For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மூத்த உறுப்பினர் என்.எஸ். மூர்த்தி காலமானார்

By Mathi
Google Oneindia Tamil News

Moorthy
லண்டன்: ஈழத் தமிழர் புனர்வாழ்வு அமைப்புகளில் முதன்மையான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மூத்த உறுப்பினரான வெண்புறா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் என்.எஸ். மூர்த்தி காலமானார்.

இது தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிறைவேற்றுக்குழுவின் மூத்த உறுப்பினரும், வெண்புறா அறக்கட்டளை அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் என். எஸ். மூர்த்தி காலமாகியுள்ளார் என்பதனை உலகத்தமிழர்களுக்கு மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இங்கிலாந்தை வாழ்விடமாகவும் திருகோணமலை மாவட்டத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட மருத்துவர், நமசிவாயம் சத்தியமூர்த்தி தொடக்ககாலம் முதலே தமிழீழ விடுதலைச் செயற்பாடுகளிலும் இலங்கை அரசாங்கங்களின் தமிழர் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் செயற்பட்டுவந்தவர்.

மனித உரிமை, மனிதாபிமான செயற்பாடுகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ற தமிழீழ விடுதலைக்கான துணைச்செயற்பாடுகளில் இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 1981 ஆம் ஆண்டில் இருந்து தனது பணிகளை தீவிரமாக்கிய மருத்துவர் மூர்த்தி, விடுதலைப் புலி போராளிகள், செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஓர் வழிகாட்டியாகவும் செயற்பட்டுவந்துள்ளார்.

1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் தமிழீழ மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும், எமது மக்களின் அகதிகள் முகாம்களிலும் மருத்துவப் பணிகளை செய்துவந்தார்.

கால்நடையாகவும் இரு சக்கர வாகனங்களிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார். இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இந்தியாவில் உதயமாகியபோது அதற்கான முதல் நிதியினை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனிடம் வழங்கி இருந்தார். இந்த 50,000 இந்திய ரூபாய் நிதியுடன் புனர்வாழ்வுக்கழகம் தனது பணியினை ஆரம்பிக்கையில் அதன் செயற்பாட்டு உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றி இருந்தார்.

மனிதாபிமானப் பணிகள் மற்றும் அரச எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக இலங்கை அரசின் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்து சிங்கள இனவெறியர்களால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். இந்த சித்திரவதைகளும்,கொடுமைகளுமே அவரை நிரந்தர நோயாளி ஆக்கியது.

1987ம் ஆண்டு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த மருத்துவர் மூர்த்தி, புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் ஊடகம், மருத்துவம், புனர்வாழ்வு போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வந்தார். தமிழர் புனர்வாழ்வுக்கழகம், மருத்துவப் பிரிவு போன்ற பிரிவுகளில் தீவிரமாக தனது பங்களிப்பினை ஆற்றிவந்த இவர் 2004ம் ஆண்டில் தமிழீழப் பகுதியில் இயங்கிவந்த வெண்புறா அமைப்பினை ஐரோப்பாவில் நிறுவினார்.

"வெண்புறா" நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக உறுப்புக்களை இழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார். தனது சமூகத்துக்கும் தான் வாழும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானிய மகாராணியால் Freeman of the City என்ற உயர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

மருத்துவக் கல்வி, சமூக விழிப்புணர்வு, ஊடகம்,அரசியல் , வரலாறு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி அதனை புலம்பெயர்ந்துவாழும் இளைஞருக்கு எடுத்துக்கூறி அவர்களை தமிழீழ தேசப்பணியில் இணைக்கவும் வழிவகை செய்தார். 2004ம் ஆண்டு சுனாமி பேரலை தமிழீழப் பூமியைத் தாக்கியபோது மிகத்தீவிரமாக செயலாற்றி மக்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்கு பெரும் பங்களிப்பினைப் பெற்றுக்கொடுத்தார்.

தனித்து புனர்வாழ்வு, மருத்துவப் பணிகள் மட்டுமன்றி உலக நாடுகளின் தலைவர்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளி நாட்டு இராஜதந்திரிகள் ஆகியோர்களை சந்தித்து எமது மக்களின் மனிதாபிமான பிரச்சினைகள், சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பில் தெளிவுபடுத்தியும் வந்துள்ளார்..

பல்வேறு தளங்களில் தன் சக்திக்கு மீறிய சேவைகளைச் செய்துவந்ததன் விளைவாக அவர் கடந்த ஓர் ஆண்டாக கடுமையான சுகவீனமுற்று இருந்தார். ஆனாலும் அவர் தனது சுகவீனம் தொடர்பில் அதிக கவனம் எடுக்கவில்லை. தாயகத்தில் நடந்த பேரவலங்களும் துயரங்களும் அவரை வெகுவாக பாதித்த்தது. ஆனால் மிகவிரைவில் மக்களையும், மண்ணையும் விட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டார்.

எனினும் ஆத்மார்த்தரீதியாக அவர் எம்மை விட்டு பிரியவில்லை. அவரின் நினைவாக நாம் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுப்போம் என்பதுடன் இந்த நேரத்தில் மருத்துவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் நாமும் சேர்ந்து துயரைப் பகிர்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Dr. Namasivayam Sathiyamoorthy (N.S. Moorthy), a veteran Eezham Tamil activist who was instrumental in the organization of the humanitarian agencies TRO and Ve'n Pu'raa (White Pigeon), passed away at the age of 61 at London,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X