For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

By Siva
Google Oneindia Tamil News

Jayalalithaa
சென்னை: ஐ.ஏ.எஸ். தேர்வை மாணவர்கள் மீண்டும் தமிழில் எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இந்த ஆண்டில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் முறையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நாட்டில் இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு எதிராகவும், மாற்றத்தால் ஏற்படும் சாதக பாதக அம்சங்களைப் பற்றி சீர்தூக்கிப் பார்க்காமலும் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் முறையில் 4 பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இது, தமிழக மாணவர்களின் நலனை குறிப்பாக கிராமப்புற மாணவர்களை கடுமையாகப் பாதிக்கும். முதலாவதாக, உயர்நிலைப் பள்ளி வரை தமிழ் வழியில் படித்த மாணவர்கள், பின்னர் பட்டப்படிப்பை ஆங்கில மொழியில் படித்திருந்தாலும், சிவில் சர்வீஸ் மெயின் தேர்வை தமிழில் எழுத அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், புதிய முறையில் தமிழ் வழியில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் மட்டுமே, சிவில் சர்வீஸ் மெயின் தேர்வை தமிழில் எழுத முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழக மாணவர்களுக்கு தாய் மொழியான தமிழில் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு எழுதும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்தி மொழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு இதுபோன்ற நிபந்தனை விதிக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையில் இந்தி மொழியும், தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டு உள்ளன.

இருந்தாலும், இந்தப் புதிய முறை காரணமாக, தமிழ் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ள பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.இது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 16-ஐ மீறுவதாகும். அதோடு மட்டுமல்லாமல் மெயின் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதும் மாணவர்களோடு ஒப்பிடுகையில் தமிழ் மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.

இரண்டாவதாக தமிழ் உள்பட பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் மட்டுமே மெயின் தேர்வில் அந்த மொழி இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முடியும். இது, ஆட்சேபணைக்குரிய, பாகுபாடு கொண்ட மாற்றம் ஆகும். ஆனால், மற்ற விருப்பப் பாடத்தில் இத்தகைய நிபந்தனை விதிக்கப்படவில்லை.எனவே, இந்த மாற்றம் நியாயமற்றது. எனவே, பி.எஸ்சி கணிதம் படித்த ஒருவர் வரலாற்றுப் பாடத்தை விருப்பப் பாடமாக எடுக்க முடியும். ஆனால், தமிழ் இலக்கியத்தை அவரால் விருப்பப் பாடமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது முற்றிலும் நியாயமற்றது, பாகுபாடானது, முரண்பாடானது ஆகும்.

யு.பி.எஸ்.சி. செய்துள்ள மூன்றாவது மாற்றத்தின்படி, குறிப்பிட்ட பிராந்திய மொழியில் தேர்வு எழுத குறைந்தபட்சம் 25 பேர் இல்லாவிட்டால், அந்த மொழியில் தேர்வு எழுத அனுமதி கிடையாது. அவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே மெயின் தேர்வு எழுதியாக வேண்டும். இது, முற்றிலும் விளங்காத, பாகுபாடு உள்ள மாற்றம் ஆகும். அதோடு மட்டுமல்லாமல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமையை மீறும் செயல். நான்காவது மாற்றத்தின்படி, தமிழ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு இந்திய மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுவிட்டது. புதிதாக ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுதல், சுருக்கி எழுதுதல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கொண்ட ஆங்கிலத் தேர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது.

முன்பு ஆங்கிலத் தேர்வு வெறுமனே தேர்ச்சிக்காக மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. ஆனால், புதிய முறையில் ஆங்கிலத் தேர்வு மதிப்பெண்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றம் நகர்ப்புற, ஆங்கிலம் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு பாதகமாகவும் இருக்கும்.யு.பி.எஸ்.சி. செய்துள்ள இந்த 4 மாற்றங்கள் வெறுப்பூட்டக்கூடியதாகவும், பாகுபாடு கொண்டதாகவும் அமைந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல் இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் தமிழ் உள்பட பிராந்திய மொழிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள சமத்துவத்திற்கு எதிரானதாகவும் உள்ளன. இந்த மாற்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 16-ல் கூறப்பட்டுள்ள அரசுப்பணிக்கான சமத்துவ உரிமையை மீறும் செயலாகும்.

பள்ளிப்படிப்பு வரை தனது தாய் மொழியிலும், பட்டப்படிப்பை ஆங்கில வழியிலும் படித்திருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இந்த மாற்றங்கள் பெரும் பாதகமாக அமையும். கூட்டாட்சி முறையில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அதேபோல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும். மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் யு.பி.எஸ்.சி. கொண்டு வந்துள்ள மேற்கூறிய மாற்றங்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவை, தன்னிச்சையானவை ஆகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று உயர் அதிகாரிகளாக ஆகும் வாய்ப்பை தடுக்கும். கடைசியாக நாட்டின் நிர்வாகத்திற்கு தடை ஏற்படுத்துவதாக அமையும்.

எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு முறையில் செய்யப்பட்டு உள்ள நியாயமற்ற, பாகுபாடான, வெறுப்பூட்டும் மாற்றங்களை மறுபரிசீலனை செய்யுமாறு யு.பி.எஸ்.சி. வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்த பிரச்சினை சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் ஆயிரக்கணக்கான தமிழக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதால் தங்களின் விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalithaa has written a letter to PM Manmohan Singh asking him to take action in such a way so that TN students can write the civil services exam in tamil just like before.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X