For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 8% உயர்வு: சட்டசபையில் ஜெ. அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 8% உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஜனவரி முதல் தேதி முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு ரூ.1640 கோடி செலவாகும் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி 1-ந் தேதி முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 8% உயர்த்தி, தற்போதுள்ள 72% லிருந்து 80% ஆக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது போல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 8% உயர்த்திட உத்தரவிட்டுள்ளேன்.

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்; எழுத்தர்; ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவர். இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,639 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்றார்.

மாசு கட்டுப்பாடு வாரிய பணியாளர்களுக்கு வீட்டுக் கடன் வசதி:

இதேபோல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பணியாளர்களுக்கு வீட்டுக் கடன் வசதி அளிக்கப்படும் என்ற அறிவிப்பையும் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா,

நடப்பாண்டில், சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்த அலுவலக கட்டடங்கள் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். மேலும், கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் வசதி இதுவரை வழங்கப்படவில்லை என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பணியாளர்களுக்கு 2013-14 ஆம் நிதியாண்டு முதல் வீட்டுக் கடன் வசதி ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 700 வாரிய பணியாளர்கள் பயன் அடைவார்கள் என்றார் அவர்.

English summary
Chief Minister J Jayalalithaa today announced eight per cent hike in dearness allowance for State government employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X