For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையை கண்டிக்கும் தீர்மானம்: மத்திய அரசை 'நெருக்க' மறுக்கும் கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் தமிழர்களின் விருப்பம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மார்ச் 5ம் தேதி இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் ‘‘டெசோ'' சார்பில் நாம் நடத்தவிருக்கும் முற்றுகைப் போராட்டம். இந்த நாளில்தான் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும், ஓட்டெடுப்பின்றியே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் இன்று செய்தி வந்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற நிகழ்வுகளைக்காட்டும் ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்குத் திரையிடப்பட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. எந்தவிதமான காழ்ப்புணர்வும் இன்றி நடுநிலையோடு கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால் அப்போது அந்தத் தீர்மான வாசகம் நீர்த்துப்போக வைக்கப்பட்டது. எனவேதான் இந்த ஆண்டும் அமெரிக்கா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அமெரிக்காவை முந்திக்கொண்டு, இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியாவே முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பதுதான் தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு தமிழனின் விருப்பமாகும். ஆனால் அமெரிக்காவின் தீர்மானம் இந்த மாதம் 21ம் தேதி வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று பேசப்படுகின்றது. இதுவரை இந்தியா தனது முடிவினை அறிவிக்காமல் இருப்பது தமிழகத்திலே உள்ள நம்மை ஆச்சரியமடைய வைக்கிறது.

அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடிக்க ராஜபக்சே தன்னால் இயன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற நிகழ்வுகள் பற்றிய ஆவணப்படத்தினைப் பார்த்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும், ராஜபக்சேவுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அந்த நாடுகளின் பட்டியலில் நமது இந்தியாவும் இருப்பதாக இதுவரை அறிவிக்கவில்லையே என்பது தான் உலகத் தமிழர்களின் இதய வேதனை.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்வு செய்வதற்காக இந்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக நிதி உதவி அளித்து வருகிறது. இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா 500 கோடி ரூபாயை இலவசமாக வழங்குகிறது. கடந்த நிதியாண்டில் இந்தியா 290 கோடி ரூபாயை இலங்கைக்கு வழங்கியது. அதற்கு முந்தைய ஆண்டில் 180 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதி உதவி இலங்கையில் தமிழர்களின் நல்வாழ்வுக்காக செலவழிக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் வழங்கப்படுகிறது.

ஆனால் இலங்கை இந்த நிதியை தமிழர்களுக்காகப் பயன்படுத்துவதில்லை என்றும், சிங்களர்கள் பயன்பெறும் வகையிலே தான் இந்த நிதி திருப்பிவிடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிதி உதவியைக்கொண்டு கட்டப்படும் வீடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களை குடியமர்த்துவதற்குப் பதிலாக, ஆக்கிரமிக்கும் சிங்களர்களைத்தான் குடியேற்றுகிறார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த வேதனைகளையெல்லாம் எதிரொலிப்பதற்காகத்தான் இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சர்வ தேசப் போர்க் குற்றவாளி என்று உலகம் உணரச் செய்வதற்காகத்தான்; நாளை மார்ச் 5ம் தேதியன்று சென்னையில் இலங்கைத் தூதரகத்தை ‘‘டெசோ'' இயக்கத்தின் சார்பில் முற்றுகையிடுகின்ற அறப்போராட்டமும், அதேநாளில் இந்தியத் தலைநகரான டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஜனநாயக வழியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துவதென்று 25-2-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் கூடிய ‘‘டெசோ'' கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது நம்முடைய தமிழ் இனத்தவர் இலங்கையிலே இன்னமும் நாதியற்றவர்களாகச் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. தான் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்று இன்னமும் நிமிர்ந்து நின்று ‘‘பேட்டி'' கொடுத்துள்ள ராஜபக்சேவுக்கு, ‘‘தமிழினம் முற்றாக அழிந்து விடவில்லை'' என்பதை மெய்ப்பித்துக்காட்டுவதற்காக நடைபெறும் முற்றுகைப் போராட்டம் தான் இது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஆனால், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நேரடியாக நெருக்குதலோ, எச்சரிக்கையோ விட கருணாநிதி மறுப்பது ஏன்?

English summary
The DMK in Tamil Nadu is asking Centre to vote against Sri Lanka at the United Nations Human Rights Council (UNHRC). The US is moving a motion against Sri Lanka on war crimes and rights violations against Tamil civilians during the final phase of the war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X