For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறைக்குள் ராமதாஸ், காடுவெட்டி குரு, பல இடங்களில் வன்முறை....3 பஸ்கள் எரிப்பு- 100 பஸ்கள் சேதம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Ramadoss, Mani held for demonstration bid
விழுப்புரம்: மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு, ஜி.கே. மணி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து வடமாவட்டங்களில் வன்முறை பரவி வருகிறது. மூன்று பேருந்துகள் எரிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்திருக்கிறது மேலும் பாமகவினரின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்துள்ளன.

மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 750 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 188 (கூட்டு சதி செய்தல்), 7(1) ஏ. சி.எல் சட்டம் (அரசுக்கு எதிராக சதி செய்தல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 750 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை இரவு 10.40 மணி அளவில் விழுப்புரத்தில் இருந்து போலீஸ் வேன்கள் மற்றும் அரசு பஸ்கள் மூலம் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இன்று அதி காலை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இதேபோல் சென்னை எம்.எல்.ஏ.விடுதியில் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வட மாவட்டங்களில் பல இடங்களில் மறியல், வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

பேருந்துகள் எரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திப்பம் பட்டியில் நேற்று இரவு அரசு பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது. நேற்று இரவு திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு சென்ற அரசு பஸ்சை வாலாஜா கொளத்தேரி மேம்பாலம் அருகே நள்ளிரவு 12.15 மணிக்கு 4 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தி தீ வைத்தனர். ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் பதற்றம்

வேலூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு விழுப்புரம் போக்குவரத்து கழக அரசு பஸ் ஒன்று நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை 20-க்கும் மேற்பட்ட கும்பல் தாமல் பகுதியில் வழி மறித்தது. டிரைவர் பஸ்சை நிறுத்தியதும் அவரை வெளியே இழுத்து சென்ற தோடு பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும்படி கூறினர். பயணிகள் கீழே இறங்கிய பிறகு அந்த கும்பல் பஸ்சுக்கு தீ வைத்தது. தீ மளமளவென்று அனைத்து பகுதிகளுக்கும் பரவியதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுமையாக எரிந்து நாசமானது.

100 பஸ்கள் மீது கல்வீச்சு

பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்ட பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை - திருப்பதி செல்லும் அரசு பஸ், அருங்குளம் - திருத்தணி செல்லும் அரசு பஸ் இரண்டும் இரவு 10.30 மணி அளவில் திருத்தணி அருகே உள்ள பட்டாபிராமபுரம் கிராமம் அருகே சென்று கொண்டு இருந்தன. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பஸ்களையும் வழிமறித்து பஸ்சின் கண்ணாடியை உடைத்து விட்டு ஓடி விட்டனர். இதுகுறித்து டிரைவர் சுந்தரலேகன் திருத்தணி போலீசில் புகார் செய்தார்.

மரங்களை வெட்டிய பாமக

செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் ஆலம் பூண்டி அருகே நேற்று மாலை 4 பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தது. செஞ்சி - விழுப்புரம் சாலையில் 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டது. செஞ்சி பகுதியில் மட்டும் 12 பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. திண்டிவனம்- புதுவை இடையே மரங்களை வெட்டிப்போட்டும், டயர்களை கொளுத்திப் போட்டும் தடை ஏற்படுத்தினர்.

திண்டிவனம் நொளம்பூர் பகுதியில் 2 அரசு பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டது. போலீசார் சென்று மீட்டனர். மரக்காணம் - திண்டிவனம் சாலையில் கொளத்தூர் பகுதியில் மரத்தை வெட்டிப் போட்டு போக்கு வரத்தை தடை செய்தனர். போலீசார் அவற்றை அகற்றினர். விழுப்புரம் வளவனூரில் ஒரு அரசு பஸ்சும், திண்டிவனத்தில் 3 பஸ் விழுப்புரம்- திருக்கோவிலூர் இடையே 2 பஸ்களும் உடைக்கப்பட்டன.

கடலூரில் பதற்றம்

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், சுந்தர வாண்டி பகுதியில் 6 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. பல இடங்களில் மறியல் நடந்த தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கல்வீச்சில் விழுப்புரம் மாவட்டத்தில் 29 பஸ்களும், கடலூர் மாவட்டத்தில் 11 பஸ்களும் சேதம் அடைந்தன.

கும்பகோணம் - சீர்காழி மார்க்கத்தில் 5 அரசு பஸ், கார் உடைக்கப்பட்டன. இரவில் தஞ்சையில் இருந்து கும்பகோணம், மயிலாடு துறை, சீர்காழி, சிதம்பரம், செங்கம் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறையில் 3 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டது.

கிழக்குக் கடற்கரை சாலையில்

புதுவையிலிருந்து திண்டிவனம் வழியாக சென்னை செல்ல வேண்டிய 2 அரசு பஸ்கள் ஆரோவில்லில் கல்வீசி தாக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் புதுவையை சேர்ந்த 3 அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தவிர 50-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது. இதனால் புதுவை, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் நள்ளிரவு முதல் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பயணிகள் வீடு திரும்பமுடியாமல் தவித்த வண்ணம் இருந்தனர்.

144 தடை உத்தரவு

புதுவை கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் புறநகர் பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டு போக்குவரத்தை தடை செய்யும் சம்பவங்களும் காலை முதல் தொடர்ந்து வருகிறது. சுத்துக்கேணி, காட்டேரி குப்பம் சாலையில் மரங்கள் வெட்டி போடப்பட்டுள்ளது. கண்டமங்கலம் பகுதி கிருஷ்ணா புரத்திலும் சாலையில் உள்ள மரங்கள் வெட்டி போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 3 அரசு பஸ்கள் மீது கல்வீசபட்டது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. மங்கலம், கீழ்பென்னாத்தூரில் 2 பஸ்கள் மீது கல்வீசபட்டது. மொத்தம் 10 பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. இதனால் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது.

தர்மபுரியில் 20 பஸ்கள்

தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர், ராமக்காள் ஏரி, கோளக்கொட்டாய், வெள்ளக்கல் உள்பட பல்வேறு இடங்களில் 20 தமிழக அரசு பஸ்களும், ஒரு கர்நாடக அரசு பஸ்சும், ஒரு லாரியும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக சேலம், தர்மபுரி மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு மேல் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வேலூரில் பதற்றம்

வேலூர் மாவட்டத்தில் 25 பஸ்கள் உடைக்கப்பட்டன. இதனால் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். மாவட்டம் முழுவதும் உள்ளூர் போலீசாரும், சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் விடிய விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் 5 பஸ்கள் வரை மொத்தமாக இயக்கப்பட்டது. ஒரு சில கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. அம்மாபேட்டையில் நடு ரோட்டில் மரத்தை வெட்டிப்போட்டனர். போலீசார் சென்று அப்புறப்படுத்தினர். இரவில் ஈரோடு- மேட்டூர் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முன் எச்சரிக்கையாக மாவட்ட துணை தலைவர் பெருமாள், துணை செயலாளர் செல்வம் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் வன்முறை

ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் நகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு 20 பஸ்கள் உடைக்கப்பட்டன. ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த பஸ்சை உடைத்ததாக முருகன், தங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம், மேட்டூர் கருமலைக்கூடம், ஆட்டையாம்பட்டி, இரும்பாலை, ஏத்தாப்பூர், சங்ககிரி, மேச்சேரி, 4 குடஞ்சாவடி, மேட்டூர், தீவட்டிப்பட்டி ஆகிய இடங்களில் பஸ் உடைப்பு சம்பவங்கள் நடந்தன. ஆத்தூர் அருகே ரோட்டில் மரங்களை வெட்டிப் போட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன.

English summary
Pattali Makkal Katchi founder S. Ramadoss and president G.K. Mani, along with several supporters of the party, were arrested when they tried to stage a demonstration at the Villupuram junction in defiance of police orders on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X