For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் கதிர்வீச்சு அபாயத்துக்கு மத்திய அரசும், அணு சக்தித் துறை அதிகாரிகளும்தான் பொறுப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Vaiko questions centre and atomic energy officials on KKNPP
சென்னை: பொதுமக்களின் நியாயமான எதிர்ப்பைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கில் கூடங்குளம் அணுஉலையை இயக்குவார்களானால், அதனால் ஏற்படும் கதிர்வீச்சு உள்ளிட்ட அனைத்து விளைவுகளுக்கும் மத்திய அரசும், அணுசக்தித் துறை அதிகாரிகளும்தான் பொறுப்பாளிகள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கூடங்குளம் அணுஉலையை அகற்றக்கோரி, சுதந்திர இந்தியாவில் இதுவரை எங்கும் நடைபெற்றிடாத வீரம் செறிந்த அறவழிப்போராட்டத்தை, 700 நாட்களாகத் தொடர்ந்து அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், பொதுமக்களும், குறிப்பாக மீனவப் பெருமக்களும், இடிந்தகரையை அறப்போர்க்களமாக்கி நடத்தி வருகின்றனர்.

துளி அளவும் வன்முறை இல்லாத இந்த அறப்போரை நசுக்குவதற்கு, மத்திய அரசின் அபாண்டமான பழிசுமத்தலும், பொய்யான குற்றச்சாட்டுகளும் போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்டு, மாநில அரசின் காவல்துறையும் கடுமையான அடக்குமுறையை ஏவியது. ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டன. இந்த அறப்போரில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் வாடியதால் இரண்டு மீனவச் சகோதரிகள் உயிர் இழந்தனர். மணப்பாட்டைச் சேர்ந்த அந்தோணி ஜான் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்திய விமானப் படையின் சிறிய இரக விமானம் இடிந்தகரை போராட்டக்காரர்களை மிரட்ட முயன்று தாழ்வாகப் பறந்ததில் சகாயம் என்ற மீனவர் கொல்லப்பட்டார்.

கடற்கரை ஓரத்து கிராமங்களில், பல்லாயிரக்கணக்கான மீனவ மக்கள் தங்களை வருத்திக்கொண்டு மீன்பிடித் தொழிலுக்குப் பல நாட்கள் செல்லாமல், அன்றாட வருவாயையும் இழந்து, தென்தமிழ்நாட்டைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர்.

கூடங்குளம் அணுஉலையில் மாதிரி எரிபொருள் நிரப்பி, அணுக்கரு பிளவுக்கான முதல் படிநிலை நடத்தப்பட்டதாகவும், அணுஉலையின் உற்பத்தி சில நாட்களிலேயே தொடங்கி விடும் என்றும், மத்திய அணுசக்தித் துறை அதிகாரிகளும், அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய தலைவரும் துளியும் உண்மை இல்லாத பொய்யான பித்தலாட்ட அறிக்கையைத் தந்து உள்ளனர்.

மாதிரி எரிபொருள் நிரப்பவும், அணுப்பிளவு செய்யவும், 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டிலேயே அனுமதி வழங்கப்பட்டது. அதே அனுமதியைத்தான் இப்பொழுதும் தந்துள்ளனர். அப்படியானால் ஓராண்டு காலம் எரிபொருள் நிரப்பி அப்படியே வைத்து இருந்தார்களா? என்ற கேள்வி எழுகிறது.

கூடங்குளம் அணுஉலை வழக்கில் உச்ச நீதிமன்றம் மே மாதம் 6 ஆம் தேதி தந்த தீர்ப்பில், "அணுஉலையில் 15 நிபந்தனைகளைச் செயல்படுத்த வேண்டும்; அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் திட்டவட்டமாகக் கூறியது. அதன்படி இந்திய அணுமின் கழகம், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தங்கள் அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைத் தவிர, மத்திய அரசினுடைய அமைப்புகள் எவையும் ஆய்வு அறிக்கை தரவில்லை. உச்ச நீதிமன்ற நிபந்தனையின்படி, அறப்போராட்டக்காரர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை போட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் இல்லை.

அணுஉலை பாதுகாப்பு சம்மந்தமான ஒவ்வொரு எந்திரப் பகுதியையும், பொருளையும் தரம் குறித்து ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்து அதற்குரிய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் வழங்கி, அதனை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து அனுமதி கொடுத்த பிறகே கூடங்குளம் அணுஉலையை இயக்க அனுமதிக்க முடியும் என்று அந்தத் தீர்ப்புக் கூறுகிறது.

கூடங்குளம் அணுஉலையில் இலட்சக் கணக்கான உதிரி பாகங்கள்; ஒவ்வொன்றையும் சோதனை செய்து தரத்தை உறுதிப்படுத்த பல மாதங்கள், ஏன் வருடக்கணக்கில் ஆகும். ஆனால், இரண்டு மாதத்துக்குள்ளாக அணுஉலையை இயக்கப் போகிறோம் என்று தற்போது அறிவித்தது, மத்திய அரசு மக்களை ஏமாற்றுகின்ற வஞ்சகச் செயல் ஆகும்.

மின்சார வெட்டினாலும், மின் தட்டுப்பாட்டாலும் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களிடம் கூடங்குளம் அணுஉலையால் தமிழகத்தின் மின் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, அணுஉலைக்கு எதிரான நியாயமான போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே திட்டமிட்டு இப்பிரச்சாரத்தை தொடர்ந்து செய்கின்றனர்.

இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் நாட்டில் உள்ள 21 அணுஉலைகளும் வழங்கும் மொத்த மின்சாரம் சுமார் இரண்டரை விழுக்காடு மட்டுமே ஆகும்.

கூடங்குளம் அணுஉலையின் முதல் யூனிட்டில் மொத்த உற்பத்தித் திறன் என்பது ஆயிரம் மெகா வாட் என்று சொல்லப்பட்டாலும், அதில் அறுபது சதவிகிதம் தான் அதிகபட்சம் உற்பத்தி செய்ய முடியும். இதுதான் இந்தியாவில் உள்ள அணுஉலைகளின் அதிகபட்ச உற்பத்தி அளவீடு ஆகும். அப்படியே 600 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டால், உலையை இயக்குவதற்கு 75 மெகா வாட் போக, மீதம் உள்ள 575 மெகா வாட் மின்சாரத்தில் காட்டில் விதிப்படி, தமிழ்நாட்டுக்கு 45 விழுக்காடு, 236 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கும்.

உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து பயனீட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்படும் 20 சதவிகித இழப்பை கணக்கிட்டால், அதிகபட்சம் தமிழ்நாட்டுக்கு 190 மெகா வாட் மின்சாரம்தான் கிடைக்கும். எனவே, தமிழ்நாட்டின் மின்சாரத் தேவைக்கு அணுஉலை பயன்படும் என்பது, தாகத்தில் தவிப்போருக்குக் கானல் நீரைக் காட்டுகின்ற வேலை ஆகும்.

கூடங்குளம் அணுஉலையின் அணுக் கழிவுகளை எங்கள் மாநிலத்துக்குள் கொட்ட அனுமதிக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துவிட்டது. தமிழக மக்களின் உயிர்களைப் பணயம் வைக்கும் அணுஉலையின் மின்சாரத்தை மட்டும் பிற மாநிலங்கள் பெற்றுக்கொள்ளுமாம்.

இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவராக இருந்த ஏ.கே.கோபாலகிருஷ்ணன் அவர்கள், "கூடங்குளம் அணுஉலை ஆபத்தானது என்றும், கூடங்குளத்தில் பொருத்தப்பபட்ட இரஷ்யாவின் உதிரி பாகங்கள் தரமற்றவை என்றும், பாதுகாப்பை ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்த பின்னரே அணுஉலையை இயக்க வேண்டும்" என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இந்திய இயற்பியல் நிபுணர்கள் அமைப்பு, சுற்றுச்சூழல் நிபுணர்கள், அறிவியில் துறை விற்பன்னர்கள் என பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள 59 விஞ்ஞானிகள் இந்தியப் பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும், கேரள முதல்வருக்கும் கூடங்குளம் அணுஉலையின் தரம் குறைந்த பாகங்கள், அதனால் ஏற்படக்கூடிய பேராபத்துகள் குறித்தும் உரிய விளக்கங்களோடு எச்சரிக்கை கடிதம் அனுப்பினர். அதில், கூடங்குளம் அணுஉலையில் தரம்குறைந்த பாகங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்பு முறையில் உள்ள நான்கு வால்வுகள் பழுது அடைந்து உள்ளதாகவும் வெளியான செய்திகள் கவலை அளிப்பது மட்டும் அல்லாமல், இரஷ்யாவில் இருந்து பாகங்களைக் கொள்முதல் செய்ததில், இரஷ்யா இயக்குநர் செர்ஜி சூட்டாவின் கைதும், நடைபெற்ற ஊழலும் அணுஉலை பாதுகாப்பு குறித்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது என்றும், அணுஉலை இயங்க அனுமதித்துவிட்டால், கதிர்வீச்சு நிறைந்த பகுதிகளை அணுகவோ, ஆய்வு செய்வோ முடியாமல் போய்விடும் என்று தங்கள் கடிதத்தில் அபாய அறிவிப்பைத் தந்தனர்.

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் இராமதாசும் கூடங்குளம் அணுஉலை ஆபத்தைச் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவில் 1979 மார்ச் 28 இல் ஏற்பட்ட மூன்றுகல் தீவு அணுஉலை விபத்து, இரஷ்யாவில் 1986 ஏப்ரல் 26 இல் செர்னோபிலில் ஏற்பட்ட அணுஉலை விபத்து, 2011 மார்ச் 11 இல் ஜப்பான் புகுஷிமாவில் ஏற்பட்ட அணுஉலை விபத்து, இவைகளால் ஏற்பட்ட மனித உயிர் இழப்புகளும், தொடர் விளைவுகளும் மனித குலத்துக்கே அணுஉலை குறித்து செய்யப்பட்ட எச்சரிக்கைகள் ஆகும்.

அமெரிக்க மூன்றுகல் தீவு விபத்துக்குப் பின்பு, 14 ஆண்டுகள் நூறு கோடி டாலர் செலவு செய்தும் நிலைமையைச் சரிசெய்ய முடியவில்லை.

செர்னோபில் விபத்தில் இரண்டு இலட்சம் பேர் உயிர் இழந்தனர். பல நாடுகளுக்கும் கதிர்வீச்சுப் பரவியது. 3,50,400 பேர் வெளியேற்றப்பட்டனர். 19,38,100 ஏக்கர் விவசாய நிலமும், 17,15,000 ஏக்கர் காடுகளும் அணுக்கதிர்வீச்சால் அழிந்தன. செர்னோபில் விபத்திற்குப் பிறகு பிறந்த குழந்தைகள் முழு அவயவங்கள் இன்றி உள்ள புகைப்படங்களும், உயிர் இழந்தவர்களின் உடல்களும் உக்ரேன் அருங்காட்சியகத்தில் உள்ளன. புகைப்படத்திலும், காணொளியிலும் கண்டால் நெஞ்சு நடுங்கும்.

1979க்குப் பிறகு அமெரிக்காவில் இரண்டு அணுஉலைகள்தான் தொடங்கப்பட்டன. ஐரோப்பாவில் புதிய அணுஉலைகள் அமைக்கப்படவில்லை. ஜெர்மனி, பெல்ஜியம், சுவிÞ போன்ற ஐரோப்பிய நாடுகள் இருக்கும் அணுஉலைகளையும் மூடப்போவதாக அறிவித்துவிட்டன. 1980 களில் 206 அணுஉலைகளை உலக நாடுகள் அமைத்தன. 1990 களில் 51 ஆக குறைந்தது.

கடைசி பத்து ஆண்டுகளில் அனைத்து உலகிலும் 35 ஆலைகளே அமைக்கப்பட்டன. பொதுவாக நாற்பது ஆண்டுகளே ஆலைகள் இயங்கும் காலம் என்று விஞ்ஞானிகள் கூற்றுப்படி எதிர்காலத்தில் அணுஉலைகளே இல்லாத உலகம் ஆகும் சூழ்லையில், சூரிய வெப்பம், கடல் அலைகள், நீர் அலைகள், வீசும் காற்று, இயற்கை எரிவாயு போன்ற மரபுசாரா துறைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அறிவியல் நாடுகள் முனைந்துள்ள நிலையில், மனித குலத்துக்கு பேரழிவு தரக்கூடிய அணுஉலைகளை தமிழ்நாட்டில் மேலும் மேலும் அமைப்போம் என்றும், அணுஉலை பூங்கா ஏற்படுத்துவோம் என்றும் மத்திய அரசு அறிவிப்பது தமிழ்நாட்டு மக்களின் உயிரோடு விளையாடுகிற விபரீதமான அக்கிரமம் ஆகும்.

எனவே, தென்தமிழ்நாட்டு மக்களின் உயிரைக் காக்கவும், வருங்கால சந்ததிகளைக் காக்கவும் அர்பணிப்பு தியாகத்தோடு இடிந்தகரை களத்தில் பொதுமக்கள் போராடுகிறார்கள். போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் முயல்கின்றன.

வாழும் தலைமுறை, வரப்போகும் தலைமுறைகளைக் காக்கவும், அழிவைத் தடுக்கவும் போராடும் அந்த மக்களுக்கு தமிழகமே நன்றிக் கடன்பட்டுள்ளது. அவர்களது அறப்போருக்கு தாய்த் தமிழகத்து மக்கள் சாதி, மதம், கட்சிகளைக் கடந்து தோள் கொடுத்து துணை நிற்க வேண்டும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கூடங்குளம் அணுஉலையை அகற்ற வேண்டும் என்பதில் மாறாத உறுதியுடன் இப்போராட்டத்திற்கு என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK leader Vaiko has said that both centre and atomic energy officials to take responsibility if anything happen to the people due to the production in KKNPP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X