For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்.எல்.சி. பங்குகளை விற்பது தமிழர்களை வம்புகிழுக்கும் செயல்: கருணாநிதி எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: என்.எல்.சி. பங்குகளை விற்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 23-5-2013 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் தனது பங்குகளை மத்திய அரசு மேலும் 5 சதவிகிதம் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக அறிவதாகவும், அந்த முயற்சி விரும்பத்தக்கதல்ல என்றும், எனவே என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்வதற்கு பதிலாக மாற்று வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக்கொள்வதாகவும் எழுதியிருக்கிறார்.

திமுக ஆட்சியிலே இருந்த போதும் 22-6-2006 அன்று நெய்வேலி பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது. மறுநாள் 23-ந்தேதி காலையிலேயே தி.மு.க. தொழிற்சங்கம் (தொ.மு.ச.) சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., அதிகாரிகள் சங்கம் ஆகிய சங்கத்தினரை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது.

4-7-2006 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதென அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 25-6-2006 அன்று இந்த பிரச்சினை குறித்து பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்தில், ‘‘நெய்வேலியில் பத்து சதவிகித பங்கினை விட்டு தருவது பற்றி, தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்க்கருத்துக்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தி விடக்கூடாது. ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச திட்டத்தில் இருந்து விலகி செல்வதற்கு; எந்தக்காரணம் கூறப்பட்டாலும், அது முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையை கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டிலிருந்து தளர்வதாகவே கருதப்படும். எனவே மத்திய அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்திட வேண்டுகிறேன்'' என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச திட்டத்தில், ‘‘லாபகரமாக இயங்கும், அரசுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது; நவரத்தினங்களாக விளங்கும் அரசு நிறுவனங்கள் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும்'' என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. எனது இந்த கடிதத்திற்கு உடனடியாக பதில் வராத நிலையில் 4-ந் தேதி முதல் நெய்வேலியில் வேலைநிறுத்தம் தொடங்கியது.

6-7-2006 அன்று செய்தியாளர்கள் என்னை கேட்டபோது, ‘‘நெய்வேலி பிரச்சினையில் தொழிலாளர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் மத்திய அரசு இருக்கும்போது, மத்திய அரசினால் எடுக்கப்பட்டுள்ள அந்த முடிவுக்கு திமுக அந்த அரசிலே இடம் பெற்று, இதற்கு பொறுப்பேற்க வேண்டுமா என்பதை பற்றி யோசித்து கொண்டிருக்கிறோம். இதை டெல்லியிலே உள்ள திமுக அமைச்சர்கள் பிரதமரிடத்திலே அறிவித்திடுமாறு கூறியிருக்கிறேன்'' என்று சொன்னேன். அவ்வாறே மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனும் உடனடியாக பிரதமரைச் சந்தித்து எனது கருத்தைத் தெரிவித்தார். அதன் பின்னர் அன்று இரவே நெய்வேலி நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகளை விற்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தையும் திரும்பப்பெற்றனர்.

அதன் பின்னர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர், பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 21-4-2012 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் பிரச்சினை குறித்து, ‘‘மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு இந்த பிரச்சினையிலே அக்கறையின்றி இருந்தாலும், மத்திய அரசும், இந்த துறையின் அமைச்சரும் உடனடியாக நெய்வேலி நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டு போராடுகின்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை; அழைத்துப்பேசி சுமுக முடிவு காண முன்வர வேண்டுமென்றும், அதற்கு பிரதமர் ஆவன செய்திட வேண்டும்'' என்றும் கேட்டுக் கொண்டேன்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை என்பது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தொடர்கின்ற ஒன்றாகும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்ட காலந்தொட்டு நீடித்த ஒப்பந்தப்பிரச்சினை 1994-ம் ஆண்டில் தொ.மு.ச. பேரவையின் முயற்சியின் காரணமாக ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தொழில் கூட்டுறவு சேவை சங்கம் தொடங்கப்பட்டு அதில் 5000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பதிவு செய்து, அதன் மூலம் இடைத்தரகர்களை நீக்கி, அவர்களுக்கு கூட்டுறவு சங்கமே ஊதியம் வழங்கி வந்தது. பின்னர் நிர்வாகத்தில் பணி காலியாகும் போதெல்லாம், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி வருகிறார்கள்.

2012-ம் ஆண்டில் நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை கூட்டுறவு சேவை சங்கத்தில் பதிவு செய்வதை நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி கால தாமதம் செய்து வந்தது. அதன் காரணமாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நெய்வேலியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக தலைமை ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்த போதிலும், உடன்பாடு ஏற்படவில்லை.

தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க என்.எல்.சி. நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அப்போது கூறப்பட்டது.

திமுக ஆட்சியில் நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்திய போது எத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்பட்டது என்பதை மேலே எழுதினேன். ஆனால் அதிமுக ஆட்சியின் போது தமிழக அரசு என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகமே எழுந்தது. இந்த நிலையில், ‘‘மத்தியில் ஒரு அரசு இருப்பதாகவே தெரியவில்லை'' என்று அதிமுகவினர் குறை சொன்னார்கள். அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ பேச்சுவார்த்தை நாள் கணக்கில் நடந்ததே தவிர, முதல் அமைச்சரோ, அமைச்சரோ இதிலே தலையிடவில்லை! இறுதியாக அந்தப்போராட்டம் 5-6-2012 அன்று முடிவுற்றது. இதற்கிடையே 24-5-2013 அன்று மத்திய மந்திரி நாராயணசாமி என்.எல்.சி. பங்குகளை விற்பதில் தவறு ஒன்றுமில்லை என்பதை போல கருத்து தெரிவித்திருக்கிறார்.

புதுவை உட்பட தமிழகத்திற்கும், குறிப்பாக தொழிலாளர்களுக்கும் விரோதமான இந்த கருத்து திமுகவுக்கு ஏற்புடைய கருத்து அல்ல. முரசொலி மாறன் மத்திய அரசின் தொழில் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த போது எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக ‘‘நவரத்னா'' தகுதி பெற்ற என்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு மீண்டும் ஈடுபடக் கூடாது, அது தேவையன்றி தமிழர்களை குறிப்பாக நெய்வேலி தொழிலாளர்களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல், அப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு மேலும் ஒரு எதிர்ப்பை தேடிக்கொள்ள வேண்டாமென்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi has warned centre to stop trying to sell NLC shares.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X