைய உறுப்பு நாடுகளின் அரசுகளிடம் தக்க தகவல்களைத் தந்து ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆனால், இப்படி நீதியின் வெளிச்சம் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்துவிடாமல் தடுக்க, இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளியான இந்திய அரசு, நயவஞ்சகமான வேலையைத் தற்போது தீவிரப்படுத்தி இருக்கின்றது.

தற்போது, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் நிலைமை, கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம் ஆகும். தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. தமிழர் தாயகமே, சிங்கள ராணுவ முகாம் ஆகிவிட்டது. மாவீரர் துயிலகங்களை இடித்து, ராணுவ முகாம் ஆக்கிவிட்டனர். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்து, பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களின் மொழி, இன அடையாளமே இல்லாமல் அழிக்கின்ற கலாச்சாரப் படுகொலை நடக்கின்றது.

இத்தனைக் கொடுமைகளையும் ஏவி உள்ள கொலைபாதகன் ராஜபக்சேவை திரும்பத்திரும்ப இந்தியாவுக்கு வரவழைத்து, அவனுக்கு இந்தியாவில் எதிர்ப்பே கிடையாது என்று உலகுக்குச் சொல்ல, இந்திய அரசு வஞ்சகம் செய்கின்றது. அந்த சதித்திட்டத்தின் ஒரு கட்டம்தான், கடந்த ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் நாள் சாஞ்சிக்கு, இராஜபக்சே வருவதற்கு ஏற்பாடு செய்தது. மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அரசும், அந்த வஞ்சகத்துக்குத் துணைபோனது.

தற்போது, மனித உரிமை கவுன்சில் கூட்டம், மார்ச் மாதத் தொடக்கத்தில் ஜெனீவாவில் நடக்க இருப்பதால், இந்திய அரசு துரோகத்தின் அடுத்த கட்டமாக, பீகாரில் உள்ள புத்த கயாவுக்கு ராஜபக்சே வருவதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கின்றது. பிப்ரவரி 8 ஆம் தேதி, புத்த கயாவுக்கு ராஜபக்சே வரப்போவதாகவும், பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமாரைச் சந்திக்கப் போவதாகவும், இலங்கை அரசின் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்து உள்ளார்.

அன்பையும், கருணையையும் மனித குலத்துக்குப் போதித்த புத்தர் பெருமான் ஞானம் பெற்ற கயாவின் போதி மரத்தைத் தரிசிக்க வருகின்றானாம். தமிழர்களைக் கொன்று குவித்த இந்த இரத்தக் காட்டேரி, கயா மண்ணை மிதிப்பதற்கே அருகதை அற்றவன். கடந்த மே மாதம், புத்தரின் ஈம எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, நாம் எவ்வளவோ எதிர்ப்புக்குரல் எழுப்பியும், ஆணவத்தோடு இந்திய அரசு கொழும்புக்கு அனுப்பி வைத்தது.

தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே, புத்த கயாவுக்கு வர அனுமதிக்காதீர் என்று பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமாருக்குக் கடிதம் எழுதி உள்ளேன். செப்டம்பர் 21 ஆம் நாள் அன்று, மத்தியப் பிரதேசத்தில் நடத்திய அறப்போரின்போது, இனிமேல் இந்தியாவின் எந்தப் பகுதிக்கு ராஜபக்சே வந்தாலும், டெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் முற்றுகை இடும் அறப்போராட்டத்தை நடத்தும் என்று அறிவித்தேன்.

இந்தியாவுக்கு ராஜபக்சே வர ஏற்பாடு செய்து உள்ள இந்திய அரசு, இதுகுறித்த செய்திகள் எதுவும் வெளிவர விடாமல் கள்ள மவுனம் சாதிக்கிறது. நினைக்கின்றபொழுதே நெஞ்சு நடுங்குகின்ற, குலை பதறுகின்ற கொடுமைகளைச் செய்து, ஈழத்தமிழ்க் குலத்தையே அழிக்க முற்பட்டுவிட்ட கொடியவன் ராஜபக்சே, இந்தியாவுக்குள் வருவதை எதிர்த்து, பிப்ரவரி 8 ஆம் நாள் அன்று, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்திய அரசை எதிர்த்து, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இல்லத்தை முற்றுகை இடும் போராட்டம், எனது தலைமையில் நடைபெறும்.

திருப்பதியிலும் போராட்டம்

இலங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய ராஜபக்சேவுக்கு இலங்கையில் என்ன வேலை? என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்கியவர்களை, திருப்பதி கோவிலுக்கு உள்ளே நுழைவதை அனுமதிக்கலாமா என்றும் அவர் கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில்

இலங்கையில், 1607 இந்துக் கோவில்களை உடைத்ததாக, சிங்கள அரசு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆனால், 2100 க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள், சிறுசிறு ஆலயங்கள், குலதெய்வங்களை கடந்த பல ஆண்டுகளில் சிங்களவர்கள் உடைத்து நொறுக்கிப் பேயாட்டம் ஆடினார்கள்.

விவேகானந்தர், சிகாகோ உலக சமயங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்பும்போது, புத்த பிட்சுகள், சிங்களர்கள், அனுராதபுரத்தில் செருப்பாலும், கல்லாலும் விவேகானந்தரை அடித்து விரட்டினார்கள்.

இந்துக் கோவில்களை உடைத்து நொறுக்கியவர்களை, திருப்பதி கோவிலுக்கு உள்ளே நுழைவதை அனுமதிக்கலாமா ?

‘இராஜபக்சே பீகாருக்கும் சென்றும், ஏன், தமிழ்நாட்டின் தலைவாயிலில் உள்ள திருப்பதி கோவிலுக்கும் சென்றும் வழிபட்டதை உலகத்துக்குச் சொல்லுவதற்காக, திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு, இந்தத் துரோகத்திலும் அராஜகத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

திருப்பதிக்கு வரும் ராஜபக்சே வருகையை கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பிப்ரவரி 8 ம் தேதி, கருப்புக்கொடி அறப்போராட்டம் நடைபெறும் இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK General secretary Vaiko has condemned the Lankan president Rajapakse's India visit and has announced a siege protest of PM residence on Feb 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X