For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுத முடியாது: தமிழக மாணவர்கள் கொதிப்பு

By Siva
Google Oneindia Tamil News

Students can't write IAS exam in Tamil
சென்னை: ஐ.ஏ.எஸ். தேர்வை இனி தமிழ் மொழியில் எழுத முடியாது.

இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையில் கூறியிருப்பதாவது,

ஐ.ஏ.எஸ். முதன்மை (மெயின்) தேர்வில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு எழுதுவதிலும், விருப்பப் பாடங்களைக் குறைத்து பொது அறிவு மற்றும் பொதுப்பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதன்மைப் பாடத் தேர்வு எழுதுவோரில் குறைந்தபட்சம் 25 பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே அந்தப் பிராந்திய மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும். ஆனால் இது இந்தி அல்லது ஆங்கிலத்துக்குப் பொருந்தாது. அதே போன்று பட்ட வகுப்பில் மாணவர்கள் படித்த மொழி வழியாக மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிராந்திய மொழிகளில் முதன்மைத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டும் தான் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடகமாகத் தேர்வு செய்ய முடியும் என்றும் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் தமிழில் தேர்வு எழுதிய 10க்கும் மேற்பட்டோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டு தோறும் முதல் கட்டத் தேர்வுக்கு பிறகு நடக்கும் பிரதான தேர்வை தமிழகத்தில் மட்டும் 300-600 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் பட்டப்படிப்பில் தமிழ் வழியில் படிப்போர் மட்டுமே தமிழில் தேர்வு எழுதலாம் என்ற விதியால் ஒரு சில மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும்.

இந்த புதிய விதிமுறைகளுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதிமுறைகள் இந்தி மற்றும் ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு பொருந்தாது என்பதில் இருந்தே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தி பேசாத மாநிலங்கள் மீது மறைமுக இந்தி திணிப்பில் ஈடுபடுகிறது என்று சில மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர் சங்கர் கூறுகையில்,

இந்த புதிய விதிமுறைகளால் நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். ஆக முடியும். முதன்மை தேர்வில் இருந்த 2 விருப்பப் பாடங்கள் ஒன்றாக குறைக்கப்பட்டதும், அதற்கு பதில் பொதுப் பாடங்கள் இரண்டாக அதிகரிக்கப்பட்டதும் வரவேற்கத்தக்கது. ஆனால் மாநில மொழிகளில் தேர்வு எழுதக் கூடாது என்பதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேறு வார்த்தையில் கூறியுள்ளது. இந்த விதிகள் கிராமப்புற மற்றும் ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு எதிராக உள்ளன என்றார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விதிமுறைகளுக்கு ராமதாஸ் கண்டனம்:

ஐ.ஏ.எஸ். தேர்வுகளை இனி தமிழில் எழுத முடியாமல் விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டித்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 5ம் தேதி மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழில் இளநிலை பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான முதன்மை (மெயின்) தேர்வை தமிழில் எழுத முடியும் என்றும், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் உள்ளிட்ட மாநில மொழி பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம் ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் இந்தி மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில்தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுதி வந்தனர். 2009ம் ஆண்டில் 622 பேரும், 2010ம் ஆண்டில் 561 பேரும், தமிழில் தேர்வு எழுதினர். தமிழ் இலக்கியம் படிக்காமல் மருத்துவம், பொறியியல் படித்த மாணவர்கள் கூட தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்து தமிழிலேயே முதன்மை தேர்வுகளை எழுதி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வந்தனர். கடந்த ஆண்டு தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்து தேர்வு எழுதியவர்களில் 19.4 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் யாரிடமும் கருத்து கேட்காமல் மாநில மொழிகளில் குடிமை பணி தேர்வுகளை எழுத தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு இந்தி பேசுபவர்களைத் தவிர வேறு எவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வந்துவிடக் கூடாது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதுதான் காரணமாகும்.

இதற்காகவே மிகவும் தந்திரமாக விதிகளை வகுத்து மாநில மொழி பேசும் மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. இந்தி பேசுபவர்களுக்கு மட்டும்தான் அனைத்து சலுகைகளும் என்றால் இந்த நாடு இந்திய தேசமா? அல்லது இந்தி தேசமா? என்ற வினா எழுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களையும் தமிழில் தயாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன். கடந்த ஜூன் 26ம் தேதி தேதி சென்னையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நேரத்தில் இருக்கும் முக்கியத்துவத்தையும் பறிக்கும் மத்திய அரசின் செயல், மேல் ஆடை கேட்பவனின் கீழ் ஆடையையும் பறிப்பதற்கு ஒப்பானதாகும்.

மாநில மொழி மக்களுக்கு எதிரான அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற்று ஏற்கனவே இருந்தவாறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 26ம் தேதியன்று குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும் மையங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
According to the new rules, students can't write the IAS exam in tamil. These rules have irked the students of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X