• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராமேஸ்வரம் அருகே பயங்கர மோதல்.. துப்பாக்கிச் சூடு, பெட்ரோல் குண்டு வீச்சு

|

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடம் என்ற இடத்தில் கிரிக்கெட் விளையாட்டின்போது மோதல் வெடித்தது. இது கலவரமாக மாறியது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. போலீஸார் கலவரத்தைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தங்கச்சிமடம் சந்தியாகப்பர் ஆலயம் அருகே நேற்று பகல் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதைத்தொடர்ந்து ஒருவரை ஒருவர் அடிதடியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி இருதரப்பினரும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து இருதரப்பையும் சேர்ந்த ஆதரவாளர்கள் கும்பலாக அங்கு வந்தனர். அவர்கள் திடீரென்று மோதிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அங்கிருந்து அவர்கள் சிறிது தொலைவில் உள்ள ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தனர். அங்கும் அவர்கள் ஆயுதங்களால் மோதிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி மணிவண்ணன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் விரைந்து வந்தனர்.

கடந்த 22-ந்தேதி ஆட்டோ டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலையொட்டி ஏற்கனவே ராஜபாளையம் பட்டாலியனில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோஷ்டிகளாக மோதிக் கொண்டவர்களை தடுத்து விரட்டியடித்தனர். இதில் ஒரு தரப்பினர் தங்கச்சிமடம் பகுதி வரை விரட்டியடிக்கப்பட்டனர்.

மற்றொரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் ரோட்டில் உட்கார்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமான ஆண்கள் கைகளில் ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர்.

இதைப் பார்த்ததும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் ரோடு போடுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த சரளைக் கற்களை எடுத்து போலீசாரை நோக்கி அந்த கும்பல் வீசியது. பெட்ரோல் குண்டுகளையும் வீசினார்கள்.

இதில் தங்கச்சிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ், ராஜபாளையம் பட்டாலியனைச் சேர்ந்த போலீசார் கோகுலகிருஷ்ணன், காத்தணன் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் வேன் உள்ளிட்ட வாகனங்களும் கல்வீச்சில் சேதமடைந்தன.

இதைத்தொடர்ந்து துப்பாக்கிசூடு நடத்த டிஎஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார். உடனே போலீஸ்காரர் நாராயணன் என்பவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டார். இதனை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சிதறி ஓடியது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன், ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மோதல் நடந்த தங்கச்சிமடம் சந்தியாகப்பர் ஆலய பகுதியில் உள்ள சவுக்குத்தோப்புக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அங்கு கத்தியுடன் பதுங்கி இருந்த ஒருவர் உள்பட 12 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில் தங்கச்சிமடம் மாந்தோப்பை சேர்ந்த மாக்லின், சேசு, போர்பஸ் மற்றும் இரு தரப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து எஸ்.பி. மயில்வாகனன் கூறுகையில்,

தங்கச்சிமடம் பகுதியில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்து அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலை தடுத்தபோது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனதால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

இந்த மோதலில் ஈடுபட்டது தொடர்பாக 12 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதியில் போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Police used firing to calm down a clash which erupted near Rameswaram and few policemen and villagers were injured in the incident.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X