For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சியில் குளிர்பான நிறுவனத்தை மூட வைகோ வலியுறுத்தல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Shut the Mineral water plant says vaiko
சென்னை: திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருச்சி மாவட்டம் - திருவெறும்பூர் வட்டம் - சூரியூர், கிராமத்து அருகில் எல்.ஏ. பாட்லர் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், டி.பி.எப். மினரல் குடிநீர் தயாரிக்கும் நிறுவனமும் அமைந்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் ஆறு ராட்சச ஆழ்குழாய்களை அமைத்து நாள் ஒன்றுக்கு ஒரு கோடி லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன.

இத்தண்ணீர் சர்வதேச அளவிலான பிரபல நிறுவனத்தின் குளிர்பானத் தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு ஐம்பது லட்சம் லிட்டர் குளிர்பான உற்பத்தி நடைபெற்று வருகின்றது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் லட்சக்கணக்கான லிட்டர்கள் அடைத்து விற்கப்படுகின்றன. இந்நிறுவனம் எழுப்பியுள்ள கட்டிடங்களுக்கு தொடர்புடைய துறைகளில் குறிப்பாக நகர் ஊரமைப்புத்துறை, ஊராட்சி மன்றம், பொதுப்பணித்துறை இவற்றிடம் இருந்து தேவைப்படும் தகுதிச் சான்றுகளைக் கூடப் பெறவில்லை.

நாள் ஒன்றுக்கு உறிஞ்சி எடுக்கப்படும் சுமார் 1 கோடி லிட்டர் தண்ணீரால் நிலத்தடி நீரையும், வானம் பார்த்த பூமியின் மழை நீரை மட்டுமே நம்பியிருக்கின்ற இம்மூன்று ஊராட்சிப் பகுதிகளின் வேளாண்மைத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 1100 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையும், விவசாயத்தையும், விவசாயக் கூலித் தொழிலையும் நம்பியிருக்கின்ற சுமார் இரண்டாயிரம் குடும்பங்களை பாதிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குளிர்பான உற்பத்தி போக கழிவுகளாக வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீர் சுத்திகரிப்பிற்கு எவ்வித ஏற்பாடும் இல்லாததால் அப்பகுதி நிலங்களுக்குள் கழிவு நீர் கலந்து நிலம் மாசுபடத் தொடங்கிவிட்டது. சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் வறண்டு போய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாக உள்ளது.

தங்கள் நிலத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்ற வாழ்வாதாரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சூரியூர் உள்ளிட்ட மூன்று ஊராட்சி மக்களும் இரண்டு ஆலைகளையும் மூட வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த ஆலைகளின் இயக்கத்தை நிறுத்திட தீர்மானங்களையும் ஒருமனதாக நிறைவேற்றி உள்ளனர்.

தமிழக முதல்வர் அவர்களுக்கும் அரசுத்துறையின் உயர் அலுவலர்களுக்கும் கோரிக்கை பிரேரணைகளை அனுப்பியுள்ளனர்.

பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களையும், வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்ற எந்த ஒரு வணிகச் செயல்களையும் அனுமதித்தால் மக்களின் வாழ்வுரிமை பறிபோய்விடும். சுற்றுச்சூழல் கெட்டுவிடும். பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடும் நிலை ஏற்படும்.

எனவே நிலத்தடி நீரை முற்றாக உறிஞ்சுகின்ற ராட்சச குழாய்களின் இயக்கத்தையும் இவ்விரண்டு நிறுவனங்களின் உற்பத்தியையும் உடனடியாக நிறுத்திவிட்டு மூன்று ஊராட்சி மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
MDMK gen sec Vaiko urged the government to take action against mineral water plant near Tiruchy which take ground water abundantly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X