For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனையை நிறைவேற்றவே 4 தமிழருக்கு தூக்கு: வேல்முருகன், பெ. மணியரசன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் வழக்கில் தூக்கு கொட்டடியில் நிற்கும் மூன்று தமிழரை தூக்கிலிடுவதற்கு முன்னோட்டமாகவே கர்நாடகாவில் 4 தமிழருக்கு தூக்கை நிறைவேற்ற திட்டமிட்டிருக்கின்றனர் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரசன் ஆகியோர் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர்.

7 தமிழர்களை பலியிடுவதா?

இது தொடர்பாக தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வீரப்பனின் கூட்டாளிகள் என்று கூறி மீசை மாதையன்,சைமன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குக் கொட்டடியில் நிறுத்தியிருக்கிறார் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

அப்சல் குருவை அவசரம் அவசரமாக தூக்கிலிட்டுக் கொலை செய்த கோபத்தில் ஜம்மு காஷ்மீர மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். காஷ்மீரிகளை தனிமைப்படுத்தும் வகையில் தூக்குத் தண்டனையிலும் தேர்வு' முறையை கடைபிடிப்பதா? என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா குமுறியிருக்கிறார்.இந்தக் கோபத்தையும் கொந்தளிப்பையும் தணிக்க 4 தமிழர்களின் கருணை மனுக்களை நிராகரித்து நாங்கள் நேர்மையான முறையிலேயே தூக்கிலிடுகிறோம் என்று காட்டிக் கொள்கிறது இந்திய அரசு.

தூக்குத் தண்டனையே கூடாது என்று ஒட்டுமொத்த உலகமே குரல் கொடுத்து வரும் நிலையில் அகிம்சையை உலகுக்கே எடுத்துச் சொன்ன இந்திய தேசம் அவசரம் அவசரமாக அடுத்தடுத்து தூக்குக் கொலைகளை செய்து வருகிறது. இன்று கூட தற்போது தூக்குக் கொட்டடியில் நிற்கும் 4 தமிழரும் வீரப்பனின் கூட்டாளிகளே அல்ல.. அப்பாவி பழங்குடி மக்கள்தான் என்று வீரப்பனின் துணைவியார் முத்துலட்சுமி கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இத்துடன் இரு முக்கிய காரணங்களுக்காகவும் 4 தமிழர்களை தூக்கிலிட இந்திய அரசு திட்டமிட்டுகிறதோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ஒன்று காவிரி நதிநீர் விவகாரத்தில் கூர்மையடைந்திருக்கும் தமிழக, கர்நாடகா மக்களிடையேயான உறவுநிலையை முற்றிலுமாக சீர்குலைக்கும் வகையில் கர்நாடகாவில் 4 தமிழரை தூக்கிலிட செய்வது, மற்றொன்று ராஜிவ் வழக்கில் தூக்கு மர நிழலில் நிற்கும் மூன்று தமிழர்களுக்கு எதிரான ஒரு நிலையை மேற்கொள்வதற்கு முன்னோட்டமாக தமிழர்களின் உணர்வுநிலையை சோதித்துப் பார்ப்பதுஆகிய காரணங்களுக்காகவே 4 தமிழரை தூக்கிலிட நினைக்கிறது மத்திய அரசு!

தூக்குக் கொட்டடியில் நிற்கும் 7 தமிழரை பலியெடுக்க இந்திய அரசு கங்கணம் கட்டிவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஒன்றரை லட்சம் தமிழர்களை ஈழத்தில் பலியெடுத்த அதே இந்திய அரசு தமிழ்நாட்டிலும் தனது மரண வேட்டையை தொடங்கப் போகிறது. இந்திய அரசின் இந்த மனித வேட்டைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழர்களும் சாதி, மத எல்லைகளைக் கடந்து ஒன்று திரண்டு போராடுவோம்! தூக்குக் கொட்டடியில் நிற்கும் 7 தமிழரின் உயிரைக் காக்க ஓரணியில் திரள்வோம்!! என்று வலியுறுத்தியுள்ளார்.

தூக்கு தூக்கி பிரணாப்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரசன் விடுத்திருக்கும் அறிக்கையில். வீரப்பனை பிடிப்பதற்காக மனித வேட்டை நடத்திய அதிரடிப்படையினர் 1993ஆம் ஆண்டு, வீரப்பன் குழுவினர் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 22 பேர் பலியான வழக்கில், ஞானப்பிரகாசம், சிலவேந்திரன், மீசை மாதையன், சைமன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை தள்ளுபடி செய்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய உள்துறை கடிதம்

இந்தியக் குடியரசுத் தலைவாக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற பின்னர், இந்திய அரசும், பிரணாப் முகர்ஜியும், நிலுவையிலுள்ள தூக்குத் தண்டனைகளை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகின்றனர். அண்மையில் தான், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்டார்கள். அவரது கருணை மனுவை, இந்தியக குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து உசசநீதிமன்றத்தில் நிவாரணம் தேடும் வாய்ப்பை குறுக்கு வழிகளில் தடுத்து தூக்கிலிட்டார்கள். அடுத்ததாக இப்பொழுது வீரப்பன் குழுவை சேர்ந்தவர்கள் என 4 பேரை தூக்கிலிட அவசர முயற்சிகளை எடுத்துள்ளார்கள்.

இந்த நால்வரும், கண்ணி வெடிகுண்டு வைத்தவர்கள் என்பதற்கு உரிய சாட்சியங்கள் இல்லாமல், தண்டனை பெற்றவர்கள் ஆவர். மொத்தமாக 127 பேரைக் கைது செய்து, அந்த வழக்கை நடத்தினார்கள். அதில், கர்நாடக நீதிமன்றம், அவர்களுக்கு வாழ்நாள் தண்டனை தான் வழங்கியது. வாழ்நாள் தண்டனையே சரியல்ல என்று நீதிகேட்டு மேல்முறையீடு செய்தவர் நால்வருக்கும், உச்சநீதிமன்றம் வழங்கிய பரிசுதான் தூக்குத் தண்டனைத் தீர்ப்பாகும்.

இந்த நால்வரில் சிலர் வீரப்பனை நேரில் கூட பார்த்ததில்லை. கண்ணில் பட்டவர்களை எல்லாம் பெருந்திரளாக கைது செய்து, நிரூபணங்கள் இல்லாத நிலையில் யாரோ நான்கு பேரை தூக்கில் போட வேண்டும் என்பது சட்ட ஆட்சிக்கான உரைகல் அல்ல. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கிலும் இப்படித்தான் நடந்தது. உண்மையில் அந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தப்பித்து விடுகிறார்கள். அகப்பட்ட அப்பாவிகள் உயிரிழக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம், மரண தண்டனைகளை உறுதி செய்யும் போது தவறு செய்யக் கூடாது என்று, கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள், நீதிபதிகள் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், தீபத் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று, சங்கீத் எதிர் ஹரியானா மாநில அரசு வழக்கில் பல அறிவுரைகளை வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில், இரண்டு மரண தண்டனைகள் தவறாக நிறைவேற்றப்பட்டதும், சுட்டிக்காட்டப்பட்டது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமக்கு முன்பிருந்த குடியரசுத் தலைவர்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் காட்டிய குறைந்தபட்ச மனச்சான்றுத் தயக்கத்தைக்கூட காட்ட விரும்பவில்லை. இவ்வளவு வேகமாக, "தூக்குத் தூக்கி" என்று பட்டம் வாங்கும் அளவிற்கு பிரணாப் முகர்ஜி செயல்படுவது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.

ஆட்சியாளர்கள் தமிழினத்தைப் பழித்தீர்க்க வேண்டும் என்று கருதுகின்ற ராஜிவ் வழக்கில் உள்ளவர்களை விரைவில் நெருங்க வேண்டும் என்று ஒரு மறைமுகத் திட்டத்தை வைத்துக கொண்டு, அதை செய்வதற்கு முன்னுதாரணங்களாக மற்றவர்களை வேகவேகமாக தூக்கில் போட்டு வருகிறார்களோ என்ற ஐயம் வலுவாக எழுகிறது.

உலகெங்கும் மரண தண்டனை கூடாது என்ற கருத்து வலுவாகி, கிட்டத்தட்ட 136 நாடுகளில், மரண தண்டனை நீக்கப்பட்டும், சட்டபுத்தகத்தில் இருந்தாலும் செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டும் வருகின்ற நிலையில், சோனியாகாந்தி அரசு மிக வேகமாக, மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றது. சோனியா காந்தி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், செயல்படக்கூடிய ஒருவரை குடியரசுத் தலைவராகப் பெற்றுள்ளார்கள். இவர்கள் குடிமக்களின், இதர சனநாயக உரிமைகளைப் பறிப்பதில், எவ்வளவுத தீவிரமாக இருப்பார்கள் என்று இவையெல்லாம் நமக்கு எடுத்துக்காட்டுகளாகும். கர்நாடகாவின் பெல்காம் சிறையில் வாடுகின்ற இந்த நான்கு தமிழர்களுக்கும், தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை நடுவண் அரசு கைவிட வேண்டுமேன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். மரண தண்டனைக்கு எதிராகவும், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிராகவும் மனிதநேய உணர்வுள்ள ஜனநாயக எண்ணம் கொண்ட, அனைத்து மக்களும் வீதிக்கு வந்து போராடுவது இன்றியமையாத தேவையாகும் என்று கூறியுள்ளார்.

English summary
TVK founder T. Velmurugan has appeal to centre dont' hanging four Veerappan aides.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X