For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கதிரவனைக் கொன்றது ரவுடி காதுகுத்து ரவி?...இணை கமிஷனரிடம் சரணடைந்தார்!

Google Oneindia Tamil News

சென்னை: சங்கரராமன் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான கதிரவனைக் கொலை செய்தது பிரபல ரவுடி காது குத்து ரவி என்று சந்தேகிக்கப்படுகிறது. காதுகுத்து ரவியை காப்பாற்ற பெருமளவில் பணமும் கைமாறியுள்ளது. இந்த நிலையில் இணை ஆணையர் முன்னிலையில் காதுகுத்து ரவி போலீஸில் சரணடைந்தான்.

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வைத்து, அந்த கோவிலின் மானேஜர் சங்கரராமன் கடந்த 2004-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் கதிரவன்(41). இவர் சென்னை கே.கே.நகர் சத்தியா கார்டன், வி.வி.கிரி தெருவில் வசித்து வந்தார்.

கடந்த 21-ந் தேதி அன்று கதிரவன் காரில் திருப்பதிக்கு புறப்பட்டார். வீட்டு அருகில் உள்ள சர்வ சக்தி விநாயகர் கோவில் முன்பு வைத்து, 2 கார்களில் வந்த மர்ம கும்பல், கதிரவன் வந்த காரை மடக்கினார்கள். காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய கதிரவன், மர்ம ஆசாமிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் மதுரை மாட்டுத்தாவணி சுந்தர் மற்றும் ராஜேஷ் என்ற யமஹா ராஜேஷ், சரவணன், ஒல்லி ராஜேஷ், மாதவன், அமீர், ராஜேஷ்கண்ணா, நாகபூஷணம் ஆகிய 8 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களில் மாட்டுத்தாவணி சுந்தர்தான் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர்.

கொலையாளிகளுக்கு 2 கார்களை சப்ளை செய்தது இவர்தான் என்று தெரிய வந்துள்ளது. அந்த 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் 8 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் ராஜேஸ்தாஸ், இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர் பகலவன் ஆகியோர் மேற்பார்வையில், அசோக்நகர் உதவி கமிஷனர் அசோக்குமார், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் மதிஅழகன் ஆகியோர் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விசாரணையில் கதிரவனை கொலை செய்ததை இந்த 8 பேர் கும்பல் ஒப்புக்கொண்டுள்ளனர். சென்னை பூந்தமல்லி கோர்ட்டு அருகே கடந்த 2010-ம் ஆண்டு, சின்னா என்ற சின்னகேசவலு என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே, கதிரவனை போட்டுத்தள்ளியதாக, இந்த கொலை வெறிகும்பல் 8 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கதிரவன் தன்னிடம் 2 கள்ள துப்பாக்கிகளை தனது பாதுகாப்புக்காக வைத்திருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கள்ள துப்பாக்கிகளை கதிரவன் தனது வீட்டில் மறைத்து வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். எனவே கதிரவன் வீட்டிலும், பக்கத்தில் உள்ள அவரது அக்காள் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கள்ள துப்பாக்கி எதுவும் சிக்கவில்லை.

ஆனால் கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாக, சோதனையில் கதிரவன் அக்காள் வீட்டில் இருந்து ரூ.74 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப்பணம் கத்தை,கத்தையாக சிக்கியது.

இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்று போலீசாருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த பணம் கதிரவனின் பணமாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் இதுபற்றி விசாரித்த போலீசாருக்கு நம்ப முடியாத திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,

கதிரவன் கொலை செய்யப்பட்ட பிறகு, 3 பெண்கள் திடீரென்று, கதிரவன் வீட்டிற்கு காரில் வந்துள்ளனர்.அவர்கள் ஒரு சூட்கேஸ் நிறைய பணத்தை கதிரவனின் தாயாரிடம் கொடுத்து, இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துள்ளனர். ஆனால் கதிரவனின் தாயார் அந்த பணத்தை வாங்க மறுத்துள்ளார். நீங்கள் யார்? எதற்காக இந்த பணத்தை கொடுக்கிறீர்கள்? என்று அதட்டலாக கேட்டுள்ளார்.

வந்த 3 பெண்களும், பணம் உள்ள சூட்கேசை கதிரவன் வீட்டிலேயே வலுக்கட்டாயமாக வைத்துள்ளனர். இந்த பணத்தை வைத்துக்கொண்டு, அதற்கு கைமாறாக, கதிரவன் கொலை வழக்கில் காதுகுத்து ரவியை குற்றவாளியாக போலீசார் போட்டால், அதை மறுக்க வேண்டும்,காதுகுத்து ரவி, கதிரவனின் நண்பன் என்று சொல்ல வேண்டும், என்று அந்த 3 பெண்களும் மிரட்டலாக கூறியுள்ளனர். பின்னர் அந்த 3 பெண்களும் வேகமாக காரில் ஏறி சென்று விட்டார்களாம்.

ரூ.74 லட்சம் பணம் கதிரவன் வீட்டுக்கு வந்த இந்த கதையை கதிரவனின் தாயார் போலீசாரிடம் ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவித்து விட்டார். எவ்வளவு இருக்கிறது என்று, அந்த பணத்தை நாங்கள் தொட்டுக்கூட பார்க்கவில்லை என்றும், கதிரவனின் தாயார் மேலும் கூறினார்.

அதன்பிறகுதான் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை கொடுத்ததாக ரவுடி காதுகுத்து ரவியின் 3-வது மனைவி என்று சொல்லப்படும் பானுமதி, அவரது உறவுப்பெண்கள் மல்லிகா, அறிவுச்செல்வி, சந்தியா மற்றும் ஜான்சன், வெங்கடேசன் ஆகியோரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கதிரவன் கொலைக்கு பல கோடி பணம் கூலியாக சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது என்றனர்.

இதற்கிடையில் காதுகுத்து ரவி, நேற்று மாலை பரங்கிமலையில் உள்ள தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, சரண் அடைந்தார். இவர், வந்த தகவலை அறிந்ததும் கே.கே.நகர் போலீசார் வந்து விசாரணைக்காக அவரை அழைத்து சென்றனர்.

காதுகுத்து ரவிக்கு இந்த கொலையில் உள்ள தொடர்பு குறித்து இனிதான் தெரிய வரும்.

English summary
Notorious don Kathukuthu Ravi has been surrendered before police in Kathiravan murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X