For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமாவை கைது செய்ய கோரி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்.. ராமதாஸை கைது செய்ய கோரி திருமா ஆர்ப்பாட்டம்!

By Chakra
Google Oneindia Tamil News

Ramadoss, Thirumavalavan calls for action against each other
சென்னை: மரக்காணத்தில் நடந்த ஜாதிக் கலவரம் தொடர்பாக கலவரக்காரர்களை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மே 1ம் தேதி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந் நிலையில், டாக்டர் ராமதாசை கைது செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் 2ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரத்தில் கடந்த 25ம் தேதி நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்த பாமக மற்றும் வன்னியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மீது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மரக்காணத்தில் திட்டமிட்டு மிகக்கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கும்பகோணம் விவேக், அரியலூர் செல்வராஜ் என்ற இரு அப்பாவி வன்னிய இளைஞர்கள் வெட்டியும், அடித்தும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் இருவரையும் படுகொலை செய்த கும்பல் பற்றிய ஆதாரங்களை காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மரக்காணம் கலவரம் உள்ளூர் அளவில் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் வகுத்துக் கொடுத்த வன்முறைத் திட்டத்தின் அடிப்படையில் தான் அப்பாவிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் திட்டமிட்டு மற்ற சமுதாயத்தினரை தாக்குதல், பின்னர் தங்களது வீடுகளை தாங்களே தாக்கிக்கொண்டு இழப்பீடு பெறுதல் போன்ற செயல்களை அனுமதிப்பதும், இவர்களை திருப்திபடுத்துவதற்காக மற்ற சமுதாயங்களைச் சேர்ந்த அப்பாவிகள் மீது பொய்வழக்குப் போட்டு கைது செய்வதும் தொடர்ந்தால் தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

எனவே, மரக்காணம் கலவரத்தில் அப்பாவிகள் இருவரை படுகொலை செய்ததுடன் நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்தியும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியும் வன்முறை வெறியாட்டம் நடத்திய கும்பல் மீதும், அதற்கு சதித் திட்டம் வகுத்துத் தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

இக்கலவரத்தின் பின்னணி மற்றும் இதற்கு ஆதரவாக இருந்தவர்களை அடையாளம் காண்பதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரத்தில் எனது தலைமையில் மிகப்பெரிய அளவில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் மே 1ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வட்டத்தலைநகரங்களிலும், புதுவையிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாசை கைது செய்ய கோரி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்:

இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் அண்மைக் காலமாக பாமகவினர், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். வட மாவட்டங்களில் தலித் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதும் சேரிகள் கொளுத்தப்படுவதும் அதிகரித்து வருகின்றன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வருகின்றனர். தலித்துகள் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமின்றி முற்போக்குச் சக்திகளையும், பிற ஜனநாயக சக்திகளையும் துளியளவும் கூச்சமும் தயக்கமுமின்றி இழிவாகப் பேசியும் வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 25ம் தேதி மாமல்லபுரத்தில் நடத்திய சாதிச் சங்க விழாவில் தலித் மக்களையும் முற்போக்கான அரசியல் கட்சித் தலைவர்களையும் மிகக் கேவலமான முறையில் பேசியதுடன் அப்பாவி வன்னிய இளைஞர்களுக்கு சாதி வெறியை ஊட்டியுள்ளனர்.

மரக்காணம், கழிக்குப்பம் கிராமங்களில் தலித் மக்களின் 15 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. தலித் மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில் சேட்டு என்பவர் பலியாகியுள்ளார். ஏகாம்பரம் என்பவர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பல இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர். கூனிமேடு என்னுமிடத்தில் இஸ்லாமியர்களும் பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்துகளும் பொதுமக்களும் வண்டிகளும் கொளுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட சாதி வெறியர்கள் ஒருவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனையளிக்கிறது. அரசின் இந்த மெத்தனப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. வெளிப்படையாக சாதி வெறியைத் தூண்டிவரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட சாதி வெறிக் கும்பல் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 2ம் தேதி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

குடும்ப நலனுக்காக வன்னியர்களை தூண்டிவிடும் ராமதாஸ்:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், மாமல்லபுரத்தில் நடந்த சாதி சங்க கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தலித்துகளுக்கு எதிராக மட்டுமின்றி அனைத்து தரப்பு சமுதாயத்தினருக்கு எதிராகவும் ஒரு வெறுப்பு, நச்சு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் வரையில் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் நண்பகல் 1 மணிமுதல் மாலை 6 மணி வரை வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உருட்டுகட்டைகள், பெட்ரோல் வெடிகுண்டு, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களால் பொதுமக்களையும், பயணிகளையும் குறி வைத்து தாக்கி உள்ளனர்.

மரக்காணம் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி, வீடுகளுக்கு தீவைத்து உள்ளனர். மரக்காணம் பாமக ஒன்றியச் செயலாளர் ஒரு வாரத்திற்கு முன்பே அரியலூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கட்சியினரை அழைத்துப்பேசி திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

தேர்தல் அரசியலுக்காகவும், தன்னுடைய மகனுக்கு எம்.பி., பதவி கிடைக்க வேண்டும் என்ற தன்னுடைய குடும்ப நலனுக்காகவும் வன்னியர்களை டாக்டர் ராமதாஸ் தூண்டிவிட்டு வருகிறார் என்றார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளேன். முதல்வரை சந்திக்க அனுமதி கிடைத்தால், அவரையும் சந்தித்து விளக்கம் அளிப்பேன் என்றார்.

நீங்களும், ராமதாசும் சந்தித்து இந்தப் பிரச்சனையில் சுமூக முடிவு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, எனக்கும், அவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் தான் தேர்தல் அரசியலுக்காக சாதி வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் என்றார்.

English summary
Pattali Makkal Katchi founder S.Ramadoss and party president G.K.Mani have called for a CB CID inquiry into the violent incidents that broke out at Marakkanam on Thursday. They have also sought the arrest of VCK leaders. At the same time Viduthalai Chiruthaikal Katchi (VCK) leader Thol Thirumavalavan has accused Ramadoss of instigating caste violence with a view to arresting the decline in his support base, and wanted Chief Minister Jayalalithaa to take action against him for his vicious campaign against Dalits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X