For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு காவிரி,என்.எல்.சி; திமுகவுக்கு சேது, கச்சத்தீவு மற்ற கட்சிகளுக்கு என்ன?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றே தீர வேண்டும் என்று மட்டுமே எண்ணக் கூடிய முக்கிய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன அதிமுகவும் திமுகவும்..இப்படி முன்னுரிமை கொடுத்து பிரச்சனைகளை பேசுவதே விரைவில் வரக் கூடிய லோக்சபா தேர்தல் அறுவடைக்காகத்தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..

கடந்த ஓராண்டு காலமாகவே எதிர் எதிர் அரசியல் அல்லது குறுக்குசால் ஓட்டி குட்டையைக் குழப்புவது போன்ற வேலைகளில் இறங்குவதை அதிமுகவும் திமுகவும் ஓரளவு குறைத்தே வந்துள்ளன. தமிழகத்தில் நீண்டகாலமாக பேசப்பட்டு மட்டுமே வந்த விவகாரங்கள்தான் காவிரி நதிநீர் விவகாரம், சேதுக்கால்வாய் திட்டம், கச்சத்தீவு மீட்பு போன்றவை..

திமுக, அதிமுக, மதிமுக என பெரும்பாலான கட்சிகளின் லோக்சபா அல்லது சட்டசபை தேர்தல் அறிக்கைகளில் இப்படியான மக்கள் பிரச்சனைகளை முன் வைக்கப்பட்டு ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம்' அல்லது நிறைவேற்ற குரல் கொடுப்போம் என்ற வாசகங்கள் தவறாமல் இடம்பிடித்திருக்கும்

காவிரியும் அதிமுகவும்

காவிரியும் அதிமுகவும்

தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் காவிரி நதிநீர் கோரி ஏராளமான வழக்குகளை சளைக்காமல் உச்சநீதிமன்றத்தில் போட்டது. அப்படி இப்படி எனப் போராடி இத்தனை ஆண்டுகாலம் இல்லாத சாதனையாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைக்கப்பட்டுவிட்டது. இது அதிமுகவின் சாதனை என்று பிரகடனம் செய்யப்படுகிறது. அத்துடன் ஓய்ந்துவிடாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்கான சட்டப் போராட்டமும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. காவிரி நதிநீர் உரிமையை மீட்டெடுத்தவர்கள் நாங்கள் என்று லோக்சபா தேர்தலில் நிச்சயம் அதிமுகவினர் நெஞ்சு நிமிர்த்தி பேசுவார்கள்.

என்.எல்.சி.விவகாரம்

என்.எல்.சி.விவகாரம்

திடீரென உருவானது என்.எல்.சி. விவகாரம்.. என்.எல்.சி.யின் 5% பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆளும் அதிமுகவோ தமிழக அரசே அந்த பங்குகளை வாங்கும் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல் ரூ500 கோடிக்கு பங்குகளை வாங்கியும் காட்டி தொடர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கும் கொண்டு வந்திருக்கிறது. இதையும் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கான உத்தியாக அதிமுக முன்வைக்கும்

அம்மா உணவகம், அம்மா காய்கறிகடை

அம்மா உணவகம், அம்மா காய்கறிகடை

தமிழகமெங்கும் பேசப்படுகிற விஷயம் அம்மா உணவகம். சென்னையில் அம்மா காய்கறி கடை.. எதிர்க்கட்சியினர் என்னதான் விமர்சித்தாலும் இன்றைய நாளில் ரூ3க்கும் ரூ5க்கும் உணவு கிடைப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. அதனால்தான் அமோக வரவேற்பு.. இதுவும் அதிமுகவின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம்பிடிக்கும்

ஈழப் பிரச்சனை

ஈழப் பிரச்சனை

ஈழத் தமிழர் பிரச்சனையில் தனித் தமிழீழம், இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை, ஆசிய விளையாட்டு போட்டியை நடத்த முடியாது என அறிவித்தது, ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என பிரகடனம் செய்தது என முழுமையான ஆதரவு நிலை மேற்கொண்டு "ஈழத் தாய்' என்ற நிரூபித்திருக்கிறார். இதுவும் நிச்சயம் அதிமுகவின் லோக்சபா தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் முழுமையாக பேசப்படும்.

திமுகவுக்கு சேது, கச்சத்தீவு

திமுகவுக்கு சேது, கச்சத்தீவு

ஆனால் திமுக ஆளும் கட்சியாகவும் இல்லை.. மத்தியில் ஆளும் கட்சி கூட்டணியிலும் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் திமுக எடுத்திருக்க வேண்டிய, எடுக்க தவறிய அத்தனை நடவடிக்கைகளையும் ஒரேயடியாக செய்து ‘ஈழத் தமிழர் துரோக கட்சி திமுக' என்ற கோஷத்துக்கு வலு சேர்த்து வைத்துவிட்டது அதிமுக. அதனால் இந்த கெட்டபெயரை எப்படிப் போக்குவது என்பதற்காகத்தான் திமுக தொடர்ந்தும் டெசோவை தூக்கிக் கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர் விவகாரங்களை ஒட்டிய கச்சத்தீவு விவகாரம், சேதுக்கால்வாய் திட்டம் போன்றவற்றுக்காக ஆட்சியில் இருந்த காலத்தைவிட கூடுதலாக குரல் கொடுக்கிறது திமுக. சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்தையும் கச்சத்தீவை மீட்க சட்டப் போராட்டத்தையும் நடத்துகிறது திமுக.

அதிமுக- திமுகவால் நெளியும் இதர கட்சிகள்

அதிமுக- திமுகவால் நெளியும் இதர கட்சிகள்

இப்படி தமிழகத்தில் முதன்மையான பிரச்சனைகளை திமுகவும் அதிமுகவும் தங்களது தேர்தல் பிரசாரத்துக்கான ‘களப் பொருளா'க்கி வாக்காளர்களை கவர மும்முரம் காட்டி வருகின்றன. இதனால் இந்த விவகாரங்களை எல்லாம் பேசி வந்த மதிமுகவுக்கு தேர்தல் களப் பொருள் எது என்பது கேள்வியாகிவிட்டது. கையில் இருந்த ஸ்டெர்லைட் விவகாரம், விடுதலைப் புலிகள் தடை விவகாரம் மதிமுகவுக்கு தோல்வியில் முடிந்து போனது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸைப் பொறுத்தவரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் என்றெல்லாம் கூறி சமாளிக்கலாம். களப் பொருள் பற்றியெல்லாம் கவலைப்படாத கட்சியாக இருப்பது தேமுதிக. ஆனாலும் அதிமுகவும் திமுகவும் இப்படி முக்கிய பிரச்சனைகளைப் பற்றி பேசுவதால் ‘நாம் பேசுவதற்கு என்ன இருக்கிறது' என்ற கேள்வி தேமுதிகவினரிடம் எழலாம். இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் பாணி தனிபாணி. இப்படி களப் பொருள்களை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்வது என்பது தமிழக அரசியலில் புதிய யுக்தியாக தற்போதுதான் உருவெடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Tamilnadu's Key problems like Cauvery, Sri Lankan Tamil, NLC, Sethu Projects issues now emerging main election factor for ADMK and DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X