For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் 'இவர்களா? அவர்களா?' நடத்திய 'நீயா நானா' கோபிநாத்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் நடந்த அமீரகத் தமிழ் மன்றத்தின் 13வது ஆண்டு விழாவில் நீயா நானா புகழ் கோபிநாத் இவர்களா? அவர்களா? என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.

கணினியில் தமிழ் பரப்புவதை கடந்த 13 ஆண்டுகளாகச் செய்து வரும் அமீரகத் தமிழ் மன்றம் தனது ஆண்டு விழாவை துபாய் பெண்கள் உயர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. தமிழர் பாரம்பரியத்தோடு மன்றத்தின் உறுப்பினர்கள் வேட்டி அணிந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியை மிகக் குறித்த நேரத்தில் துவங்கினர்.

அமைப்பின் பொருளாளர் ஃபாரூக் அலியாரின் திரைப்பாடலோடு தொடர்ந்த நிகழ்ச்சியில் நிவேதிதா குழுவினரின் நவீன மேற்கத்திய அமைப்பில் உருவான சல்சா மற்றும் டான்கோ கலவை நடனமும் இடம்பெற்றது. அடுத்ததாக சேது சுப்ரமணியன் தனது பல குரல் நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களை நகைச்சுவையில் கட்டிப் போட்டார். அதனைத் தொடர்ந்து ஷப்னம் ஒரு பாடலைப் பாடி அரங்கினரை மகிழ்வித்தார்.

கணினியில் தமிழை உள்ளீடு செய்வது எவ்வாறு என்பது குறித்த விளக்கக் காணொளிக் காட்சியை அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ஆசிப் மீரான் சிறப்புற விளக்கினார். கணினியில் தமிழை உள்ளிடுவது மட்டுமல்லாமல், அதிநவீன செல்லிடை பேசிகளில் தமிழை உள்ளீடு செய்வது குறித்த விளக்கத்தையும் அவர் வழங்கியபோது உலகின் தொன்மையான மொழியாக இருந்தபோதும் அதிநவீன காலத்திற்கேற்ற நெகிழ்வுத்தன்மையும் தமிழ் மொழிக்கு இருப்பதை அவர் சுட்டிக் காட்டியபோது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் விழாவிற்கு வந்திருந்தவர்களை தமிழ் மன்றத்தின் சார்பில் நிர்வாகக் குழு உறுப்பினர் அமீரா அமீன் வரவேற்க, அமீரகத் தமிழ் மன்றத்தின் கடந்த கால செயல்பாடுகளையும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த செயல்திட்டங்களையும் அமைப்பின் செயலாளர் அகமது முகைதீன் தனது செயலாளர் உரையில் எடுத்துரைத்தார்.

'தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் கட்டத்தில் கூட அவர்களுக்குத் தமிழ் மீது இருக்கும் ஆர்வம் பல மடங்கு மிகுந்து விடுவதைக் கண்கூடாகக் காண்பதாக விழாவில் சிறப்புரையாற்ற வந்திருந்த அவனி மாடசாமி குறிப்பிட்டார். கடல் கடந்து வாழும் நிலையிலும் குடும்பத்தோடு தமிழ் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்ளும் தமிழர்களைக் கண்டு மகிழ்வதாகவும் இதுபோன்ற ஒருங்கிணைப்புகள் தமிழர்களுக்கிடையில் நெருக்கமான உறவை வளர்க்க உதவும் என்று குறிப்பிட்ட அவர் தனது 15 நிமிட பேச்சின் மூலம் பார்வையாளர்களை தன் வசப்படுத்தினார்.

ஈடிஏ குழுமங்களின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான அன்வர் பாஷா தனது வாழ்த்துரையில் அமீரகத் தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளின் சிறப்பினைப் பாராட்டி மகிழ்ந்தார். விழாவிற்கு தலைமையேற்ற ஈடிஏ குழுமங்களின் நிர்வாக இயக்குனர் சையது சலாஹுதீன் தனது உரையில் எத்தனையோ தமிழ்ச்சங்கங்கள் இருந்தாலும் அமீரகத் தமிழ் மன்றத்தின் தமிழ் தொடர்பான சேவைகள் மிகச் சிறப்பாக இருப்பதாகவும், கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு மன்றத்தின் நிர்வாகத்தில் 50 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருவதாகவும் குறிப்பிட்டு மன்றத்தின் சேவைகளைப் பாராட்டினார்.

சிறுவர், சிறுமியரின் கிராமிய நடனம்

சிறுவர், சிறுமியரின் கிராமிய நடனம்

அமீரகப் பள்ளிகளில் படிக்கும் மாணவியரின் கிராமிய நடனமொன்று நிவேதிதா தலைமையில் அரங்கேறி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

சிறப்பு விருந்தினர் பிரபு சாலமன்

சிறப்பு விருந்தினர் பிரபு சாலமன்

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குனர் பிரபு சாலமன் தனது சிறப்புரையில் தனது படங்கள் குறித்தும் எவ்வாறு எத்தனையோ கசப்புகளைச் சந்தித்தும் தனக்கான நேரம் வரும் வரை பொறுமையுடன் காத்திருந்தது குறித்தும், வெற்றி என்பது ஒரே நாளில் நிகழ்வதில்லை என்பது குறித்தும் அழகாக பேசினார்.

சர்ச்சைகளுக்காகப் படமெடுத்து அடுத்தவர்களின் உணர்வுகளோடு விளையாடுவதோடு தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியபோது அரங்கம் அதிர்ந்தது. தனது படத்தில் காதலர்கள் இறுதியில் இணையாமல் போவதால் தான் காதலுக்கு எதிரி என்று சிலர் நினைப்பதாகவும் ஆனால் தனது கதாபாத்திரங்களின் தன்மைக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு மட்டுமே தான் திரைக்கதையை எழுதுவதாகவும் குறிப்பிட்ட அவர், கதாநாயகர்களிடம் கதை சொல்வதை விட பார்வையாளர்களுக்கு நேரடியாகக் கதை சொல்வதே தனக்குப் பிடிக்கிறதென்றும் இனி வரும் காலங்களிலும் தனது பார்வையாளர்களை ஏமாற்றி விடாமல் குடும்பத்தோடு ரசிக்கும் படங்களை மட்டுமே தருவேன் என உறுதியளிப்பதாவும் சிறப்புறப் பேசினார். இதையடுத்து அவர் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தங்க மீன்கள் காணொலி பார்த்த பார்வையாளர்கள்

தங்க மீன்கள் காணொலி பார்த்த பார்வையாளர்கள்

பல்குரல் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாகப் பல குரலிலும் பேசி அரங்கம் அதிரச் செய்தார் சேது. இதுவரை நடந்திராத வகையில் அடுத்தடுத்து வெவ்வேறு குரல்களில் அவர் பேசப் பேச அரங்கம் நகைச்சுவையாலும் கைத்தட்டல்களாலும் நிறைந்தது.

'கற்றது தமிழ்' இயக்குனர் ராம் இயக்கிய 'தங்க மீன்கள்' படத்தில் அமீரகத் தமிழ் மன்றத்தின் உறுப்பினரான வெங்கடேஷ் அவர்களின் மகள் சாதனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை முன்னிட்டு அந்தப் படத்தின் முன்னோட்டக் காணொளிக் காட்சியை அரங்கில் ஒளிபரப்ப, துபாயில் வளர்ந்த சிறுமி தமிழ்த்திரையுலகில் கால் பதிப்பதில் தாம் அடையும் மகிழ்ச்சியை தமது கரவொலியால் வெளிப்படுத்தினர் அரங்கத்தில் இருந்தவர்கள்.

இவர்களா? அவர்களா? நடத்திய நீயா நானா கோபிநாத்

இவர்களா? அவர்களா? நடத்திய நீயா நானா கோபிநாத்

'உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள அவசியம் பணமா? அன்பா?' என்ற தலைப்பில் தொடர்ந்த 'இவர்களா? அவர்களா?' விவாத அரங்க நிகழ்ச்சியை கோபிநாத் நடத்தினார். அமீரகத்தின் முன்னணிப் பேச்சாளர்கள் பங்கு பெற்ற இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை அந்தப் பின்னிரவு வேளையிலும் ரசித்து மகிழ வைத்தது. 'உலக மயமாகி விட்ட சூழலில் அன்பும் வணிக மயமாகிவிட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்பட்டாலும் அன்பே சாஸ்வதமானது என்பதை நாம் நம்பித்தானாக வேண்டும். குழந்தைகள் உலகம் அதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது' என்று அன்பே அவசியமென அவர் தீர்ப்பளித்த போது அரங்கம் உற்சாகக் கரவொலி எழுப்பி அவரை ஆதரித்தது.

விழாவின் ஆரம்ப நிகழ்ச்சிகளை அமைப்பின் ஆலோசகர் ஜெஸிலா தொகுத்து வழங்கினார். மிகப் பிரமாண்டமான இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர் நஜ்முதீன், கலைச் செயலாளர் இரமணி, செயற்குழு உறுப்பினர்கள் மகேஷ், பர்வீன், பென்னியல் கணேஷ், சரவணன், தௌலா ஆலோசகர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புறச் செய்திருந்தனர். தலைவர் ஆசிப் மீரான் இறுதியில் நன்றியுரையாற்றினார்.

English summary
Vijay TV Neeya Naana fame Gopinath conducted Ivargala? Avargala? in Dubai as part of the UAE Tamil Mandram's 13th anniversary celebration held in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X