For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி-விஜய்காந்த் மீதான அவதூறு வழக்குகள் வாபஸ் இல்லை: ஜெ. திட்டவட்டம்

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalithaa
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆகியோர் மீதான அவதூறு வழக்குகளை வாபஸ் பெற முடியாது என்று சட்டசபையில் முதல்வர் ‌ஜெயலலிதா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இது தொடர்பாக தேமுதிக எம்எல்ஏவும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரனின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்...

பண்ருட்டி ராமச்சந்திரன்: முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் மீதெல்லாம் அவதூறு வழக்குகள் என்ற வகையிலே வழக்குகள் நிறைய தொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளை முதல்வர் ஆராய்ந்து மிகவும் மோசமானவை என்கின்ற நிலைமை இருக்குமேயானால் அவற்றை தக்க வைத்துக்கொண்டு, பெரும்பாலான வழக்குகளை திரும்பப் பெறுவதன் மூலம் தமிழ்நாட்டிலேய ஒரு நல்ல, அரசியல் ஆரோக்கியமான சூழ்நிலையை வருகின்ற காலத்திலே உருவாக்க முடியும். அதைப்பற்றி இப்போது அல்ல, பொறுமையாகவே பரிசீலித்து தக்க முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்

முதல்வர் ஜெயலலிதா: அரசியலில் ஒரு பற்றற்ற துறவியைபோல் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் சிலர் மீது தொடுக்கப்பட்டுள்ள மானநஷ்ட வழக்குகள், அவதூறு வழக்குகளைப் பற்றி இங்கே குறிப்பிட்டார். மிகவும் மோசமாக பேசியிருந்தால் அந்த வழக்குகளை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றார்.

அப்படிப்பட்ட மோசமாக பேசப்பட்ட அவதூறுகள் பற்றிதான் வழக்குகள் தொடுக்கப்பட்டு இருக்கின்றன. பொதுவாக பொது வாழ்வில் உள்ளவர்கள், அரசியலில் ஈடுபடுபவர்கள், அதுவும் ஒரு கட்சிக்கு தலைவர் என்ற மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் நா காக்க வேண்டும். எங்கே பேசினாலும், எப்போது பேசினாலும், என்ன பேசுகிறோம் என்பதை அளந்து ஒவ்வொரு வார்த்தையையும் பேச வேண்டும். வருவதை எல்லாம், நாவிலே வருவதை எல்லாம் கொட்டி விட்டால் இப்படி அவதூறு வழக்குகளை சந்திக்கத்தான் வேண்டும்.

காரணம், என்னைப் பற்றி இழிவாகப் பேசினாலோ, எனது அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்களைப் பற்றி இழிவாக பேசினாலோ, இந்த அரசு பற்றி இழிவாக பேசினாலோ, இது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனை அல்ல. என்னை நம்பி கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். நான் தலைமையேற்றிருக்கும் கட்சியிலேயே ஒன்றரை கோடிக்கு மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 7.28 கோடி மக்களும் இந்த அரசை நம்பித்தான் இருக்கிறார்கள். ஆகவே 7.28 கோடி மக்களுக்கு பொறுப்பேற்றிருக்கும் இந்த முதல்வர் மீது, இந்த அரசு மீது அவதூறுகளை பரப்பினால், அவற்றிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டால் கூறப்பட்ட அவதூறுகள் உண்மை என்று ஆகிவிடும்.

பொது வாழ்வில் ஒரு நிதானம் இருக்க வேண்டும், ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும், ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும், அந்த ஒழுங்கும், நிதானமும், கட்டுப்பாடும், இயற்கையாக இல்லை என்றால் வரவழைப்பதற்காகத்தான் இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: நான் முதலிலேயே குறிப்பிட்டேன். இது என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் என்று. ஆகையினாலே நான் வேறு யாருக்காகவும் நான் இங்கே வாதாடுவதாக அர்த்தமில்லை. முதல்வர் இங்கே அதற்கான விளக்கத்தினை தந்தார். இருப்பினும் இதுபற்றி அவர் இன்னும் யோசிப்பார் என்ற நம்பிக்கை உண்டு.

ஜெயலலிதா: எதிர்க்கட்சி துணைத் தலைவர் வயதில் மூத்தவர். பழுத்த அனுபவஸ்தர். அவர் எனக்கு ஆலோசனை கூறுவதை விட்டுவிட்டு, யார் இப்படியெல்லாம் அவதூறுகளை பேசுகிறார்களோ அவர்களுக்கு அறிவுரை கூறி, இப்படியெல்லாம் பேசவேண்டாம் என்று யோசனை சொன்னால் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: நான் ஆலோசனை சொல்லவில்லை. வேண்டுகோள்தான்.

ஜெயலலிதா: அதே வேண்டுகோளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கட்டும் என்றுதான் கூறுகிறேன்.

காங்கிரஸ் எம்எல்ஏ என்.ஆர். ரங்கராஜன்: மொத்ததிலே பூனை குட்டி வெளியே வந்துவிட்டது.

பண்ருட்டி ராமச்சந்திரன்: ஒருவேளை அது எலியைப் பார்த்திருக்கும்.

என்.ஆர். ரங்கராஜன்: அவர் யாரைப் பார்த்து எலி என்று சொன்னார் என்று தெரியவில்லை. நாங்கள் நிச்சயமாக எலி இல்லை. நாங்கள் புலி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: எனக்குப் பின்னால்தான் உறுப்பினர் அருண் சுப்பிரமணியம் இருப்பார். அவரை கொஞ்ச நாளாக காணோம் (நில அபகரிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதை மறைமுகமாக சுட்டிக் காட்டி) முதல்வர் அவர்கள், அவர் மீண்டும் இங்கே வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜெயலலிதா: அருண் சுப்ரமணியம் மீது நிலஅபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு, அதன்மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அதனால்தான் அவர் சிறையில் இருக்கிறார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். நில அபகரிப்பு வழக்குகளில், நில அபகரிப்பு புகார்களில் யார் சிக்கினாலும், காவல் துறையினர் விசாரித்து அவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கிய அதிமுகவினர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களும் சிறைக்கு சென்றிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

English summary
Defamation cases against DMK chief Karunanidhi and DMDK chief Vijaykanth won't be withdrawn, said CM Jayalalithaa in assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X