For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே....!

Google Oneindia Tamil News

Mother's day: Salute the great soul
சென்னை: அம்மா என்று அழைக்காத உயிரில்லையே என்ற வைரவரிகள் செவிகளில் பாய்ந்து இதயத்தை வருடும் ஜாலம் தமிழ் கூறும் நல்லுலகில் விவரிக்க வார்த்தைகள் இல்லை.

அம்மா இந்த வார்த்தை உணர்வு சார்ந்தது. உண்மையோடு உணர்ந்தால் மட்டுமே தெரியும். ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசானாக. இப்படி அனைத்துமாய் இருப்பவள் தாய்.

இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம் தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. இப்படிப்பட்ட அன்னையைக் கௌரவிக்கும் இந்நாளில் அன்னையர் தினம் அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சற்றுத் தெரிந்து கொள்வோமா?

16ஆம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில் தான் ‘MOTHERING SUNDAY'' என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம் தான் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடக் காரணமாக அமைந்தது.

அனா ஜார்விஸ் என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் என்ற கிராமத்தில் வாழ்ந்தவர். அன்று யுத்தக் களத்தில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப் போயின. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்துக்கும் அயராது பாடுபட்டவர் தான் அனா ஜார்விஸ். அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ம் ஆண்டில் மறைந்தார்.

மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் தேவாலயத்தில் 1907ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.

1913ம் ஆண்டு தன் பணி நிமித்தம் காரணமாக மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச் சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கௌரவிக்கப்பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றைய தினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார் அவர். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படவும், அந்த நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

இதனையே கனடா அரசும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானில் இருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் அன்னையர் தினம் என அறிவித்து நடைமுறைப்படுத்தியது.

ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனம் நிறைவடையவில்லை. உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்துக்கு அடுத்த வித்தை இட்டார். எதையும் வியாபாரமாக்கி பணம் சேகரிக்கும் அமைப்பு அன்னையர் தினம் அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியொன்றை விற்று பணம் சேர்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ். 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.

என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் உணர்ச்சிபூர்வமான நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் டாலர் சேர்க்கின்ற நாளாக இருக்கக் கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடை வித்திக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.

உலகம் முழுக்க அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பது தான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார்.

அவருடைய ஆசை இன்று அனேகமாகப் பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம். அன்னையர் தினம் மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. ஆனால் இன்று எத்தனை வீடுகளில் தாயை வணங்கும் மகன்கள் மனிதனால் புறக்கணிக்கப்படும் முதல் உயிரே இன்று அம்மாவாகிப் போனாள். இனியாவது சில மனிதர்கள் மாறுவார்களா?

English summary
World is celebrating mother's day today. Mother is the person who doesn't know selfishness and lives for her children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X