For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலுறவே திருமணமென்பது விபரீத விளைவுகளை உண்டாக்கும்: மனுஷ்யபுத்திரன்

By Mathi
Google Oneindia Tamil News

Writer Manushyaputhiran opposes HC judgment on pre marital sex
சென்னை: பாலுறவே திருமணம்தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு விபரீத விளைவுகளை உண்டாக்கும் என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நக்கீரன் வாரம் இருமுறை ஏட்டில் இது தொடர்பாக மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கட்டுரை விவரம்:

நீதிமன்றம் இதுபோன்ற வழக்குகளைக் கண்டதில்லை என்கிற அளவுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது வழக்குகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் முதன்மையாக மூன்று அம்சங்களைப் பிரதிபலிக் கின்றன. முதலாவதாக மாறிவரும் சமூக யதார்த்தத்திற்கு ஏற்ப தோன்றும் புதிய முரண்பாடுகளும் சிக்கல்களும். இரண்டாவதாக இந்தப் புதிய பிரச்சினைகளை சரியாக எதிர்கொள்வதற்கேற்ப நமது சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டியதன் அவசியம். மூன்றாவதாக நீதியரசர்கள் வழங்கும் தீர்ப்புகளின் தன்மை. இந்தத் தீர்ப்புகளில் மாறிவிட்ட புதிய சமூகச் சூழல்களை கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், அதேசமயம் நீதிபதிகளின் தனிப்பட்ட மனோபாவம். இதெல்லாம் சேர்ந்து தான் இன்று நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகும் சூழலை ஏற்படுத்தியிருக்கின்றன. இதை நாம் ஒரு சமூகம் மாறுதலடைகிற காலகட்டத்தின் விளைவுகளாகக் கொள்ள வேண்டும். பழைமைவாதத்திற்கும் புதிய சிந்தனைகளுக்கு மிடையே மரபான வாழ்க்கை முறைக்கும் புதிய வாழ்க்கை முறைக்கும் இடையே சமூகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்களின் விளைவுகளை நீதிமன்றங்கள் எதிர்கொள்வதைத்தவிர வேறு வழி இல்லை.

வழக்கும் தீர்ப்பும்

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பு கடும் விவாதங் களை உருவாக்கியிருக்கிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் பாலுறவு என்பது திருமணத்திற்கு சமம் என்கிற ஒரு கருத்தினடிப்படையில் நீதிபதி அந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். கோவையைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் 1994இல் மரபான முறைப்படி திருமணம் செய்து கொள்கிறார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு 1999ஆம் ஆண்டு அந்த நபர் அந்தப் பெண்ணை விட்டுப் பிரிந்துவிடுகிறார். கணவரிடம் அந்தப் பெண் மாதம் 5000 ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். தாங்கள் சேர்ந்து வாழ்ந்ததற்கு ஆதாரமாக புகைப்படங்கள், தனது தந்தைக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தையின் கல்விச் சான்றிதழ்கள், பிறப்புப் பதிவு, குடும்ப அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்தப் பெண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். அந்தப் பெண்ணின் கணவர், "பாத்திமா என் மனைவி அல்ல, குழந்தைகள் எனக்குப் பிறக்கவில்லை. முஸ்லிம் வழக்கப்படி திருமணம் நடந்திருந்தால் பள்ளி வாசலில் அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அப்படி பதிவு செய்யப்படாததால் எங்களுக்குள் திருமணம் நடக்கவில்லை'" என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோருகிறார். மனுவை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், ஆவண சாட்சியங்களின் மூலம் திருமணம் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அந்தப் பெண்ணிற்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்ற தீர்ப்பை வெளியிட் டது. இதை எதிர்த்து அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மரபான திருமணங்கள்

இந்தத் தீர்ப்பு ஒருபுறம் மிகவும் முற்போக்கானது என்று பல பெண்ணுரிமை ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர். நம்முடைய திருமண முறைகளில் பெரும் பாலான திருமணங்கள் மரபான முறைகளிலேயே நடைபெறுகின்றன. சட்டப்படியாக பதிவு செய்யப்படும் திருமணம் மிகவும் குறைவு. மதச்சடங்குகளின் அடிப்படையில் நடக்கும் திருமணங்களில்கூட பல திருமணங்கள் கோயில்களிலோ பள்ளிவாசல்களிலோ அதற்குரிய பதிவேடுகளில் சரியாக ஆவணப் படுத்தப்படாமல் போகின்றன என்பதற்கான உதாரணம்தான் மேற்படி வழக்கு. இந்தச் சூழ் நிலையில் இரண்டு பேர் சேர்ந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய பிற சாட்சியங் களையும் ஆவணங்களையும் கொண்டே அந்த உறவிற்கு திரு மணம் என்ற சட்டபூர்வ அந்தஸ்தை அளிக்க வேண்டுமென்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாராம்சம். குழப்பமான திருமண முறைகள் நிலவும் ஒரு நாட்டில் குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் முழு பொறுப்பும் பெண்களிடமே இருப்பதாலும், ஒரு உறவினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பெண்களுக்கே சமூகத்தில் அதிகம் ஏற்படுவதாலும் இந்தத் தீர்ப்பு ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு அளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தத் தீர்ப்பில் "குடும்பநல நீதிபதி இந்த இரண்டு குழந்தைகளும் முறைதவறி பிறந்தவர்கள்' என்று கூறியுள்ளார். குழந்தை பிறந்தபோது கணவன் மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன்-மனைவிக்காக குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்து இட்டிருப்பதால் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை முறையற்று பிறந்த குழந்தைகள் என்று சொல்ல முடியாது. திருமணத்தை நடத்துவது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. அவை சட்டத்தின் அடிப்படையில் கட்டாயம் அல்ல" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பிட்ட வழக்கில் நீதிபதி கூறும் இதுவரையிலான கருத்துகள் எல்லாமே மிகமிக நியாயமானவை, முற்போக்கானவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தத் தீர்ப்பை வலுப்படுத்து வதற்காக நீதிபதி, திருமணத்திற்கு முந்தைய பாலுறவு பற்றியும், திருமணம் அல்லாமல் சேர்ந்து வாழ்வது பற்றியும் கூறியுள்ள பல கருத்துகள் மிகவும் விவாதத்திற்குரியதாக இருக்கின்றன.

இந்தத் தீர்ப்பில், "ஒரு பெண் 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன் உடலுறவு கொண்டு, அதன் மூலம் கர்ப்பமுற்றால் அந்தப் பெண் மனைவி என்றும் அந்த ஆண் கணவன் என்றும் கருதப்பட வேண்டும். அந்தப் பெண் கர்ப்பம் அடையவில்லை என்றாலும்கூட அவர்களது உறவுக்கான ஆவண சாட்சி யம் இருந்தால் கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர். உடல்ரீதியான தொடர்புக்குப் பின் அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்துபோக முடிவெடுத்தால் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறாமல் வேறு திருமணம் செய்ய முடியாது. அது செல்லத்தக்க திருமணம். மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திரு மணங்களிலும் உடல்ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால் அந்த திருமணம் தோல்வி யடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். எனவே, செல்லத்தக்க திருமணத்தில் சட்ட ரீதியான முக்கிய அம்சம் கணவன், மனைவிக்கு இடையேயான உடல் ரீதியான தொடர்பு.

பாலுணர்ச்சி வயதை அடைந்த ஒரு ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு சில சந்தர்ப்பங்களில் பாலுறவில் ஈடுபடுவதும், பின்னர் அவர்கள் வாழ்க்கையில் வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பதும் பரவலாக நடந்து வருகிறது. இதற்கும் நீண்டகாலம் இருவர் சேர்ந்து வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தீர்ப்பில் அந்த வித்தியாசங்கள் வரையறுக்கப்படவில்லை. பாலுறவே திருமணம்தான் என்று பேசுகிறது. பாலுணர்வு என்பது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாக யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம். அதேபோல ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாலுறவுகள் இருக்கிறபட்சத்தில் அவை எல்லாவற்றையும் திருமணம் என்று வரையறுக்க முடியுமா? அப்படி வரையறுத்தால் அது ஏற்கனவே இருக்கக்கூடிய இந்து திருமணச் சட்டத்திற்கு எதிரான ஒன்று. மேலும் திருமணம் இல் லாத உறவில் ஒருவர் இன்னொரு வருடன் பாலுறவு வைத்திருந்துவிட்டு பிறகு வேறொருவரை திருமணம் செய்துகொள்வ தாக இருந்தால் இந்த உறவு வைத்திருந்த நபரிடம் இருந்து விவாகரத்து பெறவேண்டும் என்றெல்லாம் நீதிபதி கூறுகிறார். இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை. இந்தத் தீர்ப்பை முழுக்க முழுக்க பெண்களின் கோணத்திலிருந்து மட்டும் பார்ப்பது ஆபத்தானது. ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணுடன் சந்தர்ப்பவச மாக ஒரு உடலுறவு இருந்தது என்று வைத்துக்கொள்வோம். பிறகு அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்ய நேரும்போது அவருடன் ஏற்கனவே உறவு கொண்ட ஆண் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் இந்த நாளில் இந்தப் பெண்ணோடு உறவு வைத்துக்கொண்டேன் என்று சாட்சியங்களை ஜோடித்து காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கும்பட்சத் தில் நம்முடைய சமூக அமைப்பில் அந்தப் பெண்ணுடைய ஒழுக்கம் உடனடியாக கேள்விக் குள்ளாக்கப்பட்டு அவருடைய வாழ்க்கை நிர்மூலமாக்கப்பட்டுவிடும். அடுத்ததாக, குழந்தை கள் இல்லாதநிலையில் ஒருவருடன் உடலுறவு இருந்ததை நிரூபிக்கும் ஆதாரங்களை ஒருவர் எப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். எவை ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படும்?

தீர்ப்பால் பாதிப்பு

இந்தத் தீர்ப்பு திருமண அமைப்பிற்கு வெளியே சேர்ந்து வாழ்கிறவர்களுடைய உரிமைகளின் மீது தலையிடுகிறது என்றும் சொல்லலாம். உண்மையில் இந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருக்கும் ஒரு தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உச்சநீதிமன்றம் திருமணத் திற்கு முந்தைய உறவு தொடர்பாக நடிகை குஷ்பு தெரிவித்த கருத்தினடிப்படையில் தொடுக் கப்பட்ட வழக்குகளின்மீது தெளிவான உத்தரவை வழங்கியது. வயது வந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் என்ன தவறு இருக்க முடியும்? திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்வது ஒரு குற்றமல்ல என்று அப்போது தீர்ப்பு அளிக்கப் பட்டது. 2010இல் டெல்லி உயர் நீதிமன்றம் திருமணத்திற்கு வெளியே நடக்கும் பாலுறவு, பாலியல் வன்முறைக்கு சமம் என்கிற ஒரு தீர்ப்பை வழங்கியது. ஆனால் 2013இல் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்ததோடு பாலியல் வன்முறைக்கும் விருப்பத்துடன் மேற்கொள்ளும் உறவிற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக வரையறுத்தது. மேலும் பாதிக்கப்பட்டவர் நம்பிக்கை மோசடியின் அடிப்படையில் பாலுறவிற்கு உட்படுத்தப்பட்டாரா என்பதை கவனத்தில் கொண்டு இதுபோன்ற தீர்ப்புகளை வழங்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியது.

எல்லா பாலியல் உறவுகளையும் திருமண உறவுகளாக கருதும் முடிவு ஒரு வேளை செயல்படுத்தப்பட்டால் அதனுடைய விபரீத விளைவுகளை கற்பனைகூட செய்ய முடிய வில்லை. பாலுறவுக்கும் தனிமனிதப் பொறுப்புக் கும் இடையே புதிய வரையறைகளை நாம் உருவாக்க வேண்டும். அதில் தனிமனிதர்களுடைய சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும், மனிதநீதியும் காப்பாற்றப்பட வேண்டும் என்று பதிவு செய்துள்ளார் மனுஷ்யபுத்திரன்.

English summary
Writer Manushyaputhiran opposed the Madras High Court Judgement on pre martial sex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X