For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 4 புதிய வன உயிரின சரணாலயங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Tamil Nadu to set up 4 more wild life sanctuaries
சென்னை: தமிழகத்தில் புதிதாக 4 வன உயிரின சரணாலயங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். தர்மபுரி-கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம்- தஞ்சாவூர்- திருவாரூர் மற்றும் திண்டுக்கல்- தேனியில் இந்த சரணாலயங்கள் அமையவுள்ளன.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கை:

ஒரு நாட்டின் வளம் காட்டு வளத்தில் அடங்கியுள்ளது என்பதையும் காடுகளின் வளர்ச்சியால் மனித இனம் நன்மை அடைகிறது என்பதையும் உணர்ந்துள்ள எனது தலைமையிலான அரசு காடுகளை கண் போல் காக்கும் கடமையினை கண்ணும் கருத்துமாக ஆற்றி வருகிறது.

அந்த வகையில், வளம் மிக்க தமிழ்நாட்டின் வன வளங்களை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தினை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியுடன் 686 கோடி ரூபாய் செலவில் 2011-2012 முதல் எனது தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது.

புதிதாக 4 வன உயிரின சரணாலயங்கள்:

தமிழ்நாட்டில் தற்போது 10 வன உயிரின சரணாலயங்கள் உள்ளன. நாட்டிற்கு அழகையும், பொலிவையும் தரக் கூடியதும், மக்களுக்கு மிகுந்த பயனைத் தரக் கூடியதுமான வன விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க மேலும் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 2013-14ம் ஆண்டில் மாநிலத்தில் வன உயிரினங்கள் அதிகமாக வாழும் பகுதிகளை இணைத்து புதிதாக நான்கு வன உயிரின சரணாலயங்களை ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

அமைக்கப்படும் இடங்கள்:

இதன்படி தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கி காவிரி வன உயிரின சரணாலயம்,

திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் புள்ளிமான் உயிரின சரணாலயம்,

நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கி கோடியக்கரை வன உயிரின சரணாலயம்

மற்றும் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள பகுதிகளை உள்ளடக்கி கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

2 கோடி மரக்கன்றுகள்:

தமிழ்நாட்டை பசுமையாக்கும் வகையில், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் 2013-14ம் ஆண்டில் 1000 வருவாய் கிராமங்களில் தனியார் தரிசு நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் ஊடு பயிர்களாக 97 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் 2 கோடி மரக் கன்றுகள் நடப்படும்.

யானை புகா அகழிகள்:

இது மட்டுமல்லாமல், வனப் பகுதிகளிலிருந்து வெளியேறி மனித வாழ்விடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் யானைகளின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த யானை புகா அகழிகள் ஏற்படுத்துவது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இதற்காக முதற்கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 4 கோடியே 30 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனது தலைமையிலான அரசால் ஒதுக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக, தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் யானைகள் தடுப்பு அகழிகள் அமைக்க 5 கோடியே 19 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மூன்றாம் கட்டமாக வால்பாறை பகுதியில் தடுப்பு குழிகள் அமைத்தல், எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல், யானைகள் விரும்பி உண்ணும் பயிர்களை வளர்த்தல் போன்றவற்றிற்காக 2 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில், காட்டு யானைகளால் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு 440 கிலோ மீட்டர் நீளத்திற்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் யானை புகா அகழிகள் அமைக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

English summary
In a bid to ensure overall development of forest resources and wildlife, the Tamil Nadu government has proposed to set up four more wildlife sanctuaries in the state, in addition to the existing 10 wildlife sanctuaries. Chief minister J Jayalalithaa said in the assembly that Cauvery wildlife sanctuary will come up in Dharmapuri-Krishnagiri region, Point Calimere wildlife sanctuary will come up in Nagapattinam, Thanjavur and Tiruvarur areas, Kodaikanal sanctuary will cover some areas of Dindigual and Theni districts and a spotted deer sanctuary will be set up in Gangaikondan in Tirunelveli district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X