For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சே வருகையைக் கண்டித்து பிப்.5-ல் தமிழ ஆளுநர் மாளிகை முற்றுகை: தி.வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணணையக் கூட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை சர்வதேச நாடுகள் கொண்டுவர உள்ளன. இதிலிருந்து தம்மை எப்படியும் இந்தியா காப்பாற்றிவிடும் என்ற இறுமாப்பில் போர்க்குற்றவாளி ராஜபக்சே இருக்கிறான். இதற்காக அண்மையில் அந்நாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வந்து சென்றது. இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அப்போதே சுட்டியும் காட்டியது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்று காட்டுவதற்காகவே போர்க்குற்றவாளி ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் 8-ந் தேதி வருகை தர இருக்கிறான்.

முற்றுகைப் போராட்டம்

தமிழக மக்களின், தமிழக அரசின் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக அலட்சியம் செய்து, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை புறந்தள்ளி கொடியவன் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை காப்பாற்றும் வகையில் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து இந்திய அரசின் பிரதிநிதியாக தமிழகத்தில் பதவியில் இருக்கும் ஆளுநர் மாளிகையை வரும் 5-ந் தேதியன்று காலை 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தீர்மானித்திருக்கிறது!

விசாரணை கூட இல்லை

யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இலங்கை தமிழர் தாயகப் பகுதி சிங்கள தேசமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்து ஆலயங்கள், முஸ்லிம், கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் நிர்மூலமாக்கப்பட்டு புத்த விகாரைகளாகிப் போய்விட்டன.
இலங்கையில் இதுநாள் வரை போர்க்குற்றவாளிகள் எவருமே அடையாளம் கூட காட்டப்படவில்லை. விசாரணை கூட தொடங்கப்படவில்லை. முள்ளி வாய்க்கால் யுத்தத்தில் சரணடைந்த பேபி, யோகி, ரத்தினதுரை போன்ற மூத்த போராளிகள் கதி என்ன என்று தெரியவில்லை.

நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு அனுமதி மறுப்பு

தற்பொழுது கூட இலங்கையின் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்த மகிந்த ராஜபக்சேவை சர்வதேச சமூகமே கண்டிக்கிறது. நீதித்துறைக்கு சவால்விடும் சர்வாதிகாரி ராஜபக்சேவுக்கு எதிராக விசாரணை நடத்த சர்வதேச சட்டவாளர்கள் சங்கம் சார்பில் சென்ற இந்திய நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு விசா கூட தர மறுத்திருக்கிறது சிங்கள அரசு.

இப்படிப்பட்ட கொடுங்கோலனுக்குத்தான் சிறிதும் வெட்கமே இல்லாமல் மத்திய அரசு முட்டுக் கொடுத்து இந்தியாவுக்குள் செங்கம்பள வரவேற்பு கொடுக்கிறது! இத்தகைய மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கவே இந்திய அரசின் பிரதிநிதியான தமிழகத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்துகிறது.

பிப்ரவரி 5-ந் தேதி காலை 11 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாக இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்! தமிழின விரோத மத்திய அரசுக்கு எதிராக, போர்க்குற்றவாளியை அனுமதிக்கும் இந்திய அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து பெருந்திரளாய் தமிழர்களாய் ஒன்று திரண்டு முற்றுகையிடுவோம்! வாரீர்!! என்று அதில் கூறியுள்ளார்.

English summary
Thamizhaga Valvurimai Katchi will lay siege to Raj Bhavan on Feb 5 to condemn on allow to Sri Lanka President Rajapakshe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X