For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேது திட்டத்தை ‘ராமச்சந்திர மூர்த்தி திட்டம்‘ என பெயர் மாற்றியாவது செயல்படுத்துங்கள்: கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: நேற்று நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் 90 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர் கருணாநிதி, சேது சமுத்திர திட்டத்திற்காக தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுகூட்ட விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு கருணாநிதியை வாழ்த்திப் பேசினார்கள்.

தன் பிறந்தநாள் செய்தியாக கருணாநிதி சேது சமுத்திர திட்டத்திற்கான போராட்டம் குறித்து வலியுறுத்தினார். மேலும், விழா மேடையில் அவர் பேசியதாவது,' கடந்த 3 நாட்களாக தூக்கம் இல்லாத இரவுகளாக சென்றன. தூங்கி வழியும் கருத்துக்கள் இருந்தால் விலக்கி விட்டு, போர் வீரர்களாகும் கடமைக்கு ஆட்பட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

திமுக என்பது சாதாரண, சாமான்ய மக்களால், தோழர்களால் நிர்வகிக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இயக்கம். தற்போது மு.க.ஸ்டாலின் பொருளாளராக இருக்கிறார். அண்ணா காலத்தில் நான் பொருளாளராக இருந்தேன். இரண்டு பொருளாளர்கள் சேர்ந்து எப்படி உழைக்க வேண்டியுள்ளது என்பதற்காக சில செய்திகளை சொல்ல வேண்டியுள்ளது.

தேர்தல் நிதி:

காலையில் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து, தள்ளிக் கொண்டு, நிர்வாகிகளிடமும், உண்டியலில் நிதியளித்தனர். மாலையில் எண்ணப்பட்ட போது உண்டியலில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 158 சேர்ந்துள்ளது. சில காசோலைகளும் உள்ளன.

இந்த தொகை தேர்தலின்போது நியாயமான காரியங்களுக்கு செலவிடப்படும். திமுக ஆட்சியில் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றினோம். மக்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றி தரும் வழிவகைகளை எண்ணிப் பார்த்து பெரும் பயனை தமிழ்நாட்டிற்கு விளைவித்து தந்து இருக்கிறோம்.

அதிமுகவின் காழ்ப்புணர்ச்சி :

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் எந்த அளவு காழ்ப்புணர்ச்சியால் முடக்கப்பட்டுள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும். தலைமை செயலகம், சட்டப் பேரவை வளாகம், செம்மொழி தமிழாய்வு நூலகம், செம்மொழி பூங்கா, மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் சாலை என்று நான் முயற்சித்து கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் கிடப்பில் போட்டு விட்டார்கள்.

சென்னை காவல் ஆணையர் அலுவலக கட்டிடம் திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டும், இன்னும் திறப்பு விழா நடக்கவில்லை. ரூ.300 கோடியில் கட்டப்பட்ட அந்த கட்டிடம் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை.

சேதுசமுத்திரத் திட்டம் :

தமிழ்நாட்டை வளப்படுத்தும், அன்னியச்செலாவனி ஈட்டித்தரும் சேது சமுத்திர திட்டத்தை கிடப்பில்போட்டது மாத்திரம் அல்ல; வயிறு எரியச் செய்யும் செயலாக சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் கிடப்பில் போட்டுவிட்டோம் என்று கூறி அந்த திட்டம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் இது ராமர் கட்டிய பாலம். அதை இடிக்க கூடாது. அதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்கிறார்கள்.

ராமர் பாலம் பற்றி கருணாநிதி கூறுவதை ஏற்கமாட்டோம். அவர் நாஸ்திகர். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உச்சநீதி மன்றத்தில் முறை யிட்டார். அது விசாரணையில் இருக்கிறது. அது பின்னர் கேள்விக்குறியாக மாறி தமிழர்களின் எதிர்காலம், வாணிபத்தின் எதிர்காலம் வினாக்குறியாக மாறி தொங்கப்போகிறது. ராமர் பாலத்தை மாற்ற முடியாது என்றால் வைத்துக் கொள்ளுங்கள். சேது சமுத்திர திட்டம் என்பதற்கு பதிலாக ‘ராமச்சந்திர மூர்த்தி திட்டம்‘ என்று வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு தேவை அந்த திட்டம். பெயரை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் எங்களுக்கு திட்டம் தேவை. அதற்கு அரசு ஆவன செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். செய்யாவிட்டால் திமுகவின் செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றை கூட்டி, தோழமைக் கட்சியினரையும் சேர்த்துக் கொண்டு, தமிழகத்துக்கு இந்த திட்டம் வரவேண்டும் என்று எண்ணுகிறவர்களின் ஆதரவை திரட்டி சேது சமுத்திர திட்டத்தை கிடப்பில் போடாதே என்று கோஷம் எழுப்பி மாபெரும் போராட்டம் நடத்துவோம். இதுதான் என் பிறந்த நாள் விழா அறிவிப்பு.

இதற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் நிறுவன தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தோழமை கட்சிகளையும் இதில் இணைத்து, ‘சேது சமுத்திர திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்படி செயல்படுத்த முன்வராவிட்டால் போர், போர், போர்'. இங்குள்ள அரசுக்கும், மத்திய அரசுக்கும் இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்' என கருணாநிதி உரையாற்றினார்.

English summary
The DMK president karunanithi insisted that the center and the state government should take neccessary action to complete Seathu Samuththiram Project, while speaking in his 90th birthday public meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X