For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூங்குபவரை எழுப்பலாம், தூங்குபவர் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது: கருணாநிதி மீது ஜெ. விளாசல்

By Siva
Google Oneindia Tamil News

Kuruvai cultivation issue: Jaya blasts Karunanidhi
சென்னை: தூங்குபவரை எழுப்பலாம் ஆனால் தூங்குபவரைப் போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா என்று கேட்ட திமுக தலைவர் கருணாநிதியை பற்றி முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுக அரசு இனியாவது விழித்துக் கொண்டு இந்த ஆண்டு குறுவை சாகுபடி உண்டா? இல்லையா? நீர் கிடைக்குமா? கிடைக்காதா? விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக வறட்சிக்கு நிவாரணம் அளித்ததோடு மட்டுமல்லாமல், டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளையும், தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சேர்ப்பதற்காக, விவசாயிகள் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தியது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் மகசூல் பாதித்த 3.61 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வீதம், 3 லட்சத்து 52 ஆயிரத்து 613 விவசாயிகளுக்கு ரூ.524.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.

டெல்டா அல்லாத மாவட்டங்களை பொறுத்தவரையில், 50 சதவீதத்துக்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.5,000, பாசன ஆதாரமுள்ள நிலங்களில் இதர பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 4,000, பாசன ஆதாரமற்ற நிலங்களில் பயிர் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,000, தென்னை உள்ளிட்ட நீண்டகால பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ரூ.4,000 என 16 லட்சத்து 3 ஆயிரம் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ..756 கோடியே 22 லட்சம் அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வறட்சி நிவாரண பணிகளுக்காக ரூ.3,881 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு விவசாயிகளை காத்து வரும் தமிழக அரசை பார்த்து ‘இனியாவது விழித்துக் கொண்டு...' என்று கருணாநிதி கூறுவது ‘தூங்குபவரை எழுப்பலாம்; தூங்குபவரை போல் நடிப்பவரை எழுப்ப முடியாது' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதும், மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதும் என்ற போக்கிலே செயல்படுவதன் காரணமாக, உண்மையில் பலவகையிலும் பாதிக்கப்படுவோர் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தான் என்று கருணாநிதி அறிக்கை விட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

காவிரியில் நமக்குள்ள உரிமை இன்று நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றால், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது என்றால், அதற்கு முழு காரணமும் உச்ச நீதிமன்றத்திலே தமிழக அரசு முறையிட்டது தான் என்பதை இந்த தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தற்போது, மேட்டூர் அணையில் 3.45 டி.எம்.சி. தண்ணீரே உள்ள நிலையில், ஜூன் முற்பகுதியில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவையும், மேட்டூரில் நமக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவையும் கருத்தில் கொண்டு தான், இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொள்வது குறித்த நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சூழ்நிலையில் ஜூன் 12ம் தேதியே ‘குறுவை சாகுபடி உண்டா?' என்று கருணாநிதி கேள்வி எழுப்புவது கேலிக்கூத்தாக உள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீர் பெறப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தவுடன், நமக்கு உரிய தண்ணீர் பெறப்படும். இயற்கையின் கருணையால், மக்களின் நல்லெண்ணத்தால் போதிய அளவு மழை பெய்து, தமிழக அரசின் நடவடிக்கையால் காவிரியில் நமக்குரிய தண்ணீர் நிச்சயம் கிடைக்கும். இதன்மூலம் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்க வழி ஏற்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
TN CM Jayalalithaa blasted DMK supremo Karunanidhi for asking questions about Kuruvai cultivation and the release of water from Mettur dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X