For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்பெண்ணை ஆற்று நீரையே உறிஞ்சும் கர்நாடகாவின் திட்டத்தை தடுக்க வேண்டும்: தி. வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

Velmurugan
சென்னை: தென்பெண்ணை ஆற்று நீரையே உறிஞ்சி கர்நாடகாவின் 130 ஏரிகளை நிரப்பக் கூடிய திட்டத்தை கர்நாடகா தொடங்கியிருப்பதை போர்க்கால அடிப்படையில் தடுத்தாக வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டதற்காக பழிவாங்கும் வகையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களை பாலைவனமாக்குகிற நடவடிக்கைகளை கர்நாடகா முடுக்கி விட்டிருக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் குடிநீர் குழாய் மூலம் மின் மோட்டர்களை பயன்படுத்தி 130 ஏக்கர் ஏரிகளை நிரப்பக் கூடிய திட்டத்தை கர்நாடகா தொடங்கியிருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தென்பெண்ணை ஆற்றையே நம்பியிருக்கின்றனர். தென்பெண்ணை ஆற்று நீரைத்தான் தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணை, கேஆர்பி அணை, சாத்தனூர் அணைகள் நம்பி இருக்கின்றன. ஓசூர் கெலவரப்பள்ளி அணை மூலமாக 8 ஆயிரம் ஏக்கர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை மூலம் 9ஆயிரத்து 200 ஏக்கர், பாரூர் ஏரி மூலமாக 2 ஆயிரத்து 500 ஏக்கர், சாத்தனூர் அணை மூலம் 23 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 43 ஆயிரம் ஏக்கர் பாசனமே இந்த தென்பெண்ணை ஆற்றை நம்பியே இருக்கிறது.

இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்று நீரை 24 மணி நேரமும் உறிஞ்சி ஏரிகளை நிரப்பும் திட்டத்தை கர்நாடகா செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. முதல் கட்டமாக கர்நாடகாவின் முகளூர் தத்தனூரில் நீரை உறிஞ்சி முகளூரில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட கீழ் தொட்டியில் தண்ணீரை தேக்கி, அங்கிருந்து மண்ணுக்கு அடியில் குழாய் பதித்து 11 கி.மீ., தொலைவில் உள்ள 150 ஏக்கர் பரப்பில் உள்ள லக்கூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 129 ஏரிகள் இதே முறையில் நிரப்ப கர்நாடகா திட்டமிட்டிருக்கிறது. . எந்த எதிர்ப்பு வந்தாலும் எவ்வளவு செலவானாலும் சொந்த செலவிலாவது இத்திட்டத்தை நிறைவேற்றுவேன் கர்நாடகா எம்.எல்.ஏ. கிருஷ்ணாசெட்டி அறிவித்தும் இருக்கிறார்.

வழக்கமாக தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஓசூரின் கெலவரப்பள்ளி அணைக்கு 300 கன அடி நீரும்; மழைக் காலத்தில், 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கன அடி நீரும் வரத்து இருக்கும். ஆனால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா நீரை உறிஞ்சத் தொடங்கிய உடனேயே இந்த வரத்து 120 கன அடியாக அப்படியே குறைந்து போய்விட்டதால் விவசாயிகள் உறைந்து போயுள்ளனர்.

ஏற்கெனவே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த அணையைக் கட்ட விடமாட்டோம் என்று ஏற்கெனவே தமிழக சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்திருந்தார். தற்போது அணைக்குப் பதிலாக இப்படி ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு வரக் கூடிய தென்பெண்ணை ஆற்று நீரையே உறிஞ்சி 130 ஏரிகளை நிரப்பக் கூடிய படுபாதக நடவடிக்கையை கர்நாடகம் தொடங்கியே விட்டது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களை பாலைவனமாக்கும் இந்தத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும். கர்நாடகாவின் இந்த வஞ்சகத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

கர்நாடகாவின் இந்த அடாவடித்தனமான திட்டத்தை கைவிடும் வகையில் ஓரிரு நாட்களில் 5 மாவட்ட விவசாயிகளையும் பொதுமக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

English summary
TVK founder T. Velmurugan blamed Karnataka for Thenpennai river blocked to Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X