For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ''மெளனமே உன் பெயர் தான் மன்மோகன் சிங்கா''?

By Chakra
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி: இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் கவலை மட்டும் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் மிக கனத்த மௌனம் சாதித்தார்.

இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்துப் பேசுகையில்,

இலங்கை தமிழ் மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் பற்றிய உறுப்பினர்களின் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு இணையாக கண்ணியத்துடனும், சுய மரியாதையுடனும் வாழ்வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அங்கு தமிழர்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக முயற்சிகளை இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியாவும் மேற்கொள்ளும். இது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நிலையை எண்ணி நாம் மிகுந்த கவலைக்கு உள்ளாகி இருக்கிறோம். அங்கு அரசியல் ரீதியிலான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். அந்த நல்லிணக்கம் இல்லாமல், இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.

இலங்கையில் உள்ள தமிழர் தலைவர்களுடன் இலங்கை அரசு கண்டிப்பாக பேச்சு நடத்த வேண்டும். அவர்களுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கம் போல் பேசினார்.

அமெரிக்க தீர்மானம் குறித்து மெளனம்:

ஆனால், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதித்தார்.

பாலசந்திரன் கொலை குறித்தும் மெளனம்:

அதே போல விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்தும் மன்மோகன் சிங் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

திமுக, அதிமுக கடும் எதிர்ப்பு:

பிரதமரின் இந்த வழவழ கொழகொழா பேச்சால் கோபமடைந்த திமுக எம்பி திருச்சி சிவா, அதிமுக எம்பி மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் எம்பியான டி. ராஜா ஆகியோர்,
இலங்கைத் தமிழர் நிலைமை தொடர்பான உங்கள் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை; அரசியல் தீர்வுக்காகக் கவலை கொள்ளும் மத்திய அரசு, முதலில் இலங்கை போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காகத்தான் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால், இந்த விஷயத்தில் இந்தியா இதுவரை எந்த நிலையும் எடுக்காதது ஏன்?.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கிறதா, இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஈடுபாட்டுடன் அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டினர்.

அப்போது இடைமறித்த துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி குறுக்கிட்டு, பிரதமர் பேசும்போது உறுப்பினர்கள் இவ்வாறு குறுக்கிடுவது அவை விதிகளுக்கு எதிரானது என்று அவரது வேலையைப் பார்த்தார்.

விடாத திருச்சி சிவா:

ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் திருச்சி சிவா, பிரதமர் பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று குரல் கொடுத்தார். அதே போல அதிமுக, இடதுசாரிக் கட்சி உறுப்பினர்களும் இதே போல குரல் கொடுத்தனர். இதனால் ராஜ்யசபாவில் சில நிமிடங்கள் அமளி நிலவியது.

இதையடுத்து தொடர்ந்து பேசிய மன்மோகன் சிங், இந்தியா பொருளாதார வளர்ச்சி குறித்து பேச்சைத் திருப்பிவிட்டார்.

திமுக கடும் நிலை எடுக்குமா?:

சரி, பிரதமர் இப்படித்தான் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் இப்போது திமுகவுக்கே உண்டு. எடுக்குமா?.

English summary
Prime Minister Manmohan Singh did not give any hint of India’s stance at the UNHRC resolution on Sri Lanka slated to be voted upon later this month, even as he asserted that India had pleaded to Colombo that there must be political reconciliation to bring peace to Lanka. “There are problems in Sri Lanka. We have been worried about the fate of the Tamil population in Sri Lanka,” Singh said in his reply to the motion of thanks to the President’s address.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X