For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் நிச்சயம் தமிழ் ஈழம் மலரும் என்கிறார் யஷ்வந்த் சின்ஹா

By Shankar
Google Oneindia Tamil News

BJP supports Tamil Eelam in Sri Lanka
சென்னை: இலங்கையில் நிச்சயம் தமிழ் ஈழம் மலரும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

மேலும் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவிக்கும் துணிச்சல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று பாஜக ஏற்பாடு செய்த இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டத்தில் அவர் பேசியது:

இலங்கைப் பிரச்னை தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட பாலச்சந்திரன் படத்தைப் பார்க்கும்போது யாருக்குத்தான் துன்பம் வராது? ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் குழந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். அந்தக் குழந்தை குண்டுகளை முதுகில் வாங்கவில்லை. நெஞ்சில் வாங்கியிருக்கிறது.

வாஜ்பாய் தலைமையிலான அரசு இலங்கைப் பிரச்னையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப் பார்த்தது. ஆனால் காங்கிரஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே இலங்கைப் பிரச்னையில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.

கச்சத் தீவைக் கொடுத்தது தவறு

இந்திரா காந்தி காலத்தில் 1974-ல் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. ராஜீவ் காந்தி காலத்தில் இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பப்பட்டது. இதில் 2009 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 2005-ல் இலங்கையில் ராஜபட்ச தலைமையிலான புதிய அரசு வந்ததில் இருந்தே அவர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. இலங்கை அரசின் அனைத்து வகையான குற்றங்களுக்கும் இதுதான் காரணம்.

இலங்கையில் கிடைத்த ஆதாரங்கள், இந்தியாவில் கிடைத்த ஆதாரங்களை வைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரûஸ குற்றம்சாட்டி பேசினேன். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஒருவர்கூட குறுக்கீடு செய்யவில்லை. அப்படி என்றால் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காங்கிரஸும் காரணம் என்பதை அக்கட்சினரே கூட ஒப்புக் கொள்கின்றனர் என்றுதான் அர்த்தம்.

இனப்படுகொலைக்கு மன்மோகன் சிங்கும் ஆதரவு

2009-ல் இறுதி யுத்தம் நடந்தபோது ராஜபட்ச அரசுக்கு காங்கிரஸ் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தது. இந்தியாவின் உச்சபட்ச தலைமை வரை எங்களுக்கு உதவியிருக்கிறது என்று இலங்கை அரசு கூறுகிறது. அப்படியென்றால் மன்மோகன் சிங் வரை ஆதரவு என்றுதானே அர்த்தம்?

நட்பு எப்படி இருக்க வேண்டும்? இலங்கை அரசை இந்தியா நிர்பந்தம் செய்யுமானால், சீனா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிடும் என்று மத்திய அரசு இப்போது சாக்குபோக்கு சொல்கிறது. ஆனால் இப்போதும் இலங்கையில்தான் சீனா அமர்ந்துள்ளது. அதைத் தடுப்பதற்கு இந்தியாவால் முடிந்ததா?

நட்பு என்பது பரஸ்பரமாக ஏற்பட வேண்டுமே அல்லாமல், பயந்து, நயந்து சென்று பெறுவதாக இருக்கக் கூடாது. இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். ஆனால் காங்கிரஸ் அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையே நீர்த்துப் போகச் செய்து ஆதரித்துள்ளது.

தமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை அகற்ற வேண்டும் என்றும் கோரினேன்.

ஆனால் செவிமடுக்கப்படவில்லை. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். அந்தத் தேர்தல் சர்வதேச கண்காணிப்பின் கீழ்தான் நடத்தப்பட வேண்டும்.

இதற்கு இலங்கை அரசு ஒத்துக்கொண்டால்தான் தமிழர்கள் பற்றிய சிந்தனையில் இலங்கைக்கு மாற்றம் வந்துள்ளது என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை தவிர்த்த மற்ற உலக நாடுகளைச் சேர்ந்த ஒரு குழுவை அமைத்து இலங்கையில் போரின்போதும், போருக்குப் பிறகும் மனித உரிமை மீறல் எவ்வாறு நடைபெற்றது என்பதை ஆராய வேண்டும்.

இது தொடர்பாக நடாளுமன்றத்தில் வலியுறுத்தியபோது, வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கையில் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம் என்கிறார்.

வீடு கட்டிக் கொடுப்பது மனித உரிமைகளைப் பெற்றுத் தருவதாக அமையாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்பது இந்தியா முழுவதும் உள்ளவர்களின் கோரிக்கை. இந்தியா நினைத்தால் இதனை எளிதாகச் செய்யலாம். ஆனால் இந்தியா செய்யுமா என்பது சந்தேகம்.

தமிழீழம் மலரும்

அடக்குமுறையின் மூலமாக ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க முடியாது. அடக்குமுறை அதிகரித்தால் அப்பகுதியில் உள்ள மக்களின் சுதந்திர உணர்வும் அதிகரிக்கும். பாகிஸ்தானின் அடக்குமுறையால்தான் வங்கதேசம் உருவானது.

வடக்கு சூடான், தெற்கு சூடான் என பிரிந்திருப்பதற்கு ஆட்சியாளர்களின் அடக்கு முறைதான் காரணம். எனவே ராஜபக்சே அரசுக்கு நான் சொல்வது அடக்குமுறையைச் செலுத்தினால் ஈழம் அமைய வெகுநாள் ஆகாது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. அதனால் ராஜபக்சே அரசு திருத்திக் கொள்ள வேண்டும்.

பாஜக அரசு அமைந்தால், தமிழக மீனவர்களின் பிரச்சினை நிச்சயம் தீரும்," என்றார் யஷ்வந்த் சின்ஹா.

இந்தக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழறிஞர் அவ்வை நடராசன் உள்பட பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தெரிவிக்காமலிருந்த பாஜக, இப்போது தனித் தமிழ் ஈழம் என பேச ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP's senior leader Yashwant Sinha says that Tamil Eelam will be rising soon in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X