For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உழைப்பே உயர்வு: ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ மே தின வாழ்த்து

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மே தினத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

உழைப்பின் மேன்மையினையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிமைப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட ஊமைகளாய் அடங்கிக் கிடந்த தொழிலாளர்கள், தங்களின் அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து, ஆர்ப்பரித்துப் போராடி, உரிமைகளை வென்றெடுத்ததைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் உயரிய நாளே "மே தினம்" எனும் உழைப்பாளர் திருநாள் ஆகும். உழைப்பின் மேன்மையினை இந்த இனிய மே தினத் திருநாளில் போற்றி பெருமிதம் கொள்வோம்.

உழைப்பில் தான் உடல் வலிமை உறுதி பெறும். உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும். உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை தெரிவித்துக் கொண்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

வைகோ வாழ்த்துச் செய்தி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர" என்று பிரகடனம் செய்த காரல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கல்சும் கண்ட கனவுகளை நனவாக்க, பாட்டாளித் தோழர்கள் பச்சை ரத்தம் பரிமாறி, உரிமைப் பதாகையை உயர்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் நாள்தான் மே நாள் ஆகும்.

சிகாகோ நகரில் வைக்கோல் சந்தைச் சதுக்கத்தில் திரண்ட தொழிலாளர்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறைக் கொடுமைகளைப் புறங்கண்டு - உரங்கொண்டு போராடிய வீர வரலாற்றை நினைவுகூர்ந்திடும் நாள் இந்நாள்.

காலம் காலமாகப் பாரம்பரியமாக வசந்தகால விழாக்கள் கொண்டாடப்படும் நாளாக இருந்த மே முதல் நாள், 1899ம் ஆண்டு முதல் பன்னாட்டு சோசலிச மன்றத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுவரை பசுமையான கிளைகள், செடிகள், மாலைகள் இவற்றுடன் மே தின அரசன், மே தின அரசி, மே தினக் கம்பம் என அலங்கரித்துக் கொண்டாடும் பண்டிகை நாளாக இருந்த இந்நாள் தொழிலாளர் ஒற்றுமையைக் குறிக்கும் செம்பதாகைகளின் கீழ் "உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்! நம் உரிமைகளை வென்றெடுப்போம்!" என்று உரக்க முழக்கமிடும் நாளாக இந்நாள் திகழ்கிறது.

கண்ணீரும், வியர்வையும், செந்நீரும் சிந்திப் போராடும் வர்க்கம் விடுதலையை வென்றெடுக்கும் என்பதற்கு அடையாளமாகத் திகழும் இந்த மே நாளில், ஈழத் தமிழர் விடுதலைக்காகச் சிந்தும் கண்ணீரும், இரத்தமும் வீண் போகாது என்றும், அவ்வுரிமைப் போராட்டத்தில் உலகத் தமிழர்கள் மட்டுமல்லாமல் உழைக்கும் வர்க்கமும் தங்கள் பங்களிப்பைத் தந்திட வேண்டும் என்று வேண்டிச் சூளுரைத்து மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் வாழ்த்துச் செய்தி

மே தினத்தையொட்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். சில நூற்றாண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் அடிமைகளைப் போல நாள்தோறும் 18 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டனர். உறங்கக்கூட முடியாமல் உழைப்பு உறிஞ்சப்பட்டதால் கொதித்தெழுந்த தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை நேரத்தை நடைமுறைப்படுத்தக் கோரி அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களின்போது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து 1889&ஆம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவில் சென்னையில் தான் முதன்முதலில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், தமிழராகிய சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் தான் இதைக் கொண்டாடினார் என்பதும் தமிழர்களாகிய நமக்கு பெருமையாகும்.

தொழிலாளர்களுக்கு உழைப்புச் சுரண்டலில் இருந்து விடுதலை கிடைத்துவிட்ட போதிலும், பொருளாதார சுரண்டலில் இருந்து விடுதலை கிடைக்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது எட்டாக்கனியாக இருக்கும் சூழலில், உழைத்தப் பணத்தை மது என்னும் மோகினியை காட்டி அரசே பறிக்கும் அவலமும் தொடர்கிறது. இந்த அவலங்களை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து போராட இந்த நாளில் தொழிலாளர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு முறை மே நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வாழ்த்து:

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

உலக மக்கள் அனைவரும் உண்ணவும், உடுக்கவும், ஒய்யாரமாக வாழவும் தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் குருதியை வியர்வையாய்ச் சிந்தி உடலை உருக்கும் உழைப்பினால் உருவாக்கித் தந்திடும் உத்தமர்களாம் தொழிலாளர்களின் நலம்நாடும் உன்னத திருநாள் மே நாள்!

"காண்ப தெல்லாம் தொழிலாளி செய்தான்

அவன் காணத் தகுந்தது வறுமையாம்!

பூணத் தகுந்தது பொறுமையாம்!"

- எனும் புரட்சிக் கவிஞரின் வைர வரிகளைக் கேட்டுக்கேட்டுத் தொழிலாளர்களோடு தொழிலாளியாகக் கலந்து அவர்கள் மீது வாஞ்சையை வளர்த்துக் கொண்டு, அவர்தம் வாழ்க்கை மேம்பாட்டிற்காக இளமைக் காலம் தொட்டு தொய்வின்றிப் பாடுபடுபவன் என்னும் உணர்வோடு தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கு எனது உளமார்ந்த தோழர்களுக்கு எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.!

திமுக ஆட்சி காலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பயன்பெறக் குடியிருப்பு, தொழில் - விபத்து நிவாரண நிதி; விபத்து நிவாரண நிதி; தொழிலாளர் கல்வி நிலையம் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டமை; 1990ம் ஆண்டு மே தின நூற்றாண்டு போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டமை; 1990ம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நேப்பியர் பூங்காவிற்கு "மே தினப் பூங்கா" எனப் பெயரிட்டு அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைத்தமை; நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்; விவசாயக் கூலிகளாகவும், தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்; உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதிஉதவி; உழைப்பாளிகளின் பொது அறிவு வளர்ச்சிக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்; தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ரூபாய்க்கு 1 கிலோ அரிசி; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்; குடிசைகள் இல்லா கிராமங்கள், குடிசைப்பகுதிகள் இல்லா நகரங்கள் கொண்ட தமிழகம் காண "வீடு வழங்கும் திட்டம்; என எண்ணிலாத் திட்டங்களை எல்லாம் உருவாக்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி, ஏழை எளிய பாட்டாளி மக்களின் வாழ்வு செழிக்க வழிவகுத்த நிகழ்வுகளையெல்லாம் நினைவு கூர்ந்து;

எதிர்காலம் இந்த ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் எனும் தெளிவான நம்பிக்கையோடு தொழிலாளர் சமுதாயத்திற்கு எனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்கி மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

உழைத்து வாழ வேண்டும் என்ற உன்னத லட்சியத்தை அடிப்படையாக கொண்டு கடைப்பிடிக்கப்படுவது மே தினமாகும். எல்லோரும் உழைத்து தான் வாழ வேண்டும் என்ற நிலையை ஒரு சமதர்ம சமுதாயம் தான் உருவாக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வு அதிகரிக்குமானால் ஒரு சிலர் வசதியாகவும், மிகப் பலர் வறுமையில் வாடவும் வேண்டி வரும். இதை மாற்றி எல்லோரும் நல்வாழ்வு காண உழைப்பவர்கள் தங்களுக்கு உரிய உரிமைகளை பெற வேண்டும். சமுதாயத்தில் உயர்வு காண வேண்டும். தொழிலாளர்களின் உரிமைக்காக முதன்முதல் போராடியது அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தில் தான். அதன் பின்னர் உலகெங்கும் உழைப்போர் உரிமைகளுக்கென கண்டெடுத்த நாள் தான் மே தினமாகும்.

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மின்சாரப் பற்றாக்குறை போன்றவற்றால் இன்று சமுதாயம் சீரழிந்து வருகிறது. வாழ வழி தெரியாமல் இளைஞர்கள் பரிதவிக்கின்றனர். நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வு அதிகரித்து வருகின்றன. இந்நிலையை மாற்றிட சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் தரமான கல்வியும், கண்ணியமான வேலையும் பெற்று ஆரோக்கியமான வாழ்வை பெற வழி காண்பதே இன்று நம் முன் உள்ள கடமையாகும். இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே என்பது ஒவ்வொரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். அப்பொழுதுதான் சமுதாயத்தின் நல்வாழ்வு, அமைதி, முன்னேற்றம் ஆகியவை கிட்டும்.

உலகில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் உழைப்பு என்பது பொது உடைமையாகும். அந்த உழைப்பிற்கு உயர்வை தருவது மே தின விழாவாகும். மேதினி போற்றும் மே தின விழாவில் உழைக்கும் வர்க்கம் எல்லா நலன்களும் பெற்று முன்னேற தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalithaa, DMK supremo Karunanidhi, MDMK chief Vaiko, DMDK chief Vijayakanth and PMK founder Dr. Ramadoss have wished the working class ahead of the international workers' day or may day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X