For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னது இரண்டே சீட்தானா?: அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் பி.ஏ. சங்மா

By Mathi
Google Oneindia Tamil News

Sangma
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் ஆட்சியை எப்படியும் பிடித்துவிடலாம் என்று கனவு கண்டு தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே காங்கிரஸுக்கு கை கொடுத்து வரும் கூட்டணிக் கட்சிகளோடு ஆட்சி அமைப்பதற்கு பேரம் பேசிய பி.ஏ.சங்மா இப்படி தலையில் பேரிடி விழும் என்று ஒருநாளும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்...

காங்கிரஸ் கட்சியில் வடகிழக்கு மாநில முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பி.ஏ.சங்மா. லோக்சபா சபாநாயகராக பணியாற்றியவர். சோனியா காந்தியின் தலைமையை ஏற்க மறுத்து சரத்பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் இணைந்து தேசியவாதக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் சங்மா. பின்னர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு தேசியவாத காங்கிரஸுக்கே திரும்பியவர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் முன் நிறுத்திய பிரணாப் முகர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் பி.ஏ. சங்மா. தேசிய அரசியலில் சோபிக்க முடியாமல் போய்விட்ட சங்மா, தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இந்த புதிய கட்சிக்கு நம்பிக்கையாக இருந்தது மேகாலயாவின் காரோ குன்றுகள் பகுதிதான். இங்கு இருந்து 9 முறை பார்லிமென்ட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சங்மா. இங்கு மொத்தம் 5 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் 24 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.

முதல்வர் வேட்பாளர் ரெடி

மேகலாயாவில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பி.ஏ.சங்மா அங்கம் வகித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி மொத்தம் 13 தொகுதிகளில் வென்றிருந்தது. இதனால் தம்மை இதுவரை எம்.பியாக தேர்ந்தெடுத்த காரோ குன்று பிரதேச வாக்காளர்கள் கணிசமாக வாக்களித்தாலே எப்படியும் மேகாலயா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக மட்டுமல்ல.. ஆட்சியையே பிடித்துவிடலாமே என்பதுதான் சங்மாவின் கணக்காக இருந்தது. இதனால் சங்மாவின் இரு மகன்களும் அரசியல் களத்தில் இறக்கப்பட்டனர். இதில் ரொம்பவும் வேடிக்கையானது என்னவெனில் அம்மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சங்மாவின் மகனான கான்ராட் சங்மா தான் 'முதல்வர்' வேட்பாளராக பேசப்பட்டவர்.

ஆட்சிக்கு வியூகம்

இந்த நம்பிக்கையில்தான் சட்டசபை தேர்தல் களத்துக்குப் போனார் பி.ஏ. சங்மா. மொத்தம் 60 சட்டசபை தொகுதிகளில் 32 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் வேட்பாளர்களை அறிவித்தார். வாக்குப் பதிவு முடிந்த கையோடு தமது "ஆட்சி' அமைக்கும் கனவை நிறைவேற்றும் வேலைகளில் படுமும்முரமாக இருந்தார் சங்மா. குறிப்பாக மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளை வளைத்துப் போடுவதில் பிஸியாக இருந்தார்.

வாக்கு எண்ணிக்கை நாளும் வந்தது... தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னணி வகித்தது.. காரோ குன்றுப் பகுதியின் 24 சட்டசபை தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்த போது இப்படி ஒரு பேரிடியா? என்ற உறைந்தே போயிருப்பார் பி.ஏ.சங்மா. ஆம் சங்மாவின் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதனால் ஆட்சி அமைக்கும் கனவுக்கு பெரும் ஆப்பு வைத்துவிட்டனர் மேகலாயாவின் காரோ குன்று வாக்காளர்கள்.

2 தொகுதிகள்தான்...

தேர்தல் முடிவுகள் இப்படி படுகேவலமாக இருக்கும் என்று ஒருபோதும் சங்மா கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். சங்கமா கட்சியின் முதல்வர் வேட்பாளராக பேசப்பட்ட கான்ராட் சங்மா, காங்கிரஸ் வேட்பாளரிடம் மிகப்பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். பி.ஏ.சங்மாவை நம்பி ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்ட தாமஸ் ஏ சங்மாவும் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றுப் போனார். காரோ குன்றுப் பகுதியில் மொத்தம் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் 2 தொகுதிகளைத்தான் பி.ஏ.சங்மாவின் கட்சியால் கைப்பற்ற முடிந்தது.

முகுல் சங்மா குடும்பத்து எழுச்சி

சங்மாவை கொந்தளிக்க வைத்திருக்கும் இன்னொரு விஷயமும் இந்தத் தேர்தலில் நடைபெற்றிருக்கிறது. மகளை மத்திய அமைச்சராக்கி மகனை மாநில முதல்வராக்கிவிட பி.ஏ. சங்மா துடித்ததைப் போலதான் தற்போதைய முதல்வர் முகுல் சங்மாவும். காரோ குன்றுப் பகுதியிலேயே முகுல் சங்மாவின் மனைவி, சகோதரர் ஆகியோரை தேர்தலில் போட்டியிட வைத்தார் அவர். போட்டியிட்ட அவர்கள் இருவரும் வென்றுவிட்டனர். அதாவது தற்போதைய முதல்வர் முகுல் சங்மா வீட்டில் மொத்தம் 3 எம்.எல்.ஏக்கள். பி.ஏ.சங்மாவின் குடும்பமே தேர்தல் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் முகுல் சங்மாவின் குடும்பமே வெற்றி பெற்று மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதுதான் பி.ஏ.சங்மாவுக்கு செம கடுப்பு!

இப்படி ஒரு படுதோல்வியை எதிர்கொண்டிருப்பதால் அனேகமாக பி.ஏ.சங்மாவின் அரசியல் சகாப்தம் 'முடிவு'க்கு வருகிறது என்பதே நிதர்சனம்!

English summary
Former Lok Sabha speaker PA Sangma was handed out a shocker by the Meghalaya electorate after his newly floated National People’s Party managed to win just two seats out of the 33 it contested in the assembly polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X