For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழத்திற்காக நீண்ட போராட்டம் தேவை, ஆனால் உண்ணாவிரதம் உதவாது- விஜயகாந்த் வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: கால வரையற்ற உண்ணாவிரதத்தின் மூலம் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்வது என்பது தியாக உணர்வை காட்டுவதாக இருந்தாலும், மாணவர்களுடைய ஆற்றல் வருங்காலத்தில் மேலும் தேவைப்படுகிறது. ஆகவே லயோலா கல்லூரி மாணவர்கள் தாங்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிட்டு, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக வருகின்ற காலங்களில் நடைபெறும் அறப்போராட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதும், பெண்கள் கற்பழிக்கப்பட்டதும், சின்னஞ்சிறு சிறார்கள் கூட விட்டு வைக்கப்படாமல் சுட்டுக் கொல்லப்பட்டதும் படக் காட்சிகளாக அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டுள்ளன. அவற்றை கண்டு நெஞ்சு பதறாமல் யாராலும் இருக்க முடியாது.

குறிப்பாக விடுதலைபுலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலச்சந்திரன் அப்பாவித்தனமாக இருப்பதும், பிறகு அவன் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு சாகடிக்கப்பட்டதும் மனித உள்ளம் படைத்த எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

இந்த சூழ்நிலையில் ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணை குழுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சிங்கள இனவெறி அரசு போரின் கடைசி கட்டத்தில் கொத்துக் குண்டுகளை வீசி தமிழ் மக்களை கொன்று குவித்தது மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, அதிபர் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்பதும், சிங்கள இனவெறி அரசு தமிழினப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

அமெரிக்கா சிங்கள இனவெறி அரசின் மனிதாபிமானமற்ற போக்கை கண்டிக்கவும், பாரபட்சமற்ற நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை ஒன்று ஐ.நா. மன்றத்தின் மூலம் நடைபெறவும் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்துள்ளது.

இந்த தீர்மானம் வரும் 21ம் தேதி இறுதி செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.இதற்கிடையில் இந்திய அரசு ஒரு நாட்டின் இறையாண்மையில் ஐ.நா. மன்றம் தலையிடுவதை தான் ஏற்க முடியாது என்றும், சர்வதேச விசாரணையோ அல்லது மனித உரிமை மீறல்களோ இலங்கை அரசின் சம்மதத்தின் பேரிலேயே நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவினுடைய தீர்மானம் கடந்த 2012ஆம் ஆண்டில் எவ்வாறு இந்தியாவின் கருத்துக்கு ஏற்ப திருத்தப்பட்டதோ, அதேபோல் திருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதாபிமான அடிப்படையிலும், தமிழ் இன உணர்வோடும் லயோலா கல்லூரி மாணவர்கள் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இதர இடங்களிலும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சிங்கள இனவெறி அரசின் மீதும், அதன் அதிபர் ராஜபக்சே மீதும் போர்க் குற்றம் இழைத்தது மற்றும் தமிழர் இனப்படுகொலை நடத்தியது பற்றி சுதந்திரமான, நம்பிக்கைக்குரிய, பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும், கண்ணியத்துடனும், உரிமையுடனும் வாழ்வதற்கு இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒரு நெடிய போராட்டம் தேவைப்படுகிறது. இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இளைஞர்கள் பட்டாளம் இத்தகைய வரலாற்று கடமையை செய்ய வேண்டி உள்ளது.

இதற்கு மாறாக கால வரையற்ற உண்ணாவிரதத்தின் மூலம் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்வது என்பது தியாக உணர்வை காட்டுவதாக இருந்தாலும், அவர்களுடைய ஆற்றல் வருங்காலத்தில் மேலும் தேவைப்படுகிறது. ஆகவே மாணவர்கள் தாங்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிட்டு, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக வருகின்ற காலங்களில் நடைபெறும் அறப்போராட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DMDK leader Vijayakanth has appealed Chennai Loyola college students to end fast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X