For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசிடம் இருந்து இதுவரை ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: டெசோ அமைப்பு சார்பில் நாளை நடைபெறும் பந்த்தில் தமிழர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்திருக்கிற நிலையில், அதற்கு முன்பே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமே, 38 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை தயாரித்து, அதன் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை சமர்ப்பித்திருக்கிறார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான விவரங்கள்:

இலங்கையில் போர் நடந்த நேரத்தில் பெரியவர்களும், சிறார், சிறுமிகளுமாக பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடி கண்டுபிடித்து, மீண்டும் அவர்களது இடத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை சரியாக செயல்படுத்தவில்லை. எனவே காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை.

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இன்னமும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது; அவர்கள் ஏன் திரும்பப் பெறப்படவில்லை? மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாக சொன்ன இலங்கை அரசு அது குறித்து முழுமையான விசாரணை நடத்தவில்லை.

புலம் பெயர்ந்தவர்களைக் குடியமர்த்தும் பணியைக் கூடச் செயல்படுத்தவில்லை. இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமே இந்த அளவிற்கு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கின்ற நிலையில், ஈழத் தமிழர்களுக்காக, அவர்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் சோகங்களை எண்ணி, இரவும் பகலும் நாம் துடித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், நமக்கு ஆறுதல் அளித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசின் ஒருசில நடவடிக்கைகள் நம்மை வேதனைத் தீயில் ஆழ்த்துபவையாக அல்லவா உள்ளன.

குறிப்பாக நம்முடைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடைய ஈரமில்லாத உரைகளைக் குறிப்பிட்டாக வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, அமெரிக்காவுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திய பிறகு, அந்த தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும்'' என்று சொல்லியிருக்கிறார்.

நாம் யாரிடமிருந்து ஒரு உறுதியான, திடமான அறிவிப்பு கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்தோமோ, அவர்களிடமிருந்து ஏமாற்றம்தான் இதுவரை கிடைத்திருக்கிறது.

குடியரசு தலைவர் உரைக்கு பதிலளித்த பிரதமர் பேச்சிலும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து எந்த விதமான உறுதியும் தரப்படவில்லை. இலங்கையிலே உள்ள தமிழர் தலைவர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடித்திருந்தால் பண்டித நேரு தென்னாப்பிரிக்காவின் நிறவெறி பிரச்சனையில் தலையிட்டிருக்க முடியுமா?. வங்காள தேசத்தில் விடுதலை வீரர் முஜிபூர் ரகுமானுக்கு இந்திரா காந்தி உதவிக்கரம் நீட்டி விடுதலைக்கு உறுதுணை புரிந்திருக்க முடியுமா? என்ற கேள்விகளையெல்லாம் வரலாற்றை உன்னிப்பாக கவனித்து வரும் உலக தமிழர்கள் கேட்க மாட்டார்களா?

சர்வதேச அமைப்புகள், விசாரணைகள், சாட்சியங்கள் ஆகியவை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இனப் படுகொலை ஆகியவற்றுக்கு அதிபர் மகிந்த ராஜபக்சேவே பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டியவர் என்றுதான் காட்டுகின்றன. இதையெல்லாம் முன் வைத்தும்; மத்திய அரசின் அணுகுமுறை மாற வேண்டும் என்பதற்காகவும், ஈழத் தமிழர்கள்பால் அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தேவையான அழுத்தத்தை தருவதற்காகத்தான் ‘டெசோ' இயக்கத்தின் சார்பில் நாளை, 12ம் தேதி, 12 மணி நேரம்- அதாவது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை- பொது வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்.

அந்த வேலை நிறுத்தத்தில் தமிழர்கள் அனைவரும் ஒருமுகமாக பங்கேற்று வெற்றிகரமாக ஆக்கித் தர வேண்டுமென்று மீண்டும், மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK president M. Karunanidhi criticised External Affairs Minister Salman Khurshid for his observations on the resolution to be moved in the United Nations Human Rights Council against Sri Lanka and accused him of siding with the adversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X