For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க தமிழர்கள் நடிப்பில் சிகாகோவில் அரங்கேறப் போகும் 'பொன்னியின் செல்வன்' பிரமாண்ட நாடகம்!

By Chakra
Google Oneindia Tamil News

சிகாகோவில் மே மாதம் 4ம் தேதி பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற உள்ளது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இது குறித்து சிகோகோ தமிழ்ச் சங்க துணைத் தலைவர் சோமு அனுப்பியுள்ள குறிப்பு:

பொன்னியின் செல்வன் நாடகத்தை சிகாகோவில் அரங்கேற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் 2012 ஜனவரி மாதத்திலேயே முளைவிட்டது. இந்த மாபெரும் படைப்பை மேடை ஏற்ற ஒரு வருட காலமாவது தேவைப்படும் என்று திட்டமிட்டு, 2013மே மாதம் மேடையேற்றுவது என்ற முடிவோடு ஆயத்த வேலைகளை ஆரம்பித்தோம். கலிபோர்னியா அபிராமி பைன் ஆர்ட்ஸ் குழுவைச் சேர்ந்த பாகீரதி சேஷப்பன் இயக்குனராக செயல்பட இசைந்தார்.

இந்த நாடகத்தில் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் தேவைப்பட்டனர். கல்கி விவரித்த உருவ தோற்றத்திலும், தூய தமிழ் பேசும் ஆற்றல் உள்ளவர்களையும் தேர்ந்தெடுக்க 2012 செப்டம்பர் மாதம் தேர்வு (audition) நடைபெற்றது.

Chicago Tamil Sangam to stage a drama on Kalki's Ponniyin Selvan

பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் நம்மில் பலர் நாடகங்களில் ஆசை ஆசையாய் நடித்து இருப்போம். ஆனால், படிப்பு முடிந்தவுடன் அந்த ஆசையை அடி மனதில் மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்த அவசர உலகத்தின் தினசரி அலுவல்களில் தொலைந்து போய்விடுகிறோம்.

எப்பொழுதாவது அந்த பழைய கால நினைவுகள் வரும்பொழுது, நாம் போட்ட கோவலன்/ கண்ணகி வேடங்கள் கண் முன் நிற்கும். பேசிய வீர வசனங்கள் காதில் சலங்கையாய் ஒலிக்கும். அத்தகைய நினைவுகளை மெய்ப்பிக்க சிகாகோ அன்பர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. நேர்முகத் தேர்விற்கு 35 பேர் வந்தனர். புதினத்தில் இருந்து, அவரவர் தமக்குப் பிடித்த கதாபாத்திரங்களைப் போல் பேசியும், நடித்தும் காட்டினர்.

நடிக, நடிகையர் தேர்வு முடிந்தாகி விட்டது. ஆனால் நாற்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இருப்பதால், ஒரே சமயத்தில் அனைவரையும் கொண்டு பயிற்சி செய்வது கடினம். அதனால், பழையாறை, காஞ்சி மற்றும் கடம்பூரில் வாழும் கதாபாத்திரங்களை ஒரு குழுவாகவும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் பாண்டிய ஆபத்துதவிகளை மற்றொரு குழுவாகவும் பிரித்து ஞாயிறு தோறும் பயிற்சி மேற்கொண்டோம்.

இது நாளும் ஓவியர் மணியம் அவர்களின் சித்திரங்களில் வாழ்ந்திருந்த கதாபாத்திரங்ககளை நடிகர்கள் மூலமாக உயிர்ப்பிக்கத் தேவையான உடைகள், இந்த நாடகத்தைக் காண வரும் ரசிகர்களை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்ல, தேவையான மேடைப் பொருட்கள் என்று... அப்பப்பா! இந்த முயற்சி சிகாகோ அன்பர்களிடையே பொன்னியின் செல்வன் புதினத்தின் மீது ஒரு புதிய ஆர்வத்தைத் தூண்டி உள்ளது. பலர் இந்தப் புதினத்தை முதல் முறையாகவும், ஏற்கனவே படித்தவர்கள் பலமுறையாகவும் படிக்கத் துவங்கி உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.

தாய் நாட்டை விட்டு வெகு தொலைவில் வாழ்ந்தாலும், இந்த முயற்சியில் ஈடுபட்டதின் பயனாய் கிடைத்த புதிய உறவுகளின் நெருக்கத்தாலும், பகிர்ந்து கொண்ட தமிழ் ஆர்வத்தாலும், இங்கேயே நாங்கள் தாய் நாட்டைக் கண்டோம்! திட்டமிட்டபடி 30க்கும் மேலான பயிற்சி அமர்வுகளை நடத்தி, இன்று தமிழ்த் தாயின் ஆசியுடனும் கலை மகளின் துணையுடனும் உங்கள் முன்னால், இந்த ஒப்பற்ற வரலாற்றுப் புதினத்தை மேடையில் படைக்க இருக்கிறோம்.

இந்த முயற்சிக்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, அப்துல் காதர், சினிமா மற்றும் சின்னத்திரை ஆலோசகர் வெங்கட் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

கலாம் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் படைப்பு முந்தைய தலைமுறைகள் மட்டுமின்றி இன்றைய தலைமுறையையும் ஈர்க்கும் ஒரு படைப்பு. இந்த அற்புதமான படைப்பை நாடகமாக்கும் முயற்சி பெரும் சாதனை தான். அதிலும் சிகோக்கோவில் வாழும் தமிழர்களைக் கொண்டே நாடகத்தை நடத்துவது சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் அபார நம்பிக்கையைக் காட்டுகிறது. சிகாகோ தமிழ்ச் சங்கம் இதை செவ்வனே சாதிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பின்பற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளால் தான் தமிழ் இன்றும் இளமையாகவே இருக்கிறது.

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பணி சிறக்கவும் நாடகம் சிறப்புற நடைபெறவும் வாழ்த்துகிறேன். சங்கத்தின் நிர்வாகிகள், நாடகத்தின் இயக்குனர், பங்கேற்கும் கலைஞர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் என்று அப்துல் கலாம் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களை www.chicagotamilsangam.org இணையதளத்தில் பார்க்கலாம்.

English summary
Chicago Tamil Sangam is preparing for a drama on Kalki's Ponniyin Selvan with local talents
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X