For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வு.. துர்ப்பாக்கிய நிலையில் மக்கள்: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jaya slams petrol price hike
சென்னை: ஏழை, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை திரும்ப பெறவேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அதையே காரணம் காட்டி மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வாடிக்கையாக உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அல்லல்படுவதை வேடிக்கைப் பார்க்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாதம் 1ம் தேதி பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 75 காசு என்றும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்றும் ஏற்றிய மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்களில் மீண்டும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி பெட்ரோலின் விலையை இன்று முதல் 2 ரூபாய் உயர்த்தி இருப்பது ஏழை மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது என்பது ஒரு குறுகிய கால நிகழ்வு என்று மத்திய நிதி அமைச்சரும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும் கூறுகின்ற நிலையில், இதைக் காரணம் காட்டி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து ஆறாவது வாரமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. வெள்ளம் வருமுன்னே அணை கோல வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப, வீழ்ச்சியடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போதைய பெட்ரோல் விலை உயர்வை நிச்சயம் தடுத்திருக்கலாம். இதன்மூலம் இந்திய நாட்டின் பொருளாதாரமும் ஓரளவு வளர்ச்சியடைய வழிவகை ஏற்பட்டிருக்கும்.

2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 ரூபாய் 48 காசு என்ற அளவில் இருந்தது. இது, 2011 ஏப்ரல் மாதத்தில் 44 ரூபாய் 17 காசு என்ற அளவிலும், தற்போது 58 ரூபாய் என்ற அளவிலும் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதற்கு காரணம் மந்தமான வளர்ச்சி, நிதிப் பற்றாக்குறை, ஏற்றுமதி வீழ்ச்சி, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, அந்நிய செலாவணி பெறுதலைச் சார்ந்திருத்தல் ஆகியவையே காரணங்கள் ஆகும்.

பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்நிய நிதி நிறுவனங்கள் பங்கு சந்தையிலும், இந்திய கடன் பத்திரங்களிலும் பெருமளவு முதலீடு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளன. இவ்வாறு அந்நியச் செலாவணி நமது நாட்டிற்குள் வரப்பெறுவதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதில்லை.

அதே சமயத்தில், இவ்வாறு பங்கு சந்தையிலும், கடன் பத்திரங்களிலும் செய்யப்படும் முதலீடுகள் விற்கப்பட்டு அந்நிய செலாவணி வெளியே கொண்டு செல்வதன் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதுடன் மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனை சரி செய்யவும் மத்திய காங்கிரஸ் கூட்டணி எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.நாட்டு நலனை மறந்து திசை மாறி காங்கிரஸ் கட்சி சென்றுவிட்டதால், மக்கள் கூடுதல் சுமையை மாதத்திற்கு இரண்டு முறை ஏற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மக்கள் நலனுக்கும், நாட்டு நலனுக்கும் எதிரான இதுபோன்ற மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகள், விலைவாசி மேலும் உயரவும், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையவும், இந்திய நாட்டின் பொருளாதாரம் மேலும் சீரழியவும் வழிவகுக்குமே தவிர நாட்டை முன்னேற்ற வழி வகுக்காது.எனவே, உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை பெருக்கும் வகையில், எண்ணெய் வளமும், எரிவாயு வளமும் நிறைந்துள்ள நம் நாட்டில் புதிய அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைச் செய்யாமல், எண்ணெய் இறக்குமதியை குறைக்கக் கூடாது என்று எண்ணெய் இறக்குமதி ஆதரவு குழு பெட்ரோலியத்துறை அமைச்சர்களை மிரட்டுவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரே கூறுவது நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ளது.

இனியாவது நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியவாறு பெட்ரோல் விலை நிர்ணய முறையையே மாற்றி அமைக்கவும், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்தவும், புதிய அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Chief Minister Jayalalitha has condemned the hike of petrol price and asked the govt top revert back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X