For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளன் உள்பட மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்!- கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: புல்லருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்வதுபோல, ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தேவேந்திரபால் சிங் புல்லருக்குக் கருணை காட்டும்படி பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் முதல் அந்த மாநில மக்கள் வரை அனைவரும் ஒருமனதாகக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் அந்த மாதிரியான நிலை இல்லை.

பஞ்சாப் மாநில முதல்வரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவும் கூறியுள்ளார்.

ராஜீவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி வருகிறோம். இந்த மூவரையும் விடுவிக்கக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது முதல்வர் ஜெயலலிதா, அரசியல் அமைப்புச் சட்ட விதி 161-ன் கீழ் முதல்வருக்கும், ஆளுநருக்கும் 3 பேரையும் விடுவிப்பதற்கான அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதே கருத்தை அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆனால் முதல்வர் ஜெயலலிதா, 2011 ஆகஸ்ட் 28-ல் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் ஓர் அறிக்கை படித்தார்.

அந்த அறிக்கையில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்று கூறியுள்ளார். இந்த முறையின் மூலமாகத்தான் 3 பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று கோருகிறோம்.

தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலயுறுத்துகிறோம்.

அதைப்போல வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 4 பேரின் தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறோம்.

2007ஆம் ஆண்டு ஐ.நா. சபை தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை முன்வைத்தபோது அதை 104 நாடுகள் ஆதரித்துக் கையெழுத்திட்டன. இந்தியா உள்பட 39 நாடுகள்தான் அதை எதிர்த்து வாக்களித்தன.

இந்தத் தீர்மானத்தையொட்டி 90 சதவீத நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்துவிட்டன. அந்தப் பெரும்பான்மையுடன் இந்தியாவும் இணைய வேண்டாமா?

எனவே, புல்லரின் தண்டனையை மறு பரிசீலனை செய்யும்போது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையும் பரிசீலனை செய்து தண்டனையைக் குறைக்க வேண்டும்.

பொதுவாக தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்ய வேண்டும். அதற்கான மத்திய, மாநில அரசுகள் வழி காண வேண்டும்."

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK president M Karunanidhi urged center to review the death sentence to three Tamils including Perarivalan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X