For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையே தவறு.. ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: இந்தியாவில், கச்சா எண்ணெயை எடுப்பதற்கு ஆகும் செலவு; அதை டீசலாகவும் பெட்ரோலாகவும் சுத்திகரிக்க ஆகும் செலவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை, நிர்ணயம் செய்யப்பட்டால் குறைவான விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மக்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இதன் மூலம், விலைவாசியும் கட்டுக்குள் இருப்பது, உறுதி செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

விலைவாசி உயர்வு குறித்து சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில்,

நம் நாட்டிற்குத் தேவையான கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 25 சதவீத எண்ணெய் இந்தியாவிலேயே கிடைக்கிறது. இதனை, சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றி எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. மீதமுள்ள, 75 சதவீதம் கச்சா எண்ணெய் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அதனைச் சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.

ஆனால், விலை நிர்ணயமோ கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, சமநிலை விலையில் கூட இல்லாமல், டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சமநிலை விலையை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வாறு, செயற்கையாக நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு குறைவாக உள்ள விலையைத் தான் எண்ணெய் நிறுவனங்கள் குறை பலன் என்று சொல்கின்றன.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் தற்போது, சென்னை மாநகராட்சி மூலம், ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு, ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய் என்ற விலைக்கு கொடுக்கிறது.

இட்லி மற்றும் சாம்பார் தயாரிப்பதற்குத் தேவையான இதர பொருட்களை சென்னை மாநகராட்சி வெளிச் சந்தையில் வாங்கிக் கொள்கிறது. இது தவிர, நிர்வாகச் செலவும் சென்னை மாநகராட்சிக்கு ஏற்படுகிறது. இதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு, ஒரு இட்லிக்கு ஏற்படும் செலவு 1 ரூபாய் 86 காசு ஆகும். எனவே, சென்னை மாநகராட்சிக்கு ஒரு இட்லிக்கு 86 காசு இழப்பு ஏற்படுகிறது. இது தான் உண்மையான இழப்பு. இவ்வாறு கணக்கிடாமல் தனியார் உணவகங்களில் விற்கப்படும் ஒரு இட்லியின் விலையான 10 ரூபாயோடு ஒப்பிட்டு சென்னை மாநகராட்சிக்கு 9 ரூபாய் இழப்பு என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? இவ்வாறு ஒப்பீடு செய்து தான் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு குறை பலன் என்று சொல்கின்றன.

பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையும் தவறு, எண்ணெய் நிறுவனங்கள் குறை பலன் என்று சொல்வதும் தவறு.

இந்த விலைக் கொள்கை, தவறானது என்பதால் தான் மத்திய நிதி அமைச்சகத்திற்கும், பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுமதி சமநிலை விலை, அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறி வருகிறது. அவ்வாறு செய்யப்பட்டால், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு லிட்டர் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2 ரூபாய் அளவுக்கு மானியத்தை குறைக்க முடியும் என்றும் சொல்லி வருகிறது. ஆனால், பெட்ரோலியத் துறை அமைச்சகம் அவ்வாறு செய்தால் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்து, பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த டீசல் விலை நிர்ணயத்திலும் இரட்டை விலைக் கொள்கையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதாவது, மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே போன்றவற்றிற்கு ஒரு விலையும், சில்லரை விலையில் வாங்குபவர்களுக்கு ஒரு விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நிதிமன்றம், இந்தக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு முன்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவில், மொத்தமாக டீசல் கொள்முதல் செய்பவர்களுக்கு மானியமில்லாமல் டீசல் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவு மத்திய அரசின் கொள்கை முடிவு என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அதாவது, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின்படி அவை பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன என்று மத்திய அரசு ஒரு புறம் கூறிக் கொண்டிருந்தாலும், இந்த மனுவில் இந்த டீசல் விலைக் கொள்கை மத்திய அரசின் கொள்கை என்பதை பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளது.

இது போன்ற மக்கள் விரோதக் கொள்கையை வகுத்த மத்திய காங்கிரஸ் அரசில் தான் சமீப காலம் வரை திமுக அங்கம் வகித்தது. அது மட்டுமல்ல. இந்த மக்கள் விரோதக் கொள்கை முடிவினை எடுத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியும் உறுப்பினராக இருந்தார் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்தியாவில், கச்சா எண்ணெயை எடுப்பதற்கு ஆகும் செலவு; அதை டீசலாகவும் பெட்ரோலாகவும் சுத்திகரிக்க ஆகும் செலவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை, நிர்ணயம் செய்யப்பட்டால் குறைவான விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மக்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இதன் மூலம், விலைவாசியும் கட்டுக்குள் இருப்பது, உறுதி செய்யப்படும்.

இதே போன்று, சமையல் எரிவாயு விநியோகத்திலும் ஆண்டு ஒன்றுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டினை மத்திய அரசு விதித்துள்ளது.

காய்கறிகள் மற்றும், பழங்களின் விலைகள் தமிழ்நாடு மற்றும், வெளிமாநில விளைச்சல்களின் அடிப்படையிலும், டீசல் விலை உயர்வால் உயர்ந்து கொண்டே செல்லும் வாகனக் கட்டணத்தின் அடிப்படையிலும் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மொத்தத்தில் விலைவாசி ஏற்றம் என்பது மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஏற்படுகிறது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa on Tuesday blamed the Centre’s “wrong” economic policies for the spiralling prices of essential commodities and said there is an immediate need for change in pricing of petro products.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X