நேற்று கைதான ஸ்ரீசாந்த் நண்பர் சுக்லாவுக்கு இன்று ஜாமீன்.. போலீஸுக்கு கோர்ட் கண்டனம்
டெல்லி: ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கி கைதாகியுள்ள ஸ்ரீசாந்த்தின் நண்பரான அபிஷேக் சுக்லாவை டெல்லி போலீஸார் நடத்திய விதத்திற்கு டெல்லி கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சுக்லாவுக்கு இன்று ஜாமீனும் அளித்துள்ளது.
நேற்று டெல்லி போலீஸார் சுக்லாவை கைது செய்தனர். இவர் ஈவன்ட் மேனேஜராக இருக்கிறார். இவரை கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் நேராக மும்பைக்குக் கூட்டிச் சென்றனர். பின்னர் அவர் மூலம் புக்கிகள், ஸ்ரீசாந்த்துக்கு கொடுத்த ரூ. 5.5 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் மீண்டும் டெல்லிக்குக் கூட்டி வந்து சுக்லாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவருக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. சுக்லா தனது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும், ரூ. 25,000 ஜாமீன் உத்தரவாதம் செலுத்த வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் மும்பைக்கு சுக்லாவைக் கூட்டிச் சென்றதற்கும் போலீஸாருக்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சுக்லாவை போலீஸார் தங்களது காவலில் வைத்திருந்தது செல்லாது என்றும் அது சட்டவிரோதம் என்றும் கோர்ட்கருத்து தெரிவித்தது.
ஸ்பாட் பிக்ஸிங்கில் கைதான ஒருவர் உடனடியாக ஜாமீனில் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீசாந்த் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து சிறையில் அடைபட்டிருப்பதும் முக்கியமானது.