For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க தீர்மானத்தை பலவீனப்படுத்தியதன் பின்னணியில் இந்தியாவும் இலங்கையும்: விஜயகாந்த்

By Chakra
Google Oneindia Tamil News

Vijaykanth
சென்னை: ஐ.நா. சபையின் மனித உரிமை கவுனிசிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த கடுமையான தீர்மானத்தை இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து பலவீனப்படுத்திவிட்டன என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள இனவெறி அரசு தமிழ் இனத்திற்கு எதிராக மூன்று வகையான குற்றங்களை இழைத்து இருக்கிறது. ஒன்று மனித உரிமை மீறல், இரண்டாவது போர்க் குற்றம், மூன்றாவது இனப் படுகொலை.

தற்பொழுது ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் மனித உரிமைக் குழுவின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் மனித உரிமை மீறல் பற்றி மட்டுமே பேசப்படுகிறது.

அமெரிக்கா இக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக முதலாவதாக ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது. அதில் சுதந்திரமான, நம்பத்தகுந்த சர்வதேச விசாரணையும், ஐ.நா. மன்ற அதிகாரிகள் இலங்கை அரசின் சம்மதம் இல்லாமலேயே சென்று விசாரிக்கவும் வகை செய்தது.

வரும் 21ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள அமெரிக்காவின் இறுதித் தீர்மானத்தில் இந்த இரண்டு அம்சங்களும் நீர்த்துப் போக செய்துள்ளனர்.

இலங்கை அரசின் அனுமதி பெற்றுதான் அங்கு விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஐ.நா. அதிகாரிகள் செல்ல வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முதலில் கொண்டு வந்த தீர்மானத்தை பலவீனப்படுத்தியதின் பின்னணியில் இந்தியாவும், இலங்கையும் உண்டு.

ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடக் கூடாது என்பதை பலமாக இந்தியா ஆரம்பம் முதல் வற்புறுத்தி வருவதனால், இந்தியாவின் கருத்தை ஏற்று அமெரிக்கா இந்தத் திருத்தத்தை செய்துள்ளது. ஆகவே திருத்தம் செய்யப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் அதில் ஒன்றும் வியப்பில்லை. அதனால் பலனும் இல்லை.

ஆனால் இத்தகைய தீர்மானத்தின் மூலம் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதுதான் கேள்வி. எவ்வகையிலும் சிங்கள இனவெறி அரசிற்கு பாதகம் இல்லாமல் பார்த்துக் கொள்வதிலேயே இந்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

இதை நன்கு உணர்ந்த தமிழ்நாட்டு மாணவர்கள் இன்று இத்தகைய வஞ்சகப் போக்கை எதிர்த்து நாடு முழுவதும் அறப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

மாணவர்களின் தூய்மையான நோக்கம் நிறைவேறும் என்பதை கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திலே நாம் கண்டோம்.

அதே போன்று இன்றும் பாதிக்கப்பட்ட தமிழ் ஈழ மக்களுக்கு உண்மையான பரிகாரம் தேடும் வரையில் மாணவர் போராட்டம் ஓயாது என்பதை நாம் நன்கு உணர முடிகிறது.

ஒரு குடும்பத்திற்கு பாதுகாப்பு சொந்த வீடு, ஒரு இனத்திற்கு பாதுகாப்பு சொந்த நாடு. ஆகவே தங்களுக்கென ஒரு தாய் நாடு வேண்டும் என்று போராடும் தமிழர்கள் பக்கம் மாணவர்கள் சக்தி திரண்டு எழுந்துள்ளதை தே.மு.தி.க. சார்பில் நான் முழு மனதோடு வரவேற்று ஆதரிக்கிறேன்.

எனவேஇப்பொழுது கிடைத்திருக்கிற இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் இலட்சியம் நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனறு கூறியுள்ளார் விஜய்காந்த்.

English summary
India has helped Srilanka by diluting the UNHRC resolution brought against it by US
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X