For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனி ஈழம் .. தமிழக அரசின் தீர்மானம், ஒரு திருப்புமுனை: நாம் தமிழர் கட்சி

Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழினத்தை கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக திட்டமிட்டு அழித்துவரும் இலங்கை அரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு தனி தமிழ் ஈழத்தை அமைக்க, இலங்கையில் வாழும் தமிழர்களிடமும், புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் ஒரு பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றம் நடத்திட வேண்டும் என்கிற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் முன்மொழிந்து நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைப்பின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்புமுனையாகும். தமிழீழ மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை தாய்த் தமிழ்நாட்டின் சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது, இராஜதந்திர ரீதியிலான ஒரு அழுத்தத்தை இந்திய மத்திய அரசுக்கு ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு அழுத்தமான செய்தியுமாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தமிழக முதல்வர், தமிழினத்தை அழித்தொழித்த சிங்கள பெளத்த இனவாத அரசு நடத்திய போருக்கு இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, ஆயுதம் அளித்ததையும், பயிற்சி அளித்ததையும், ஆலோசனை வழங்கியதையும், மிக நவீனமாக ராடார் கருவிகளை வழங்கியதையும், இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள் இலங்கைக்குச் சென்று உதவியதையும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளதன் மூலம், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மட்டுமின்றி, சர்வதேச அரங்கில் இலங்கை அரசை, தனது ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி காப்பாற்றி வரும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் முகமூடியை கிழத்தெறிந்துள்ளார் தமிழக முதல்வர். அதற்காகவும் தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி பாராட்டுகிறது.

தமிழினத்தை ஒட்டுமொத்த அழித்தொழிக்கும் திட்டத்துடன் நடத்தப்பட்ட அந்த போரில் சிறு பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் என்று தங்கள் சொந்தங்களை பல்லாயிரக்கணக்கனில் இழந்த நம் ஈழத்து சொந்தங்களுக்கும், நாட்டை விட்டு துரத்தப்பட்டு தமிழ்நாட்டில் அகதிகளாய் வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கும் தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானம் நம்பிக்கையைத் தருவதாகவுள்ளது.

தமிழினத்தின் விடுதலைக்காகவும், உரிமை மீட்பிற்காகவும் உழைத்துவரும் நாம் தமிழர் கட்சி, தமிழக முதல்வருக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுவிக்க விரும்புகிறது. இன்றைக்கு தமிழினத்திற்காக பேசுவதற்கு உலகில் ஒரு நாடு கூட இல்லாத நிலையில், தமிழினத்தின் உணர்வையும், நமது அழுத்தமான கோரிக்கைகளையும் ஐ.நா. அவையின் தலைமை பொதுச் செயலர் பான் கீ மூனை சந்தித்துத் தெரிவிக்க தமிழக சட்டமன்றக் குழு ஒன்றை தமிழக அரசு அனுப்ப வேண்டும்.

மத்திய அரசின் அங்கீகாரமற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி, அங்குள்ள அகதிகள் முகாமில் தமிழர்கள் நன்றாக நடத்தப்படுகிறார்கள் என்று பொய்யான ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்குவது அனுமதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவை ஏன் ஐ.நா.பொதுச் செயலரை சந்திக்க அனுப்பக் கூடாது?

அப்படி ஒரு குழுவை அனுப்பி, தமிழினத்தின் உணர்வையும், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் செயலருக்கு விளக்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். அதுவே இத்தருணத்தில் செய்திட வேண்டிய சரியான பணியாக இருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar chief Seeman has hailed TN assembly solution on Tamil Ealam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X