For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூலிப்படை தொல்லை தாங்க முடியலை.. ஒழித்துக் கட்டுங்கள் அம்மா.. வீரமணி கோரிக்கை

Google Oneindia Tamil News

K Veeramani urges CM to act against murder gangs
சென்னை: தமிழகத்தில் கூலிப்படையினரின் அட்டகாசம் தாங்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதை முதல்வர் ஜெயலலிதா அவசரமாக தலையிட்டு சீர் செய்ய வேண்டியது அவசியம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...

தமிழ்நாட்டில் எல்லாம் விலையேற்றத்தோடு நாளும் இருக்கையில், மிகவும் மலிவாகக் கிடைப்பது கூலிப்படைகள்தான்! கொலை செய்வதற்காக ஆங்காங்கே - (கார்ப்பரேட் கம்பெனிகள்போல்) இயங்கி வருவதாகவும், அவர்களை அழைத்துப் பேசி இப்படிப்பட்ட கொடுமைக்கள் அரங்கேற்ற திட்டமிடப்படுகின்றன என்றும் சாதாரணமான மக்களிடையேகூட பேச்சுக்கள் அடிபடுகின்றன!

கொலைகளும், கொள்ளைச் சம்பவங்களும் அன்றாட அவலங்களாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சீர்கேடாக உள்ளது. இதை மறைப்பதோ, பூசிமெழுகுவதோ கூடாது; சில குற்றங்களைப் பதிவு செய்வதுகூட தவிர்க்கப்படுவதனால், குற்ற எண்ணிக்கையைப் புள்ளி விவர ரீதியாக குறைத்துக்கூட தமிழக அரசு கூறலாம்; ஆனால் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் அறிய மாட்டார்களா?

ஏடுகளை எடுத்தால், தொலைக்காட்சிகளைத் திறந்தால்., அன்றாடம் கொலை, கொள்ளைகள், திருட்டுகள் இவற்றைத் தாண்டி சாலை விபத்துக்கள் இவைதான் செய்திகளாகப் படமெடுத்தாடுகின்றன!

சேலத்தில் ஆடிட்டர்இரமேஷ் என்ற பா.ஜ.க.வின் தமிழகப் பொதுச் செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். இதற்கு மூல காரணம் யார் எது என்று கண்டறியப்படுவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதைவிட முக்கியமாகும். இதற்கு சில வாரங்கள் முன் வேலூரில் இதே கட்சியின் ஒருவரும் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற வேதனைக்குரிய செய்தியும் வெளிவந்தது!

நம்மைப் பொறுத்தவரை, பொது வாழ்வில் உள்ள எவராயினும் கருத்துப் போர் நிகழ்த்தலாமே தவிர, வன்முறை வெறியாட்டங்களிலோ கொலை வெறித்தாக்குதலிலோ ஈடுபடுவது கூடாது! நியாயப்படுத்துவே முடியாது!

அண்ணல் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே நிகழ்வுபற்றிக்கூட, தந்தை பெரியார் அவர்கள் தனி நபர் செயல் அல்ல அது என்ற கூறி, அதன் பின்னே இருக்கிற வெறிக்குரிய காரணம் கண்டறிந்து அதனைப் போக்க, அல்லது தடுக்க வேண்டும் என்று தனது முதிர்ந்த அனுபவத்தால் அறிவுரை வழங்கினார்கள்.

‘பெரியார் தந்த புத்தி'யின் அடிப்படையோடு நாமும் கூறுகிறோம்; கூலிப்படைகளால் கொலைகள் நடைபெறுகின்றன என்னும்போது அவற்றிற்கு மூலவர்கள் யார் என்பது அல்லவா முக்கியம்?

தமிழ்நாட்டில் பல கொலைகளுக்கு ரியல் எஸ்டேட் தகராறுகள், தொழில் போட்டி பொறாமை, தவறான உறவுகள் தங்களைக் காக்க கூலிப்படைகளை ஏவுகணைகளாக்கிக் கொள்ளும் நிலை மலிந்து காணப்படுகிறது!

எல்லாம் ஒரே வகையில் (அதாவது வெட்டிச் சாய்ப்பது தான் பெரும்பான்மையாக உள்ளது) என்கிறபோது, வெறும் அரிவாள்கள் உற்பத்திக்குத் தடை விதித்தால் மட்டும் போதுமா?

கூலிப்படைகளை அடையாளம் காணுவதோடு களையெடுத்து, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றவும் முயற்சிக்க வேண்டாமா தமிழக அரசு?

அரசியல் தலைவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்குவது முக்கியம்தான் என்றாலும், அதைவிட முக்கியம் கூலிப்படைகளையும், அதற்காக முக்கிய தலைமைகள் பற்றிய தகவல் திரட்டி, கூர்மையான நடவடிக்கைகளும் உடனே செய்ய தமிழக அரசின் உள்துறை, குறிப்பாக காவல்துறை முன்வர வேண்டும்.

குற்றங்கள் நிகழ்வுக்குக் காவல்துறை அதிகாரிகள் போதிய பொறுப்பேற்குமாறு ஆணைகளை அரசு வழங்க வேண்டும். எந்த கொலைக் குற்றங்களும் குறிப்பிட்ட கால வரைக்குள் துப்பு துலக்கப்பட்டாக வேண்டும் என்பதை அரசு வற்புறுத்திட வேண்டும்.

தொடர்ந்து பல்வேறு பொறுப்பாளர்களை இழந்து வரும் பா.ஜ.க. கட்சியினருக்கு (நாம் கொள்கை லட்சியங்களில் வேறுபட்டவர்கள் என்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு) மனிதநேயத்தோடு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, மறைந்தவரின் குடும்பத்தினருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதற்றங்களைத் தணிக்க மூல காரணங்கள் கண்டறியும் வண்ணமும், மேலும் இனிமேல் இச்சம்பவங்கள் நிகழாவண்ணமும் எக்கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் உட்பட அனைத்து மக்களது பாதுகாப்பும் உறுதி செய்யப்படல் வேண்டும்!

தமிழக முதல் அமைச்சர் உடனே அவசர அவசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அமைதியை ஏற்படுத்தஆவன செய்ய முன் வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
DK leader K Veeramani has urged the CM to act against murder gangs who are killing political leaders and others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X