For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிலருக்கு திடீர் ஈழப் பாசம் வந்தது ஏன்?: விளக்கும் வீரமணி!

By Siva
Google Oneindia Tamil News

Veeramani
சென்னை: சிலருக்கு திடீர் என்று ஈழப் பாசம் வந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த 5.3.2013 அன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் கொடுத்த தீர்மானத்தினையொட்டி, மக்களவையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட விவாதம் நடைபெற்றது.

அன்று யஷ்வந்த் சின்கா (பாஜக) பேசியது என்ன?

திமுக தொடங்கி அதிமுக, பாஜக மற்றும் இடதுசாரிகள் ஏனைய அகில இந்தியக் கட்சிகளைச் சார்ந்தோர் எல்லோரும் பேசினர்.

அன்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்த, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான யஷ்வந்த் சின்கா அவர்கள் மிக அருமையாக, உருக்கமானதொரு உரையை ஆற்றி, போர்க் குற்றம்- ராஜபக்சே ஆட்சியில் எப்படி தலைவிரித்தாடியது என்று விளக்கினார்.

அதற்கடுத்து சில நாட்களுக்குப் பிறகு இலங்கை அரசின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலை பற்றி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட ஆளுங்கட்சி கூட்டிய அனைத்துக் கட்சி (நாடாளுமன்ற கட்சிகள்) கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், திருமதி சுஷ்மா சுவராஜ் என்ன கூறினார்?

சுஷ்மா சுவராஜ் (பாஜக) பேசுவது என்ன?

1. இலங்கை போர்க் குற்றம் புரிந்தது என்று கூறுவதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை.

2. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை மாற்றச் சொல்ல மாட்டோம்.

3. தனி நாடு, தமிழ் ஈழம் போன்ற கருத்தை ஏற்க மாட்டோம் என்பது போன்ற நிலைப்பாட்டையே கூறினர்.

இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் வடபுல அகில இந்திய தலைவர்கள் கருத்தும் ஏறத்தாழ இதே பாணியில் தான் இருந்தது; இருக்கின்றது!

தமிழ்நாட்டில் சிலரின் வீராவேச முழக்கங்களில் கூட ‘இலங்கைத் தமிழர்' என்ற சொல்லாடல் தான் இருக்குமே தவிர, ஈழத் தமிழர், தனி ஈழம் என்பதைப் பூதக் கண்ணாடி வைத்துத் தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

போர்க் குற்றவாளி ராஜபக்சேவை இந்திய மண்ணுக்கு வரவழைத்த, சுஷ்மா சுவராஜ் கட்சி - குறிப்பாக மத்திய பிரதேச அரசு - அது பாஜக ஆட்சியாகத்தான் உள்ள நிலையில், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு புத்தர் கோயிலுக்கு வருகை என்ற சாக்கில் தரப்பட்டதே!

அவரை அழைத்தது அம்முறை - மத்திய அரசு கூட அல்ல; என்றாலும் மத்திய அரசு உண்மையாக மக்களின் குரலுக்கு மதிப்பளித்திருந்தால், மோடிக்கு விசாவை அமெரிக்கா மறுத்துள்ளது போல, எடுத்துச் சொல்லி தடுத்திருக்கலாமே; மனம் இருந்தால் மார்க்கம் உண்டே.

பாஜகவில் அமைப்பு முறையில் கட்சியில் யஷ்வந்த் சின்காவுக்கு என்ன முக்கியப் பொறுப்பு?

தமிழ்நாட்டிற்கு அவரை அழைத்து வந்து இங்கு ஈழ ஆதரவு உணர்வினைக் கூறி, தமிழ்நாட்டு மக்களுக்கு "மயக்க பிஸ்கட் தந்து, வாக்குரிமையை, மயக்கத்திலாவது பறிக்க வழி வகை ஏற்படாதா என்ற நப்பாசைதானே காரணம்?

ஏதாவது ஒரு கருத்தை, பாஜகவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்று கொள்ளவோ, காட்டவோ நினைத்தால் அது சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங் போன்றவர்கள் (முறையே எதிர்க்கட்சித் தலைவர், கட்சி தலைவர் என்பதுபோன்ற பதவியாளர்கள்) கருத்து தானே முக்கியம்?

வாக்குகளைப் பறிக்கும் திட்டம் தானே!

தமிழ்நாட்டு பாஜகவினர் இவரைக் காட்டி இங்கே "வாக்கு வங்கியை தமிழர்களிடமிருந்து பறிக்கவே இப்படி ஒரு இரட்டை முகம், இரட்டைக் குரல் ஏற்பாடு! தமிழ்நாடு மக்கள் ஏமாற மாட்டார்கள்!

பாஜக என்பதே ஆரிய தர்மத்தை ஆரிய நெறிகளை ஏற்று அவதரித்த அரசியல் கட்சி தானே!

பெரியார் கண்ணாடி போட்டுப் பார்த்தால் இந்த இரட்டை வேடம்தானே எளிதில் எவருக்கும் விளங்கும்!

‘டெசோ'வை தாக்கும் தமிழ்நாட்டுக் காவிக் கட்சியினரின் ‘சாயம்' இதன் மூலம் வெளுக்கும்.

வெளியுறவுக் கொள்கையில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு கிடையாது

வெளியுறவுத் துறைக் கொள்கையில் "உருட்டைக்கு நீட்சி, புளிப்பில் அதற்கப்பன்" என்ற பழமொழி போல, காங்கிரசுக்கு அண்ணனாகவே பாஜகவும் இருக்கும்!

இங்கே இப்போது திடீர் ஈழப் பாசம் சிலருக்கு வந்ததும் இதே வரிசையில் தான்; எல்லாம் போகப் போகப் புரியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DK chief K.Veeramani slammed BJP of using Sri Lankan issue to get votes from the TN people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X