• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

வாலி மறைவு: வைகோ நேரில் அஞ்சலி

By Mayura Akilan
|

சென்னை: பழம்பெறும் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வாலியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

வாலிபக்கவிஞர் வாலி என்று போற்றப்படும் கவிஞர் வாலி நேற்று மாலை மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையை சார்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும் கவிஞர் வாலியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறைந்த கவிஞர் வாலி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகளும், முன்னணியினரும் இருந்தனர்.

Vaiko's condolence to Vaali's demise

முன்னதாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

சாகாத வரம் பெற்ற இதிகாசக் கவிதைகளை, திரைப்படப் பாடல்களை அமுத மழையாக வழங்கிய கவிதா மேகம் கலைந்து விட்டது. வாலி மறைந்தார் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் இதயம் வலியால் துடித்தது.

1964 ஆம் ஆண்டு, நான் சென்னை மாநகருக்கு வந்த முதல் நாளிலேயே, கவிஞர் வாலியைச் சந்திக்கும் பேறு பெற்றேன். ‘படகோட்டி' திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களை என்னிடம் அவர் காட்டியபோது, மெய்சிலிர்த்து நான் பாராட்டியதையும், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டு, நதிநீர் இணைப்பு, மது ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, திருநெல்வேலியில் இருந்து சென்னை வரையிலும் நான் மேற்கொண்ட மறுமலர்ச்சி நடைபயண நிறைவு விழாவில், தீவுத்திடலுக்கு வந்து, நெடிய வாழ்த்துக் கவிதை வழங்கியதையும் எப்படி மறப்பேன்?

‘தரைமேல் பிறக்க வைத்தான்..., நான் ஆணையிட்டால்...கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' என எண்ணற்ற பாடல்களில், மக்கள் திலகத்தைக் கோடானுகோடி மக்கள் நெஞ்சில் நிறுத்தினார்.‘அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம்' என இதிகாசக் காவியங்களைக் கவிதைகள் ஆக்கித் தந்தார்; பகுத்தறிவாளரும், நாத்திகரும்கூட, அந்தப் பாடலின் சொற்களில் தன்னை மறப்பர்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளை, தமிழ் மண்ணில் அடி எடுத்து வைக்க விடாமல் திருப்பி அனுப்பியபோது, அந்த விமானத்தின் இறக்கைகளும் அழுதன என்று பாடியவர் அன்றோ வாலி! தியாகச் சுடர் செங்கொடிக்குக் கவிதைப் பாமாலை படைத்தார்.

கடைசியாக மரியான் படத்துக்கு எழுதிய பாடல் வரை, இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைத் தந்த வாலியை, தமிழ்க் கவியுலகம் இழந்து விட்டது. கவிமன்னன் வாலியைக் காலன் கொண்டு சென்றாலும், தனது பாடல்களால் அவர் காலத்தை வென்று வாழ்கிறார்.

அவரது மறைவைக் கேட்டுக் கலங்கும் நெஞ்சுடன் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்!

English summary
MDMK chief Vaiko has expressed his sorrow over the death of poet Vaali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X