For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெசோ பந்த்: தமிழக மக்களுக்கும், மத்திய அரசுக்கும் கருணாநிதி வேண்டுகோள்

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: வரும் 12ம் தேதி டெசோ அமைப்பு சார்பில் நடக்கும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை தமிழக மக்களும், மத்திய அரசும் ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையில் சிங்களப் பேரினவாத அதிபர் ராஜபக்சேவால் நடத்தப்பட்டதெல்லாம் தமிழினப் படுகொலையே; அவர் அடுக்கடுக்காகச் செய்ததனைத்தும் போர்க் குற்றங்களே; அவர் தனது மனசாட்சியை நசுக்கி அழித்துவிட்டு மீறியதெல்லாம் மனித உரிமைகளையே; எனவே அவரைச் சர்வதேசப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும்; இலங்கையில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி, நம்பகத்தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்;

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன், பாலச்சந்திரனைச் சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண்களையும், முதியோர்களையும் கொன்றழித்த சரித்திரம் காணாத கொடுமைகளுக்கு ராஜபக்சே சர்வதேசச் சட்டப்படி பொறுப்பேற்று, உலக நாடுகளுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்; இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் முழு மனதோடு ஆதரிப்பதாக அறிவிக்க வேண்டும்.

இந்திய அரசே, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் பொது வாக்கெடுப்புக்கென தக்கதொரு தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பவைகளுக்காக கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் - ஜனநாயக நெறி பிறழாமல் அமைதியான முறையில் அறவழியில் 12-3-2013 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் இது நம்முடைய தொப்புள் கொடிச் சொந்தங்களான ஈழத் தமிழர்களுக்காக நாம் கட்டாயம் கடைப்பிடித்தே தீர வேண்டிய அடிப்படைக் கடமை என்ற உணர்வோடு அனைவரும் பங்கேற்க வேண்டுமென்ற எனது வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாகச் சிலருக்கு சில நடைமுறைச் சங்கடங்கள் ஏற்படலாம். அவற்றையெல்லாம் அன்புகூர்ந்து பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிய விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றபோது நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் குரலோடு இணைந்து, பாஜக போன்ற கட்சிகள் எல்லாம் பிரச்சனையின் கடுமையை உணர்ந்து, தாமாகவே முன்வந்து நம்முடைய இனத்திற்காகக் குரல் கொடுக்கின்ற நிலையில், மத்திய அரசு தனது பதிலில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு உறுதி அளிக்காத நிலையில், அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்புத் தரவேண்டியது நம்முடைய கடமை அல்லவா?

இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரு நாள் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பொதுமக்களிடம், நம்மினத்தவர் இலங்கையிலே நாளும் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நாம் செய்கின்ற எள்ளளவு தியாகம் என்ற உணர்வோடு, அதனை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வேலை நிறுத்தத்தின்போது, பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறிய சிறிய நிறுவனங்கள் - பெரிய, சிறிய வர்த்தக நிறுவனங்கள் - கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். சாலைகளிலே ஆட்டோக்கள் ஓடக் கூடாது என்றும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் அன்று ஒரு நாள் பன்னிரண்டு மணிநேரம் தங்கள் தியேட்டர்களை மூடி காட்சிகளை நிறுத்த முன் வரவும் வேண்டுகிறேன். தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள்; ஏன் இந்திய அரசே முன் வந்து அன்றையதினம் புகைவண்டிகள் மற்றும் விமானங்கள் தமிழகத்திலே ஓடாது என்று அறிவித்திட வேண்டும்;

தமிழக அரசின் பொறுப்பிலே இருப்போரும், இந்த வேலைநிறுத்தம் என்பது நம்முடைய இன மக்களுக்காக நடைபெறுகின்ற ஒன்று என்ற உணர்வோடு அரசு அலுவலகங்களையெல்லாம் அன்று ஒரு நாள்-12 மணி நேரம், இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்காக விடுமுறை விடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல; அங்கே வாழ்ந்து மறைந்த ஈழத் தமிழர்களுக்காகக் கண்ணீர் அஞ்சலியுடன், இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்காக தாய்த் தமிழகம் காட்டுகின்ற ஆதரவு - அரவணைப்பு என்ற உணர்வோடு, இந்த வேலைநிறுத்தத்தில் நம்முடைய ஒற்றுமையை உறுதியாக வெளிப்படுத்திட முன்வர வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi has requested the TN people and the centre to support the TESO bandh on march 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X