For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இனி தமிழுக்கு அழிவு நேரும்... வைகோ எச்சரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Vaiko oposes TN Govt's order on college exams
சென்னை: ஆங்கில வழியில் பயிற்சி ஏடுகள் மற்றும் தேர்வுகளை எழுத கல்லூரிகளுக்கு உயர்கல்வி மன்றம் விடுத்துள்ள பரிந்துரையை

அரசு எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அரசு பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை, ஆங்கில வழிப் பிரிவுகளாக மாற்றும், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்புத் தோன்றியது. தாய்மொழி கல்விக்கு எதிரான இந்த திட்டம் கூடாது என்று நாம் வலியுறுத்தும் பொழுது, தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தற்போது செய்துள்ள பரிந்துரை, தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் இனி தமிழ்மொழிக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்குகின்ற பெரும் விபரீதம் ஏற்படும். தாய்த் தமிழகத்திலேயே தமிழுக்கு அழிவு நேரும்.

தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வி ஆண்டிலிருந்து மாணவர்கள் எழுதும் பயிற்சி ஏடுகள் மற்றும் கல்லூரித் தேர்வுகளை இனி தமிழில் எழுதக்கூடாது, ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற பரிந்துரையை அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.

தமிழக மாணவர்கள் ஆங்கிலப் புலமை மற்றும் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள ஆங்கில வழியில் பயிற்சி ஏடுகளையும், தேர்வுகளையும் எழுத வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழ் வழியில்தான் இவற்றை எழுதி வருகின்றனர். திடீரென்று ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்றால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அரசுக் கல்லூரிகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள்தான் பயின்று வருகின்றார்கள்.

தமிழ் வழியில் பயின்ற தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களது ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டு, கணினித்துறையில் உலகெங்கும் வெற்றிகரமாக பணியாற்றுகின்றனர். எனவே, தாய்மொழியில் கல்வி கற்பது எந்த வகையிலும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காது.

பட்டப் படிப்பை தமிழ்வழிக் கல்வி மூலம் மேற்கொள்வோருக்கு ஊக்கம் அளித்து, அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுத்து, தாய்மொழி தமிழை, கல்வி மொழியாக பயிற்று மொழியாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையைச் செய்யாமல், தமிழ் மொழியை முற்றாக புறக்கணிக்க தமிழக உயர்கல்வி மன்றம் முனைப்பு காட்டுவது வேதனை அளிக்கிறது.

உலகப் பொருளாதாரத்தில் போட்டியிடுகின்ற அளவுக்கு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ள சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழி கல்விக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்நாடுகளில் ஆங்கிலவழிக் கல்வி என்பதே இல்லை என்பதையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

எனவே, தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கவும், கிராமப்புற மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், வருங்காலத்தில் வளரும் தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள் தமிழ் மொழியையே அறியாத நாசகார இருளுக்குள் தமிழ் நாட்டை வீழ்த்தும் என்பதால், தமிழக அரசு உயர்கல்வி மன்றத்தினுடைய அக்கிரமமான பரிந்துரையை நிராகரித்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையையே தமிழக அரசு தொடர்ந்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

English summary
MDMK leader Vaiko has opposed the move of compulsory writing of college exams in English.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X