For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கெடுதல் செய்தாருக்கும் நன்மை'.. ஜெயலலிதாவுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டு!

By Chakra
Google Oneindia Tamil News

Panruti Ramachandran
சென்னை: சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக உறுப்பினர்கள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை துவக்கி வைத்து பேசுவதற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகருக்கு பரிந்துரைத்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டுத் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,

சபாநாயகர் தாராள மனதோடு எங்களுக்கு உரிய இடத்தை மீண்டும் வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றி. சுடர்விளக்காகினும் தூண்டுகோல் தேவை. அந்த வகையில் தாங்கள் இந்த முடிவை எடுப்பதற்கு தூண்டு கோலாக இருந்த தமிழக முதலமைச்சரின் பெருமைக்குரிய செயலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் இந்த விஷயத்தில் சான்றான்மையுடன் நடந்து கொண்டிருக்கிறார். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்று ஏசு பிரான் சொல்லி இருக்கிறார். இன்னா செய்தவருக்கும் இனியவே செய்யாகால் என்ன பயத்ததோ சால்பு என்று வள்ளுவ பெருந்தகை கூறியதற்கு இணங்க கெடுதல் செய்தாருக்கும் நன்மை செய்யும் வகையில் இந்த பிரச்சனையை முதலமைச்சர் அணுகி இருக்கிறார். அவரது பரந்த உள்ளத்திற்கும் பெருந்தன்மைக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களின் (சபாநாயகர்) முடிவுக்கு உறுதுணையாக இருந்த அவை முன்னவருக்கும் நன்றி. எங்களுக்குரிய வாய்ப்பு இழந்தபோது தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று கருதாமல் நேசக்கரம் நீட்டிய அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் பேரவையை சிறப்பாக நடத்திட முழு ஒத்துழைப்பு தருவோம்.

மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: எதிர்க் கட்சி துணைத்தலைவர் ஒரு திருக்குறளை சொல்லி அம்மாவுக்கு நன்றி தெரிவித்தார். அவர் "இன்னா செய்தாரே ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குரலையும் சேர்த்து சொல்லியிருக்கலாம் (அதிமுக எம்எல்ஏக்கள் மேஜைகளைத் தட்டி ஆராவாரம் செய்தனர்)

செளந்திரராஜன் (சிபிஎம்): முதலமைச்சர் உள்ளிட்ட எங்களின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் மீண்டும் தேமுதிகவுக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. திமுகவினரின் செயல்பாடுகளை நாங்கள் ஆதரிக்காவிட்டாலும் சபாநாயகர் இதே மரபுபடி இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் திமுகவை நீக்கியதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்): தேமுதிகவுக்கு விவாதத்தில் முதலில் பேச மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியதை முதலமைச்சரும் ஏற்று தங்களுக்கு பரிந்துரைத்தார். தாங்கள் அதை ஏற்று தாங்கள் அளித்த தீர்ப்பை மாற்றி தேமுதிகவுக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அந்த அடிப்படையில் திமுவை அவைக்கு மீண்டும் நீங்கள் அழைக்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: இது கருணை மனு போடும் காலம். எனவே விதியை பார்க்காமல் இந்த கோரிக்கையை கருணை அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.

ரங்கராஜன் (காங்கிரஸ்): தேமுதிகவுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்த சபாநாயகருக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. இந்த அடிப்படையில் திமுகவும் இந்த கூட்டத்தொடரில் மீண்டும் வந்து கலந்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): முதலமைச்சர் பரந்த மனப்பான்மையுடன் பரிந்துரைத்ததையும் எங்கள் கோரிக்கையையும் ஏற்று ஒரு சிறப்பான தீர்ப்பை தேமுதிகவுக்காக நீங்கள் வழங்கினீர்கள். அதற்கு நன்றி. எதிர்க்கட்சிகளை இந்த அரசு மதிக்கிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக இந்த அரசு பாடுபடுகிறது என்கிற எண்ணத்தை வலுப்படுத்தவும் இந்த அரசு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என பறைசாற்றவும் திமுகவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): தேமுதிகவுக்கு உரிய வாய்ப்பை மீண்டும் வழங்கிய சபாநாயகருக்கும் துணை நின்ற முதலமைச்சருக்கும் அவை முன்னவருக்கும் நன்றி. திமுக உறுப்பினர்களை ஒரு மாத காலம் முற்றாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். தாங்கள் இதை மறுபரிசீலனை செய்து இந்த நிலையை மாற்றி திமுக அவை அலுவல்களில் கலந்துகொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

English summary
Members of various political parties, including the main opposition DMDK, today thanked Chief Minister Jayalalithaa for requesting the Assembly Speaker to allow the DMDK to initiate discussions on the demands for grants for various departments as was the practice earlier. Deputy Leader of Opposition in the Assembly and DMDK presidium chairman Panruti Ramachandran led the House in heaping rich praises on Jayalalithaa or her magnanimity towards his party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X